புதன், 7 பிப்ரவரி, 2024

தேவை இன்னும் பல ‘குரு தாத்தா’[திரைப்படம்]க்கள்!!!

கடவுள் நம்பிக்கையோ, மூடநம்பிக்கைச் சாடலோ,  சாதி மத ஒழிப்போ என்றிவை போன்ற எதைப் பற்றியும் எத்தனைதான் வலியுறுத்திப் பேசினாலும் எழுதினாலும்[அவர்கள் மிகச் சிறந்த அறிஞர்களாயினும்] அவற்றிற்கு நம் மக்களிடையே போதிய வரவேற்புக் கிடைப்பதில்லை.

அதே வேளையில், ‘எயிறு நோகாமல் பல் குத்துவது எப்படி?” என்பது போன்ற வெகு அற்ப விசயங்கள் பற்றி, சினிமா பிரபலங்கள் சமூக ஊடகங்களில் எழுதினாலோ, திரைப்படங்களில்  பேசினாலோ அவற்றிற்கு நம் மக்கள் அளிக்கும் வரவேற்பு விவரிப்புக்கு அப்பாற்பட்டது; லட்சக்கணக்கில் அவற்றை ஆதரித்து[லைக்ஸ்]க் கருத்துரை[பின்னூட்டம்]யும் வழங்குவார்கள்.

இந்தித் திணிப்பை எதிர்த்துத் தொடர்ந்து நமமவர்கள் குரல் கொடுத்தும்கூட, அதைப் பொருட்படுத்தாமல், தன் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்துத் துறைகளிலும் இந்தியைத் திணித்துவிட்டது மத்திய அரசு; திணித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்தித் திணிப்பை எதிர்க்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்ற திரைப்படம் ஒன்று வெளியாகவிருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

அந்தத் திரைப்படம் குறித்த தகவல்கள்:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழும் கீர்த்தி சுரேஷ் கடைசியாக 'மாமன்னன்' படத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கொண்டவராக நடித்திருந்தார். இதனையடுத்து, தற்போது இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல் எழுப்புபவராக, 'ரகு தாத்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி, தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினைப் பெற்றுவருகிறது.

இந்த டீசரின் ஆரம்பத்திலே ‘என்சிசி’ தொடர்பான அணிவகுப்பில், நடைமுறை நிகழ்வுகள் குறித்த விளக்கம் இந்தியில் சொல்லப்படுகிறது. அப்போது கீர்த்தி சுரேஷ், “தமிழ்ல்ல சொல்லுங்க. ஒண்ணுமே புரியல” என்று துவக்கத்திலே இந்தி எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்.

அதனைத் தொடர்ந்து, “இந்தியில் எழுதினால்தான் எனக்குப் ப்ரமோஷன் கிடைக்குமா? அப்படின்னா எனக்கு அந்தப் ப்ரோமோஷனே தேவையில்லை” என்று அவர் ஆவேசமாகச் சொல்வதும், கரும்பலகையில் இருக்கும் இந்தியை அழிப்பதும் போன்ற காட்சிகளும் டீசரில் இடம்பெற்றுள்ளன.

இறுதியில் இவற்றையெல்லாம் மீறி, “இந்தி தெரியாது போய்யா” என தமிழ்நாட்டின் டிரெண்டிங்கான டையலாக்கைக் கீர்த்தி சுரேஷ் சொல்வதாக டீசர் முடிவடைந்துள்ளது.

மொத்தத்தில், இந்தித் திணிப்புக்கு எதிராக ஹுயூமர் கலந்து 'ரகு தாத்தா' படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது டீசரிலே உறுதி ஆகியுள்ளது. கீர்த்தி சுரேஷிற்கும் இந்தப் படம் நிச்சயமாகச் சிறப்பான ஒன்றாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ரகு தாத்தா' படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரகு தாத்தா

https://tamil.samayam.com/?back=1