போப் பிரான்சிஸ் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா, கிழக்கு தைமூர், பப்புவா நியூ கினியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 11 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அவர் ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகையில், அதிபர் ஜோகோ விடோடோவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சுற்றுப் பயணத்தின் 3-ஆவது நாளில் ஜகார்த்தாவில் உள்ளதும், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரியதுமான இஸ்திக்லால் மசூதிக்குச் சென்றார். அங்கு மசூதியின் இமாம் ஆன நசுருதீன் உமர் போப் பிரான்சிஸை வரவேற்றார்.
இந்த நிகழ்வில் பேசிய போப் பிரான்சிஸ் “நாம் அனைவரும் சகோதரர்கள், யாத்ரீகர்கள். அனைவரும் கடவுளை நோக்கிச் செல்லும் வழியில், வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும். போர்கள் போன்ற மனிதகுலத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொறுப்பை நாம் ஏற்கவேண்டும்” என்றார்.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேசியாவுக்குப் போப் ஆண்டவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டது 35 ஆண்டுகளில் முதன் முறையாகும். இதனால் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக இது கருதப்படுகிறது.
“நாம் கடவுளை நோக்கிப் பயணிக்கும் யாத்ரீகர்கள்”[மண்ணில் பிறந்து வாழும் நாம் மரணத்தை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதுதானே உண்மை?] என்று அவர் குறிப்பிட்டது நம் உள்மனதில் உறுத்தலை ஏற்படுத்தினாலும், புத்த மதம், இஸ்லாம், இந்து மதம், கத்தோலிக்க மதம், புரோட்டஸ்டன்ட் மதம், கன்ஃபூசிய மதம் என, உலகின் முன்னணி மதங்களின் தலைவர்கள் ஒருங்கிணைந்து அவரை வரவேற்றது உலகம் கண்டிராத அதிசய நிகழ்வாகும்.
இந்த அதிசயத்தை நிகழ்த்தி, மத இணக்கத்திற்கு வழிகோலிய பாதிரியார் பிரான்சிஸ் அவர்களை மனதாரப் போற்றுகிறோம்!
வாழ்க பாதிரியார்! வளர்க மத நல்லிணக்கம்!!
* * * * *