ஆனால், மூடர்களின் களிமண் மண்டைகளில் திணிக்கப்பட்ட இந்த மூடத்தனத்தைக் கட்டிக்காப்பதற்கென்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்கள்தான் கோயில்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் குறுமதியாளர்கள்.
புண்ணியம் செய்தவனுக்கெல்லாம் சொர்க்கம் வாய்ப்பது உறுதி என்கிறவர்கள், வைணவக் கோயில்களில் உள்ள சொர்க்கவாசல்களைத் தரிசித்தாலே புண்ணியம் கிடைக்கும் என்று புளுகி வைத்தது ஏன்?
கொலை, கொள்ளை, வன்புணர்வு என்று அத்தனை அக்கிரமச் செயல்களில் ஈடுபவன்கள்கூட சொர்க்கவாசலைத் தரிசித்தால் புண்ணியம் கிடைக்குமா? சொர்க்கம் செல்ல முடியுமா?
உழைக்காமல் உண்டு கொழுக்கவும் சமுதாயத்தில் தங்களின் ‘அந்தஸ்தை’ மேம்படுத்தவும் சுயநலக் கும்பல் கட்டிவிட்ட கதை இது.
ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளைகள் இவர்கள்.
அவர்கள் இவர்களைப் பாதுகாப்பதால்தான், பெரியார் போன்ற பகுத்தறிவாளர்களும், சமூகச் சீர்திருத்தவாதிகளும் பட்ட பாடெல்லாம் வீணாகிப்போனது. மூடச் செயல்களை எதிர்ப்பவர்களைக் கைது செய்து வழக்குத் தொடுத்துத் தண்டிக்கும் கைங்கரியத்தை ஆட்சியாளர்கள் தவறாமல் செய்கிறார்கள்.
கோயில்களைச் சொந்தமாக்கிக்கொண்டு நாசகாரக் கும்பல்கள் அடிக்கும் கொட்டங்களைக் கண்டுகொள்வதே இல்லை.
அயராமல் இந்தக் கும்பல் செய்யும் பரப்புரையால்தான், சொர்க்கவாசலைத்[அத்தனை வைணவத் தலங்களிலும் உள்ளன] தரிசிக்கக் கூட்டம் கூட்டமாகச் சென்று முட்டி மோதிப் பக்தர்கள் செத்தொழியும் அவலம் தொடர்கிறது[திருப்பதியில் 6 பேர் இறந்தது அண்மை நிகழ்வு. இந்தச் செம்மறி ஆட்டுக் கூட்டம் செய்த குற்றத்திற்கு ஒரு காவல்துறை அதிகாரி தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்].
சொர்க்க வாசலைத் தரிசித்தால் புண்ணியம் கிடைக்கும் என்று நாளும் பொய்யுரைக்கும் ஆதிக்க வெறிக் கும்பலுக்கும், இவர்களைப் பாதுகாக்கும் ஆட்சியாளர்களுக்கும் நாம் அறிவுறுத்துவது:
நீங்கள் திறந்து வைப்பது சொர்க்கவாசல்கள் அல்ல, மூடத்தனங்களை வளர்த்து, மூடர்களின் எண்ணிக்கையை அபிரிதமாகப் பெருக்கி இந்த மண்ணுலக வாழ்க்கையை நரகலோகமாக மாற்றும் அடாத செயலாகும்!
திருந்துங்கள், அல்லது திருத்தவிடுங்கள்.