பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 5 பிப்ரவரி, 2024

‘க்வோல்’ மனிதர்கள்!!!

'க்வோல்’ என்றொரு உயிரினம்.

ஆஸ்திரேலியாவின் வடக்குக் கடற்கரைப் பக்கமுள்ள ‘க்ரூட் ஐலாண்ட்’ தீவில் இவை வாழ்கின்றன.

ஆஸ்திரேலிய வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்பின் அறிக்கையின்படி, சுமார் 100,000 க்வோல்கள் மட்டுமே உயிர்வாழ்கின்றன. அந்த எண்ணிக்கையும் வேகமாகச் சரிந்துவருகிறதாம்.

‘சன்ஷைன் கோஸ்ட்’ பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் ‘கிறிஸ்டோபர் கிளெமெண்டே’ என்பவருக்கு இவை பற்றி ஆராய்வதில் ஆர்வம் பிறந்தது; ‘குயீன்ஸ்லாந்து’ பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வை[விலங்குகளின் உடலில் டிராக்கர்கள் பொருத்தி] 42 நாட்களில் செய்து முடித்தார்; ஆய்வின் முடிவையும் அறிவித்தார்.

அதில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்கள்;

‘க்வோல்களில் சில ஓர் இரவில் 10 கிலோமீட்டர் தூரத்துக்கும் மேல் பயணித்துள்ளன. சராசரி நடை நீளத்தின் அடிப்படையில் இது மனிதர்கள் கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் நடப்பதற்குச் சமம்’.

ஆண் க்வோல்கள் உடலுறவுக்காக பெண் க்வோல்களைத்[பெண் க்வோல்கள் நான்கு ஆண்டுகள்வரை வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் முடியும்] தேடி, தூக்கத்தையும் மறந்து நீண்ட தூரம் பயணிக்கின்றன. இதனால் தங்களின் உடல்களை முறையாக அவை பராமரிப்பதில்லை.

இதன் காரணமாக, உடல் நலம் குன்றி, குணமடைவது சாத்தியமற்றதாக ஆகிறது; குறைந்த ஆயுளில் இறந்துவிடுகின்றன.


நாம் ஏற்கனவே அறிந்திராத இந்தக் ‘க்வோல்’களில் ஆண் இனம் அளவு கடந்த உடலுறவு இச்சை காரணமாக இறப்பது பற்றியோ, அந்த இனமே அழிந்துகொண்டிருப்பது பற்றியோ நாம் பெரிதாகக் கவலைப்பட ஏதுமில்லை[எல்லாம் கருணை வடிவான கடவுளின் திருவிளையாடல் ஹி...ஹி...ஹி!!!].


நம் கவலையெல்லாம், கடமை, கவுரவம், நாகரிகம், பண்பாடு, எதிர்காலம் என்றிவற்றில் எதையும் பொருட்படுத்தாமல், க்வோல்களை மிஞ்சும் அளவுக்குக் காம வெறியுடன் அலைந்து திரிந்து, தற்கொலை கொலை என்று தாமும் அழிந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் பாவி மனிதர்களை நினைத்தால்தான் மனம் முழுக்க வேதனை பரவுகிறது.


இந்த ‘மனிதக் க்வோல்’களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.


இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து, பொல்லாத காமம் காரணமாக, ஒட்டு மொத்த மனித இனமே விரைவில் பேரழிவைச் சந்திக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

* * * * *