சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளும், பெண்ணடிமைத்தனமும், அளவிறந்த மூடநம்பிக்கைகளும் விஷக்கிருமிகளாகப் பரவி நிலைகொள்ளக் காரணமான சனாதன தர்மத்தைக் கடுமையாகச் சாடி, சமூக ஆர்வலர்களின் கூட்டமொன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார் என்பது பலரும் அறிந்ததே.
சனாதன தர்மத்தைச் சுமந்து திரிபவர்களால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்பதோடு, சில மாநிலங்களைச் சேர்ந்த சனாதனிகள் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தார்கள் என்பதும் அறியப்பட்ட நிவுழ்வுகள்தான்.
இவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, “கருத்துரிமை, மதச் சுதந்திரத்திற்கான உரிமை ஆகியவற்றை உதயநிதி தவறாகப் பயன்படுத்திவிட்டார்” என்று சொல்லியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
உதயநிதி தவறாகப் பயன்படுத்திவிட்டார் என்று சொல்வதற்கு முன்னால், கருத்துரிமையையும், மதச் சுதந்திரத்தையும் பயன்படுத்தி மதவாதிகள், குறிப்பாக, தங்களைக் கடவுளின் பிரதிநிதிகள் என்று சொல்லி அலையும் சாமியார்கள், தங்களின் அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள என்னவெல்லாம் அட்டூழியங்கள் செய்தார்கள் என்பதைப் பற்றி விசாரித்து அறிந்திருந்தால் நீதிபதிகள் பெரும் பாராட்டைப் பெற்றிருப்பார்கள்.
அறிந்திருந்தால், உதயநிதி கருத்துரிமையையும், மதச் சுதந்திர உரிமையையும் மீறிவிட்டதாகக் கண்டித்திருக்கமாட்டார்கள்.
நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டும் சட்டங்களின்படி, உதயநிதி தவறுகள் செய்திருந்தாலும், உரிய விசாரணைக்குப் பிறகு அவர் செய்த குற்றத்திற்கான தண்டனையை அவர்கள் அறிவிக்கலாம்.
இதற்கு மாறாக, விசாரணயின் ஆரம்பக் கட்டத்திலேயே, உதயநிதி தவறு செய்துவிட்டார் என்று அறிவித்திருப்பது எவ்வகையில் நியாயம் என்பது புரியவில்லை.
மிக மிக எச்சரிக்கையாக நடுநிலையுடன் செயல்பட வேண்டிய நீதியரசர்கள் அவசரகதியில், சனாதனத்தை ஆதரிப்பது போல்[?] பேசியிருப்பது சரியா?
மக்களுக்கான நீதிமன்றங்களில் நீதிபதிகள் தங்களின் சுய விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தலாமா?
இந்தக் கேள்விகளுக்கான விளக்கங்களைத் தரும் உரிமை, அல்லது அதிகாரம் நீதிபதிகளுக்கு மட்டுமே உள்ளது என்பதால் வேறு எவரொருவரின் தலையீடும்[தலையிட்டால் தண்டிக்கப்படுவார்கள்] அவசியமற்றதாகும்.