//கோவிலில் பூஜைகளின் போதும் சரி, வீட்டில் பூஜை செய்தாலும் சரி சுவாமிக்கு நைவேத்தியம்[படையல்] வைத்துத்தான் வழிபட வேண்டும் என்கின்றன இந்து சாஸ்திரங்கள். நாம் எதை உணவாக உண்கிறோமோ அதையே கடவுளுக்கும் படைப்பது பக்தி யோகத்தின் ஒரு அங்கமாக உள்ளது[“நீ எதைச் செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, அதை நீ எனக்குக் காணிக்கையாக கொடு” என்கிறாராம் கிருஷ்ண பரமாத்மா]//*
கடவுள்[இருந்தால்] வழிபாடு என்பது முழுக்க முழுக்க மனம் சம்பந்தப்பட்டது.
வழிபட்டால் அவர் அருளால் துன்பங்கள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, மனத்தளவில் கடவுளை வழிபடுவதே போதுமானது.
உணவு உண்பது என்பது மனிதர்கள் தம் உடலைப் பேணி வளர்ப்பதற்காக.
“நீ எதை உண்கிறாயோ அதை எனக்குக் காணிக்கையாகக் கொடு” என்கிறார் ஒரு கடவுள்[காணிக்கை, பிரசாதம் என்று கதை அளந்தவர்களிடம் அசரீரியாக மற்றக் கடவுள்களும் சொல்லியிருக்கக்கூடும்]. .
அது[உணவு] காணிக்கை ஆக்கப்பட்டதன்[படையல் இடப்பட்டதன்] பயன் என்ன?
என்றோ ஒரு காலக்கட்டத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த சில அயோக்கியர்கள் கட்டிவிட்ட இம்மாதிரிக் கதைகளை, இந்த அறிவியல் யுகத்திலும் நம் மக்கள் நம்புவது எத்தனை முட்டாள்தனம்?
படையலுக்கான உணவைச் சமைப்பவர்கள் மனிதர்கள். அதைச் சாமிகளின் முன்னால் வைத்து மணியடித்து, பிரசாதம் என்னும் பெயரில் தொட்டுக் கொடுப்பவர்களும் மனிதர்கள். அதைப் பயபக்தியுடன் பெற்றுக்கொள்பவர்களும் மனிதர்களே.
என்ன நோக்கத்தில் சாமிகளுக்குப் படைக்கிறார்கள்?
படைப்பதால், அந்த உணவில் ஏதேனும் நச்சு உயிரினங்கள் கலந்திருந்தால் அவை அழிந்து, படைக்கப்பட்ட உணவு முழுத் தூய்மை பெற்றுவிடுமா?
“ஆம்” என்றால்.....
உண்டவுடன் உயிர் பறிக்கும் நஞ்சு கலந்த உண்வை ஏதேனும் ஒரு சக்தியுள்ள சாமிக்குப் படையலாக்கி, வழக்கமான சடங்குகளை முடித்து, படையலை மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்கி, அதிலிருந்த விஷம் முற்றிலுமாய் அகன்றுவிட்டதை நிரூபிப்பார்களா, காலங்காலமாய்க் கடவுள்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் பரம்பரைப் பொய்யர்கள்?
இந்தக் கேள்வியை நாம் மட்டும் கேட்டால் போதாது, அறிவுள்ள மனிதர்கள் அத்தனை பேரும் கேட்க வேண்டும்.
கேட்பார்களா? எப்போது?
* * * * *
* ஒரு தினசரியின்’ஆன்மிகம்’ இணைப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக