இந்தியத் தேர்தல் ஆணையம் நம் நாட்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்திருப்பது யாவரும் அறிந்ததே.
கூடவே, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அது குறித்து ஊடகங்கள் வழியாக 3 முறை மக்களுக்குத் தகவல் வெளியிட வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுறுத்தலின் மூலம், வேட்பாளர்களில், குற்றம்[கொலை, படுகொலை, ஆள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை, கைகால்களை முறித்து முடமாக்குதல், வன்புணர்வு என்று பலவும் அடங்கும்], புரிந்தவர்களும் இடம்பெற்றிருப்பார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
குற்றம் புரிந்த அவர்கள், தேர்தலுக்கு முன்பாகத் தாங்கள் புரிந்துள்ள குற்றங்களைப் பட்டியலிடுதல் வேண்டும்[குற்றம் புரிந்ததற்கான ‘பின்னணி’யையும் அறிவிக்க வேண்டுமாம்] என்கிறது ஆணையம்.
குற்றம் புரியாத அரசியல்வாதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
குற்றம் புரிந்த எவரும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. அப்புறம் எப்படி, குற்றவாளிகளான வேட்பாளர்கள் அது குறித்து அறிவிப்பார்கள் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது? தேர்தல் நடப்பதற்கு முன்னால் காவல்துறை மூலம் பலனாய்வு செய்வது சாத்தியமா?
குற்றம் நிகழ்த்திய வேட்பாளர்களில் கூமுட்டைகள் இருந்தால், செய்த குற்றங்களை அறிவிப்பார்கள். அப்படி எவரும் இருக்க வாய்ப்பே இல்லை.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டாலும், அதற்கான பின்னணியையும் விளக்க வேண்டுமாம்[விளக்கம் தந்துவிட்டால் அவர்கள் குற்றமற்றவர்களாக ஆவார்களா?].
ஆணையத்தின் இந்த அறிவுறுத்தல் எதற்காக என்றால், இதன் மூலம் வாக்காளர்கள் வேட்பாளர் செய்த குற்றத்திற்கான பின்னணியை முழுமையாக அறிந்துகொண்டு வாக்களிப்பார்கள் என்கிறது ஆணையம்[தினத்தந்தி].
அறிந்துகொள்வதன் பயன் என்ன?
செய்த குற்றத்திற்கேற்ப, அவருக்கு ஓட்டுப் போடுவதா, வேண்டாமா என்பதையும், ஓட்டுக்கு எவ்வளவு பணம் கேட்பது என்பதையும் வாக்காளர்கள் முடிவு செய்வதற்கா?
பத்து ரூபாய் திருடியவன் குற்றவாளி என்றால், பத்துக்கோடி திருடியவனும் குற்றவாளிதான். இவன் வயிற்றுப் பாட்டுக்குத் திருடுகிறான் என்றால், அவன் ஆடம்பர வாழ்க்கைகாகக் கொள்ளையடிக்கிறான்.
பின்னணி எதுவாயினும் குற்றம் குற்றம்தான்.
சின்னக் குற்றமோ பெரிய குற்றமோ, குற்றம் புரிந்தவன் எவனாயினும் அவனின் வேட்பு மனுவை ஆணையம் நிராகரிக்க வேண்டும்.
அதற்கான ‘தில்’ ஆணையத்திற்கு இல்லாமல்போனது ஏன்?
ஒவ்வொரு வேட்பாளனைப் பற்றியும் தோண்டித் துருவி ஆராய்ந்தால், தேர்தல்களில் போட்டியிடுவோரில் மிகப் பெரும்பாலோர்[அதிகாரம், பணபலம் போன்றவற்றின் மூலம் தண்டனை பெறாமல் தப்பிவிடும் அயோக்கியர்கள் நீங்கலாக] தகுதி இழப்பார்கள் என்றும், இந்தப் புண்ணியப் பூமியில் இருக்கும் கொஞ்சம் யோக்கியர்களும் தேர்தல்களில் போட்டியிட முன்வரமாட்டார்கள் என்றும் தேர்தல் ஆணையம் நம்புகிறதா?
“ஆம்” என்றால், இந்தப் புண்ணியப் ‘பாரத்’தைப் பிரதமர் மோடியால் பிரபலப்படுத்தப்பட்ட ‘பாலராமன்’தான் காப்பாற்ற வேண்டும்!
* * * * *