மூடநம்பிக்கை வளர்ப்பில், கடவுளை நம்புகிற அனைத்து மதங்களுக்கும் பங்குண்டு. இவ்வகையில், “இவை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.”
கடவுளின் ‘இருப்பு’ குறித்த ஆய்வு, நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து நடைபெறுகின்ற ஒன்று; இன்றளவும் முற்றுப்பெறாதது.
மதவாதிகள், கடவுள் உண்டு என்பதற்கான அனுமானங்களை விரித்துரைக்கிறார்களே தவிர, முற்றிலும் ஏற்கத்தக்க ஆதாரங்களை முன்வைத்தாரில்லை.
இந்த லட்சணத்தில், இவர்களின் மூதாதையரில் சிலரோ பலரோ எழுதி வைத்த நூல்களைப் புனிதமானவை என்றும், அவை கடவுளால் அருளப்பட்டவை என்றும் தொடர்ந்து பரப்புரை செய்துவருகிறார்கள்.
'வேதம்[Bible] மனிதர்களால் எழுதப்பட்டதல்ல; புனிதமான அது கடவுள் மொழிந்தது’ என்பது கிறித்தவர்களின் நீண்ட நெடுங்கால நம்பிக்கை. ‘.....the long standing belief by many Christians that the Bible is the pure, unadulterated word of God untouched by human hand.’[wikkipeadia]
இஸ்லாமியர்களும் இதையேதான் சொல்லுகிறார்கள்
‘குரான் அல்லது திருக்குரான் (குர்-ஆன் அரபி: القرآن அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.’ -Wikkipeadia.
‘வேதங்கள் கடவுளால் வெளியிடப்பட்டவை’ என்றே இந்துமதவாதிகளும் சொல்கிறார்கள். கடவுள் நேரடியாகச் சொல்லக் கேட்டு எழுதியதாம். [They are supposed to have been directly revealed, and thus are called śruti ("what is heard").]
கேட்டு எழுதிய மகான் ‘வியாசர்’ என்கிறார்கள்.
கடவுளை நம்புகிற எல்லோருமே இந்த மதவாதிகளின் கட்டுக்கதைகளை நம்புவது சாத்தியமில்லை என்பதால், பெரும்பாலோர் நம்புகிறார்கள் என்று முடிவெடுப்பதில் தவறேதுமில்லை எனலாம்.
“வேதம் கடவுளால் அருளப்பட்டது” என்று மதவாதிகள் கூறுவதை நம்மால் மறுக்க முடியுமா?
முடியும்.
இதற்கென ஆதாரங்களைத் தேடி அலைய வேண்டியதில்லை; ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதும் இல்லை. மிக எளிய ஓரிரு கருத்துக்களை முன்வைத்தலே போதுமானது.
கடவுளைப் போற்றுபவர்கள், அவர் கருணை வடிவானவர் என்பதில் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
மதநூல்கள் கடவுளின் அருட்கொடை என்பது உண்மையாயின், அனைத்து உயிர்களின் மீதான நேசத்தை அவை வற்புறுத்துமே தவிர, உயிர்வதையை எவ்வகையிலும் அனுமதிக்க மாட்டா.
ஆனால், புனிதமானவை என்று போற்றப்படும் ‘மதநூல்கள்’ என்ன சொல்கின்றன?
கிறித்தவர்களின் வேதமான ‘பைபிள்’ மாமிசம் உண்பதை அனுமதிக்கிறது. அதிச்சியடையாமல் பின்வரும் வாசகங்களைப் படியுங்கள்.
“உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக் கனியான உன் குழந்தைகளின் மாமிசத்தைத் தின்பாய்”[உபாகமம், 28:53].
“நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாமிசத்தையும் குமாரத்திகளின் மாமிசத்தையும் தின்னச் செய்வேன். அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாமிசத்தைத் தின்பான்”[எரேமியா, 19.9].
இம்மாதிரியான இன்னும் பல வாசகங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன[‘மதமும் பகுத்தறிவும்’, மலையாளத்திலிருந்து தமிழில் த.அமலா. சூலூர் வெளியீட்டகம், கோவை. முதல் பதிப்பு: ஜூலை 2004].
ரிக் வேதத்தில் சித்திரிக்கப்பட முக்கியமான ஐந்து யாகங்களில் ‘நரமேதம்’ ஒன்று. ஆண்மகனைக் கொன்று தீயில் சுட்டெடுத்து உண்கின்ற வழக்கத்தைக் குறிக்கிறது அது. இப்படி இன்னும் எத்தனையோ குலை நடுங்க வைக்கும் தகவல்கள்!
பெரு வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு[ஊழி வெள்ளம்] ‘நோவா’தான் முதல் யாக பீடத்தை[பலிபீடம்]க் கட்டியதாக பைபிள் கூறுகிறது.
“அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல விலங்குகளிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின் மேல் பலியிட்டான்” [ஆதியாகமம், 8.20].
இதைத் தனக்கே உரிய விளக்கங்களுடன் குர் ஆனும் அங்கீகரிக்கிறது.
“எல்லாச் சமுதாயங்களுக்கும் நாம் பலியை நிச்சயித்திருக்கிறோம்”[குர் ஆன், 22:34]
ஆக, உயிர்வதை பற்றிய இந்த ஆதாரங்கள் மட்டுமே, மத நூல்கள் கடவுளால் அருளப்பட்டவை அல்ல; மனிதர்களால் உருவாக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இந்த நிலவுலகம் பற்றி மத நூல்களில் பதிவு செய்யப்பட்ட கற்பனைக் கதைகளை நீங்கள் அறிந்திருக்கவும் கூடும். அவை பின்வருமாறு:
பூமியிடமிருந்து ஆகாயத்தைப் பிரித்து மேலே உயர்த்தியவன் வருணன் என்கிறது ரிக் வேதம். [பூமியும் ஆகாயமும் முன்னொரு காலத்தில் ஒட்டி உறவாடிக்கொண்டிருந்தன; அவை உடலுறவு கொண்டதன் விளைவாய் உயிர்கள் தோன்றின என்றெல்லாம் மதவாதிகள் நம்பினார்கள்].
பைபிளில் உள்ள ஆதியாகமும் இதையே சொல்கிறது:
“பின்பு தேவன், நீரின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும், அது நீரினின்றும் நீரைப் பிரிக்கக் கடவது என்றும் சொன்னார்; ஆகாய விரிவுக்கு வானம் என்று பெயரிட்டார்.”
குர் ஆன் என்ன சொல்கிறது?
“ஆகாயமும் பூமியும்[அவற்றைப் படைத்த ஆதி நாளில்] ஒன்றுக்கொன்று ஒட்டிச் சேர்ந்தே நின்றன. பின்னர் அவை பிரிக்கப்பட்டன.”
மேற்கண்ட கதைகள், அன்றைய மதவாதிகளின் அறியாமைக்குச் சான்று பகர்கின்றன.
ஆக, மத நூல்களைக் கடவுள் அருளினார் எனப் பகர்வதையும், பறை சாற்றுவதையும் அறிஞருலகம் ஒருபோதும் ஏற்காது.