வியாழன், 29 ஆகஸ்ட், 2024

தமிழ்நாடு அரசே திருந்து! மூடர்களுக்குத் துணைபோகாதே!!

காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற கோயில்களுக்கான ஒரு நாள் ஆன்மீகச் சுற்றுலாவை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்த விவரம் கீழே உள்ள நகல் பதிவில்.

ஜோதிடம், சொர்க்கம்-நரகம் மீதான நம்பிக்கை, மறுபிறப்பு, ‘பிறப்பு-இறப்பு’ நிகழ்வுகளின்போது செய்யப்படும் அர்த்தமற்ற சடங்குகள், கோயில்களில் உள்ள சிலைகளுக்குச் செய்யப்படும் அலங்காரங்கள், எடுக்கப்படும் விழாக்கள் போன்ற எண்ணற்ற மூடநம்பிக்கைகளுக்கு மூல காரணமாக இருப்பது ‘கடவுள் நம்பிக்கை’தான்.

மூடநம்பிக்கைகளுடன் கடவுள் நம்பிக்கையையும் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் குறைக்க முயல்வது தமிழ்நாடு(நடுவணரசும்தான்) அரசின் கடமையாகும்.

அந்தக் கடமையை முறையாகச் செய்யத் தவறிய அரசு, முனைப்புடன் மேற்கண்ட மூடநம்பிக்கைகளைப் பேணி வளர்ப்பதில் நாட்டம் கொண்டுள்ளது என்பதற்கு, அது திட்டமிட்டுள்ள ஆன்மிகச் சுற்றுலாவும்[நகல் பதிவு காண்க] ஓர் எடுத்துக்காட்டாகும்.

உடனடியாக இத்திட்டத்தை ரத்து செய்வதோடு[இயற்கை அழகு செறிந்த இடங்களுக்குச் சுற்றுலாச் செல்வது வரவேற்கத்தக்கது] நாட்டிலுள்ள அனாதை இல்லங்கள், மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகங்கள், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள், தீராத நோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குக் மக்களைக் குறைந்த கட்டணத்தில், அல்லது இலவசமாக அழைத்துச் சென்று காண்பித்தால், அவர்களின் மனம் பக்குவப்படும்; மனிதாபிமானம் வளரும்.

அரசு இதை செய்யத் தவறுமேயானால்.....

“நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் தவிர்ப்பீர்[ஓம்புமின்]” என்னும் சான்றோர் வாக்கை[புறநானூறு] நினைவுபடுத்த நேரிடும்.