கடவுள் எப்படியிருப்பார் என்பதைக் கண்கள் மட்டுமல்லாமல், பிற புலன்கள் வழியாக அறிய, அல்லது உணரச் செய்தவரும் இல்லை.
கடவுள் உள்ளார் என்று மக்களை நம்பச் செய்வதற்கு மதவாதிகள் கையாண்ட அதி புத்திசாலித்தனமான உத்திதான், கடவுள்கள் மனித உருவில் இம்மண்ணில் நடமாடி அற்புதங்கள் நிகழ்த்தினார்கள் என்பதாகக் கதைகள் கட்டி, அவற்றை மக்களிடையே பரப்புரை செய்தது.
விதம் விதமான கதைகளைக் கற்பித்ததில் முன்னிலை வகிப்பவர்கள் இந்துமதவாதிகள்.
அவற்றைப் பட்டியலிட்டால் அது இலங்கையை எரித்த அனுமார் வால்போல நீண்டுகொண்டே போகும்.
வைணவர்கள் அவர்கள் ‘இருப்பதாக’ நம்பிய கடவுளுக்கு ‘விஷ்ணு’ என்று பெயர் வைத்தார்கள்.
அந்த விஷ்ணுவையும் மக்கள் முழுமையாகப் புரிந்துகொள்வதும் நம்புவதும் சாத்தியம் இல்லாத நிலையில், மனித உருவில் ‘ராமனாக’ அவதரிக்கச் செய்தார்கள். அதாவது, கண்களால் கண்டாலொழிய[மனிதனான ராமன் வடிவில் விஷ்ணு] இந்தப் பொல்லாத மனிதர்கள் விஷ்ணுவைக் கடவுளாக ஏற்கமாட்டார்கள் என்பதால்.
ராமன் என்னும் ஒற்றை அவதாரத்தைக் கற்பனை செய்தது போதாதென்று பல அவதாரங்கள் எடுத்ததாக, கதையளந்தார்கள்[தசாவதாரத்தில் கல்கி அவதாரம் மட்டும் மிச்சமிருக்கிறது].
வைணவர்கள் கையாண்ட உத்தி இதுவென்றால், சைவர்களும் நாங்கள் புளுகுவதில் அவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல், தாங்கள் நம்பிய கடவுளுக்குச் ‘சிவன்’ என்று பெயர் சூட்டி, அவர் இந்த உலகத்துக்கு வந்து திருவிளையாடல்கள் நிகழ்த்தியதாக, மிகு சுவாரசியக் கதைகள் சொல்லி, மக்களை நம்பவைத்து மதம் வளர்த்தார்கள்.
ஏனோ தெரியவில்லை, கிறித்தவ மதத்தவர் ஏசுபிரானை மட்டும் இங்கு நடமாடவிட்டு, அவர் பல அதிசயங்கள் நிகழ்த்தியதாக கதைகள் கற்பித்து மக்களிடையே பரப்பியதில் திருப்தி கண்டுவிட்டார்கள்.
அவதாரங்களெல்லாம் வேண்டாம் என்று எண்ணியதாலோ என்னவோ, எங்கோ நிலைகொண்டிருக்கும் தங்களின் கடவுள் அல்லாஹ் ஆனவர், முகம்மது நபி என்னும் தூதுவரை அனுப்பியதாகக் கதை கற்பித்து, அந்த அளவில் மனநிறைவு பெற்றுவிட்டார்கள் இஸ்லாமியர்கள்.
மக்களே,
அன்புகொண்டு, கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்துக் கீழ்வரும் கேள்விக்குப் பதில் தேட முயலுங்கள்.
“கடவுள்கள் மனிதர்களாக அவதரித்து, மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்து, பல அதிசயங்களை நிகழ்த்தி, அவர்களைப் புனிதர்களாக மாற்றினார்கள் என்பதான கதைகள் கற்பிக்கப்படாமல் இருந்திருந்தால், மனிதர்களில் மிகப் பெரும்பாலோர் பக்திப் பித்தர்களாக அலைந்து திரிவது நிகழ்ந்திருக்குமா?!
* * * * *
மிக முக்கிய அறிவிப்பு!
வழக்கம்போல, இம்மாதிரியான பதிவுகள் எழுதுவதன் நோக்கம், மக்களை, குறிப்பாக மதப் பற்றாளர்களைச் சிந்திக்கத் தூண்டுவதே தவிர, அவர்களில் எவர் மனதையும் புண்படுத்துவதல்ல.