திங்கள், 13 ஜனவரி, 2025

தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி[பெரியார்]தான்!!!

ங்கிகளின் புதியக் கொத்தடிமையும் பழையக் கொத்தடிமைகளும், தமிழரிடையே பெரியாருக்குள்ள பெருமதிப்பைக் குறைத்திடப் பட்டியலிடும் குற்றச்சாட்டுகளில் அவர் தமிழை, ‘காட்டுமிராண்டி மொழி’ என்று சொல்லி அவமதித்தார் என்பதும் ஒன்று.

பெரியார் ஏன் அப்படிச் சொன்னார்? அவரைச் சொல்ல வைத்த சூழல் எது?

சங்க காலத்திற்குப் பிறகு, களப்பிரர், பல்லவர்[தமிழர் அல்லர் என்னும் கருத்தே மேலோகியிருந்தது], இஸ்லாமியர், மராட்டியர், நாயக்கர் என்று பல்வேறு இனத்தவரால் அடிமைப்படுத்தப்பட்ட தமிழர்கள் ஆங்கிலேயரின்[ஒட்டுமொத்த இந்தியாவும்] அடிமைகளாகவும் வாழ்ந்தார்கள் என்பது வரலாறு.

ஆங்கிலேயர்கள் இங்கு வந்தபோது பிரமிக்கத்தக்க அறிவியல் அறிவோடு வந்தார்கள்.

அறிவியல் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அவர்கள் பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், உளவியல் என்று பல்துறை அறிவு பெற்றவர்களாக இருந்தார்கள்; தம் இனத்தவர்க்கு அவற்றைக் கற்பிப்பதற்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களும் அவர்களிடம் இருந்தன. சின்னஞ்சிறு தேசத்தவரான ஆங்கிலேயர்கள் உலகிலுள்ள பல நாடுகளை அடிமைப்படுத்தி ஆண்டதற்கு அவர்களின் மொழியும் பயன்பட்டது என்பது அறியத்தக்கது.

பெரியார்[திராவிட நாடு திராவிடர்க்கே என்று சொல்லிக்கொண்டிருந்த அவர், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழக்கமிட்டதை மறந்துவிடக்கூடாது] சிந்தித்தார்.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத புராணங்கள், இதிகாசங்கள், தேவார திருவாசகங்கள், சிற்றிலக்கியங்கள்[கட்டடம், சிற்பம் போன்றவை பற்றிய நூல்களும், சமணர்களின் இலக்கண நூல்களும் விதிவிலக்கானவை] என்று தமிழில் நூல்கள் என்னும் பெயரில் குப்பைகள்  குவிந்து கிடந்தனவே தவிர, ஆங்கல மொழியில் போல அறிவியல், வாழ்வியல், உளவியல் தொடர்பான நூல்களே இல்லாதது அவரை வருத்தியது.

அந்த வருத்தம்தான் அவரை, ‘தமிழ் காட்டுமிராண்டி மொழி’ என்று சொல்ல வைத்தது.

அரசியலில் ஈடுபடாமல் மக்கள் பணியில் மட்டும் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட அவருக்கு, தமிழை இப்படிச் சாடியதால் எந்தவொரு பயனும் இல்லை. தமிழர் நலன் கருதியே இதைச் செய்தார் என்பது, இன்று அவரை இழித்துரைக்கும் மரமண்டையர்க்குப் புரியாமல்போனது ஏன் என்று புரியவில்லை.

பெரியார் காலத்துக்குப் பிறகும்கூட, பொறியியல், முதலான துறைகளில் போதுமான அளவுக்கு நூல்கள் வெளியாகவில்லை[கதை, கவிதை, நாடக நூல்கள் மக்களுக்கான தேவைகளில் சிலவற்றை மட்டுமே நிறைவேற்றும்].

சுயமாகச் சிந்தித்துத் தமிழில் அறிவியல் நூல்களைப் படைத்தளிக்கப் பல்துறை அறிஞர்கள் இல்லை[படைப்பாளிகள் இருப்பின் அவர்களுக்கு உரிய நிதியுதவியை அரசு செய்யும் என்று நம்பலாம்].

மொழியாக்க நூல்களிலும் போதிய தரம் இல்லை.

விளைவு.....

தனியார் கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வி இல்லை. அரசுக் கலைக்கல்லூரிகளில் மட்டுமே தமிழ்வழிக் கல்விப் பிரிவுகள் உள்ளன.

பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம் கற்பிக்கும் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை[ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பயின்று நிபுணத்துவம் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே சுயமாக நூல்கள் படைக்கும் நிலை உருவாகலாம்].

பெற்றோர்களாலும் தமிழ் வழி முற்றிலுமாய்ப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ஆக, பெரியார் அன்று சொன்னதையேதான் இன்று நாம் சொல்லவேண்டியுள்ளது.

“தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி!"[அறிவியலைப் புறக்கணிக்கும் எந்தவொரு மொழியும் காலப்போக்கில் அழியும் என்பது உறுதி]