கீழ்வரும் படத்தைப் பார்த்தவுடனே, நடந்த நிகழ்வைப் புரிந்துகொள்ளலாம்.
பெண்கள், இறந்தவரின் உடலைச் சுமந்து சுடுகாடு[இடுகாடு]வரை செல்வதும், அதை அவர்களே தகனம் செய்வதுமான நிகழ்வுகள் அரிதாகத்தான் தமிழ்நாட்டில்[பிற மாநிலங்களில் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை] இடம்பெற்றுள்ளன.
ஓர் உயிரிழப்பு என்பது மிகத் துக்ககரமானது என்றாலும், தவிர்க்க இயலாத அதற்கான சவ அடக்கத்தைப் பெண்களே முன் நின்று நடத்தியிருப்பது[பவானி அருகே] மிகவும் பெருமிதம் கொள்ளத்தக்க, புரட்சிகர நடவடிக்கை ஆகும்.
இவ்வழக்கம் தொடர்ந்து பின்பற்றப்படுவது மிக அவசியம்.
பெண்களுக்கான உரிமைகள் மீட்கப்பட வேண்டிய அதே நேரத்தில், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது மிக மிக முக்கியம்.
சிறுமிகள் முதல் கிழவிகள்வரை, கயவர்களால் கடத்தப்பட்டு வன்புணர்வு செய்வதென்பது ஏறத்தாழ அன்றாட நிகழ்வுகளாக ஆகிவிட்டன.
பொது மக்களின் ஒத்துழைப்புடன் இவற்றைத் தடுத்து நிறுத்துவது அரசின் தலையாய கடமை ஆகும்.
இக்கடமையைச் செவ்வனே செய்துமுடிக்க அரசுக்கு நாம் வழங்கும் முக்கியப் பரிந்துரைகள்:
*பள்ளிகளில், முதல் பாடவேளையில், வன்புணர்வு உட்பட மிக முக்கிய நாட்டு நடப்புகள் குறித்த செய்திகளை ஆசிரியர்கள் சுருக்கமாகவேனும் பிள்ளைகளிடம் சொல்லி விழிப்புணர்வூட்டலாம்.
*இது அரசாணை மூலம் கட்டாயக் கடமை ஆக்கப்படுதல் அவசியம்.
*வீடுதோறும், செய்தித்தாள்[ஏழைகளாயினும் ஏழெட்டு ரூபாய்கள் செலவிடுவது இயலாத ஒன்றல்ல] வாங்குவதோடு, பிள்ளைகள் வீட்டுப் பாடங்களைச் செய்வதற்கு முன்பே மேலோட்டமாகவேனும்[குறிப்பாக வன்புணர்வுச் செய்திகள்] செய்திகளை வாசிக்கப் பழக்கப்படுத்தலாம்.
*ஊர்தோறும் இளம் வயதுப் பிள்ளைகளுக்கான, தற்காப்புக் கலையைக் கற்றுத்தருவதும் மிக முக்கிய சமூதாயக் கடமை ஆகும். தேவையான அளவுக்குப் பயிற்சி நிலையங்களை உருவாக்குதல் வேண்டும்.
*சமூக ஆர்வலர்கள் அடங்கிய அறிஞர் குழுக்களின் மூலம், மேலும் பல ஆலோசனைகளைப் பெற்றிட அரசு விரைந்து செயல்படுதல் உடனடித் தேவையாகும்.
தவறினால்.....
சூதுவாது தெரியாத குழந்தைகளை[மற்ற வயதினரையும்தான்]க் கடத்தி வன்புணர்வு செய்து, வதைத்துச் சீரழித்துக் கொன்று சாக்கடைகளிலும், ஊரின் ஒதுக்குப்புறங்களிலும் வீசுவது தொடரும்.
“அய்யய்யோ, என்ன கொடுமைங்க இது. இதைச் செய்த கயவாலிகளை அடித்தே கொல்லணும்; தூக்கிலிடணும். கடவுள் இவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டார்” என்றெல்லாம் நம்மவர்கள் ஒப்பாரி வைத்துப் புலம்புவதும், போராட்டங்கள் நடத்துவதும்கூட வாடிக்கை ஆகிவிடும்.