அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 19 மார்ச், 2024

“எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கிவிட்டது”! மார்க்கண்டேயன் மோடி வாழ்க!!


சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் இன்று பாஜக பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று 1 மணியளவில் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேச ஆரம்பிக்கையில், பாரத் மாதா கி ஜே... பாரத் மாதா கி ஜே...” என்று பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பினார்கள்.

மோடியோ, பாரத அன்னை வாழ்க[என்னுடைய தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்]” என்று தமிழன்னையை வாழ்த்தித் தன் பேச்சைத் தொடங்கியிருக்கிறார்.


தமிழன்னைக்கு மோடி செலுத்திய இந்த மரியாதையை அவரின் அடிப்பொடிகள் செலுத்தத் தவறியது எப்படி?


இத்தனைக் காலமும், மோடி போன்ற ‘இந்தி’ய ‘பாஜக’ தலைவர்களும், இங்குள்ள கொத்தடிமைகளும், அவர்களிடையே பேசும்போதெல்லாம், “பாரத் மாதா கி ஜே” என்று சொல்லிச் சொல்லி அதை அவர்களின் நாடி நரம்புகளிலெல்லாம் ஊடுருவி அழுத்தமாகப் பதியும்படி செய்திவிட்டார்கள் என்பதுதான் காரணம்.


அதன் விளைவுதான், இன்றைய அவர்களின், “பாரத் மாதா கி ஜே” என்னும் முழக்கம் கோஷம்.


பாவம் அவர்கள்! தங்களின் தலைவர், “தமிழன்னை வாழ்க” என்று பேச்சைத் தொடங்கவிருப்பதை அண்ணாமலையார் போன்ற தமிழ் மண்ணின் மைந்தர்கள் முன்கூட்டியே சொல்லியிருந்தால் அவர்களும் தமிழன்னையை நினைவுகூர்ந்து வாழ்த்தியிருப்பார்கள்.


எது எப்படியோ, மோடியின் வாயால் வாழ்த்துப்பெறும் பேறு தமிழன்னைக்குக் கிடைத்துவிட்டது.


இனி சமஸ்கிருதத்திற்கும் இந்திக்கும் செலவிடுவது போல், கோடி கோடி கோடியாய்த் தனக்கும் செலவிடுவார் என்று நம்பி, அவரின் பெருந்தன்மையை எண்ணி எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடிப்பார் தமிழன்னை.


அந்தக் கண்ணீர் தமிழ்நாடெங்கும் பெரு வெள்ளமாய்ப் பரவி வழிந்தோடும்.


தமிழ் மக்களும் நெஞ்சம் நெகிழ்ந்தவர்களாக, மோடியின் ‘பாஜக’ வேட்பாளர்களுக்கே வாக்களிப்பார்கள்.

இந்து மதத்தை அழிக்க நினைத்தவர்கள்[கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட ‘தி.மு.க.’ உட்பட] அழிந்துபோய் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கி இருக்கிறது” என்று அவர் சாபம் கொடுத்தது போலவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் அழிந்தொழிய, மார்க்கண்டேயன் போல என்றும் பதினாறு அகவையராக இந்தப் பாரத தேசத்தைப் பரிபாலனம் செய்து மக்களனைவரையும் சுபிட்சம் பெறச் செய்வார் நரேந்திர மோடி! 


                                   *   *   *   *   *


https://tamil.oneindia.com/news/salem/india-alliance-which-criticizes-hinduism-is-not-criticizing-any-other-religion-pm-modi-592055.html