செவ்வாய், 12 நவம்பர், 2024

ஆங்கிலத்தில்[நாடாளுமன்றத்தில்] கேள்வி கேட்டால் அடி உதை!?!?!

ஊடகச் செய்தியின்படி, ஆங்கிலத்திலோ பிற இந்திய மொழிகளிலோ கேள்விகள் கேட்டால் இந்தியில் மட்டுமே பதிலளிப்பதில் ‘இந்தி’ய அமைச்சர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இது பெரிதும் வரவேற்கத்தக்கது; இந்தியர்கள் அனைவரும் மகிழ்ந்து பாராட்டுவதற்கு உரியது.

இந்தி அலுவல் மொழி அல்ல எனினும், இந்தியாவில் பெரும்பான்மையோரால் பேசப்படுகிறது என்று சொல்லப்படுவதும், அறிவியல் துறையில் உலகம் கண்டிராத பெரும் வளர்ச்சி கண்டிருப்பதுமான இந்தியை இந்தியக் குடிமக்கள் அனைவரும் கற்றிருப்பது மிகவும் அவசியம்.

நடாளுமன்ற உறுப்பினர்களைப் பொருத்தவரை இந்தியைப் பிழையறப் பேசுவதும் எழுதுவதும் மிக மிக மிக அவசியம்.

குறிப்பாக, நாடாளுமன்றக் கூட்டங்களில் அவர்கள் பங்கு பெறும்போது மறந்தும் ஆங்கிலத்தில்[பிற மொழிகளிலும்] பேசுவது மன்னிக்கக் கூடாதது மட்டுமல்ல, தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.

எனவே, ‘இந்தி’யர் அல்லாதவர் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பும்போது ‘இந்தி’ய அமைச்சர்கள் இந்தியில் மட்டுமே பதில் அளிப்பதைக் குறைகூறும் கேரள நாட்டுக்காரரின் செயல் கண்டிக்கத்தக்கது.

இப்போது இந்தியில் மட்டுமே பதிலளிக்கும் ஒன்றிய அமைச்சர்கள், வருங்காலத்தில் ஆங்கிலத்திலோ இந்தி அல்லாத மொழிகளிலோ கேள்வி கேட்பவர்களை அசிங்கமான வார்த்தைகளால் சாடுவதோடு, கையில் கிடைக்கும் ஆயுதங்களால்[மைக் போன்றவை] தாக்குதல் நடத்தவும்கூடும்.

இவ்வாறான தாக்குதல்களே, இந்தி தெரிந்தவன்தான் உண்மையான இந்தியன் என்பதை உணரச் செய்யும்.

ஒருவேளை.....

‘இந்தி’யர் அல்லாதவர்கள்[தன்மானம், சூடு, சொரணை எல்லாம் இருந்தால்] ஒருங்கிணைந்து இந்தியாவை இரண்டாக[இந்தியர்-அல்லாதவர்] உடைக்கும் நோக்கத்துடன் போராடினால், வலிமை வாய்ந்த நம் ராணுவத்தை ஏவி, அவர்களை அடக்கி ஒடுக்கிவிடலாம் என்பதை ‘இந்தி’ய அமைச்சர்களுக்கு நினைவூட்டுகிறோம்.

வாழ்க இந்தி! வளர்க ‘இந்தி’யரின் ஆதிக்கம்!!