“தமிழ்நாட்டு விமான நிலையங்களில்[சென்னை > சேலம், கோவை > சென்னை, சென்னை > மதுரை போல் தமிழ்நாட்டுக்குள் பறப்பவை] அறிவிப்புகளை ஏன் தமிழில் வெளியிடக்கூடாது?” என்பது உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வி[ஊடகங்கள் பலவற்றிலும் வெளியான செய்தி இது].
விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கும் நடுவணரசு, இதற்குப் பதில் தருமா? “ஆம்” என்றால் எப்போது என்பது நமக்குத் தெரியாது.
இந்தப் புண்ணியப் பூமியின் உண்மைக் குடிமகன் என்ற வகையில் நம் பதில்[கள்]: இந்தியா ‘இந்தி’ நாடு. மோடி அரசின் மொழிக்கொள்கைப்படி[ஒரே நாடு ஒரே மொழி] அனைத்துத் துறைகளிலும் இந்தியின் ஆதிக்கமே நீடிக்க வேண்டும் என்பது முக்கியக் காரணம்.
பிற காரணங்கள்:
*தமிழை ஆஹா.. ஓஹோ என்றெல்லாம் வாய் கிழியப் புகழ்ந்தாலும், அவரின் உள்நோக்கம், 'அது வளர்ந்தால் தன் கட்சியை எப்போதுமே ஆதரிக்காத தமிழர்களுக்குப் பெருமை சேரும். அது கூடாது. அவர்கள் சிறுமைப்படுத்துதலுக்கு உரியவர்கள்'.
*தமிழர்கள் சூடு சொரணை இல்லாதவர்கள். விமான அறிவிப்பு தமிழில் இல்லாதது குறித்து அவர்கள் வெகுண்டெழுந்து போராடியதில்லை.
*தமிழர்கள் போராடினாலும் அதற்குத் தலைமை தாங்குபவர்களைக் காட்டிக்கொடுப்பதற்கென்று மோடியின் கொத்தடிமைக் கூட்டம் இங்கு இருக்கிறது; இனியும் இருந்துகொண்டிருக்கும்.
*“தமிழ் வாழ்க! தமிழ் வளர்க” என்று மேடை ஏறிக் கூச்சல் போடுபவர்களில் பலருக்கும் தமிழ்ப் பற்று இல்லை. தாய் மொழி இழிவுபடுத்தப்படுவதை வேடிக்கை பார்ப்பவர்கள் அவர்கள்.
மேற்கண்டவை தவிர வேறு காரணங்கள் இருப்பினும் இவை போதுமானவை என்பது நம் எண்ணம்.
நீதியரசரின் கேள்விக்குப் பதில் தரும் பொறுப்பு நடுவணரசுக்கு இருக்க, வெகு சாமானியனாக நாம் பதிலளித்திருப்பது தவறு என்றால், நீதியரசர் பொறுத்தருள்வாராக.