செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

நல்ல தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு நன்றி! ஆனால்.....

//பல்லாவரத்தில் தனக்குச் சொந்தமான நிலத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள கல்லில், சிலர் துணியைச் சுற்றி, சாமி சிலை என்று கூறி வழிபாடு செய்துவருவதாகவும், அந்தக் கல்லை அகற்ற வேண்டும் என்றும் சக்தி முருகன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தபோது, இது உரிமையியல் சார்ந்த பிரச்சினை என்பதால் தலையிட முடியாது என்று அவர்கள்[போலீசார்] கூறினார்களாம்.

இந்நிலையில், தனக்கு நீதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சக்தி முருகன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், சாலையோரத்தில் கல்லை நட்டு, துணியைப் போர்த்தி, பூஜைகள் செய்து அதைச் சாமி என்று நம்பும் அளவுக்கு நாட்டில் மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன” என்று வேதனை தெரிவித்தார்.


அந்தக் கல் சிலையா, இல்லையா என்பதை உரிமையியல் நீதிமன்றம் முடிவு எடுப்பது என்பது சாத்தியமற்றது என்றும், இதற்காக இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிப்பது என்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும் குறிப்பிட்டதோடு, மனுதாரரின் புகாரின் அடிப்படையில் அவருடைய நிலத்துக்கு அருகில் சாலையோரத்தில் நடப்பட்டுள்ள கல்லைப் போலீஸார் ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்// என்பது செய்தி[https://www.hindutamil.in/news/tamilnadu/1194636-superstition-prevails-to-the-extent-of-planting-a-stone-and-calling-it-swami.html].


செய்தியறிந்து நாம் மிக மிக மிக மகிழ்ந்தோம்.


ஆனால், சற்றே சிந்தித்தபோது, ‘பிரமாண்டக் கட்டடத்தில்[கோயில்] கல்லை நட்டு, பட்டுத் துணிகளைச் சுற்றி, விதம் விதமாய்த் தங்க வைர நகைகள் அணிவித்து, மந்திரங்கள் சொல்லி[அவை, கடவுளால் அசரீரியாகச் சொல்லப்பட்டவை என நம்ப வைக்கப்பட்ட பொய்கள்]ப் பூஜைகள் செய்வது மூடநம்பிக்கை. இதற்கும் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தால் நீதிபதி அவர்கள், “மண், உலோகம் போன்றவற்றால் செய்யப்பட்ட இந்தச் சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டும்” என்று சம்பந்தப்பட்ட துறையினருக்கும் காவல்துறையினருக்கும் கட்டளையிடுவாரா?


அறிய இயலவில்லை.


நாம் குறிப்பிட்ட முறையில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் நீதிமன்றங்களில் அங்கம் வகிக்கும் காலம் மலருமேயானால் நம் மகிழ்ச்சி உண்மையானதாக இருக்கும்.


எனவே, மேற்கண்ட வகையில் நீதியரசர் என், ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் அளித்த தீர்ப்பால் நாம் பெற்ற மகிழ்ச்சி தற்காலிகமானது என்பதறிக.