அவள் ‘ரேட்’ ரூ500. அவன் கொடுத்தது?
“பரசு, ஐம்பதாயிரம் கடன் கொடுடா” என்றான் நண்பன் அழகப்பன்.
“கைவசம் ஐநூறுதான் இருக்கு.”
“நேத்துச் சம்பளம் வாங்கியிருப்பியே?”
“சம்பளம் வாங்கின கையோடு மேட்டுத்தெரு சரசுவைத் தேடிப் போனேன். படுக்கச் சொன்னேன். ‘இந்தத் தெருவில் நான் மட்டும்தான் தொழில் பண்ணினேன். இப்போ நாலஞ்சி குமரிங்க கடை விரிச்சிட்டாளுக. நடுத்தர வயசைத் தொட்டுட்டேன். வருமானமே இல்ல. அரை வயித்துக்கும் கால் வயித்துக்கும் போராடுறேன். இன்னிக்கி இன்னும் சாப்பிடலே. ரூபா கொடுங்க’ன்னு கண் கலங்கச் சொன்னாள்.
குறுக்கிட்ட அழகப்பன், “ரூபாய் ஐநூறு கொடுத்திருப்பே. அதுதானே அவள் ரேட்” என்றான்.
“பணத்துக்குப் படுக்கிறவளா இருந்தாலும் சரசு ரொம்பவே நல்லவள். அவள் பரிதாப நிலை என்னை ரொம்பவே பாதிச்சுது. ஒரு பெட்டிக்கடை வைச்சுப் பிழைச்சுக்கோ”ன்னு சொல்லி என் சம்பளம் ரூபாய் ஐம்பதாயிரத்தையும் அவளுக்குக் கொடுத்துட்டு வந்துட்டேன்” -முகம் முழுக்கப் பரவசம் பரவச் சொன்னான் பரசுராமன்.
“இனி சரசு இந்த அசிங்கத் தொழிலை விட்டுடுவாள். நீயும் கல்யாணம் பண்ணிட்டு ஒழுங்கா குடும்பம் நடத்து” என்றான் அழகப்பன்.