“என் பெயரைத் தவிர்த்து, அதனுடன் வேறெந்த முன்னொட்டும்[“கடவுளே அஜித்” என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்] சேர்த்து அழைக்கப்படுவதில் எனக்குத் துளியளவும் உடன்பாடில்லை. என் பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும்” என்று தன் ரசிகர்களுக்கு அறிவுரை நல்கி அறிக்கைவிட்டவர் பிரபல நடிகர் அஜித் குமார்[https://kadavulinkadavul.blogspot.com/2024/12/blog-post_11.html].
அண்மையில் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் 3ஆவது இடத்தைப் பிடித்துச் சாதனை நிகழ்த்தினார்.
ரசிகர்களின் வாழ்த்துகள் சமூக வலைத்தளங்களின் வரிசைகட்டி நிற்கும் நிலையில், “அஜித் வாழ்க, விஜய் வாழ்கன்னு முழக்கமிடுறீங்களே, நீங்க எப்ப வாழப் போறீங்க?” என்றும், “ஆரோக்கியமான உடம்பையும், சிக்ஸ் பேக்கையும்விட மனநலம் முக்கியம்” என்றும் ரசிகர்களுக்கு அறிவுரை பகர்ந்திருக்கிறார் அஜித்.
மேலும் ஓர் அறிக்கையில், “என் கொள்ளுத் தாத்தா பெயர் எனக்குத் தெரியாது. நான் பிரபலமானவனாக இருப்பதால், எனக்குப் பின்னரான என் இரு தலைமுறையினர் என் பெயரைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அப்புறம் வரும் தலைமுறையினருக்கு என் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.....
இதன் மூலம் நான் சொல்லவருவது, வாழ்க்கை சிறியது; வெகு அற்பமானது. எனவே, இந்தக் குறுகிய வாழ்க்கையை வீணடிக்காமல் பயனுள்ள வகையில் வாழப் பழகுங்கள்; நடிகர்களைப் புகழ்வதை வழக்கமாக்கிக்கொள்ளாமல் உங்களின் குடும்பங்களைக் கவனியுங்கள்” என்று வலியுறுத்தியிருக்கிறார்[https://tamil.hindustantimes.com].
சுகபோகங்களில் மூழ்கிக் கிடப்பதோடு, தொழிலில் சரிவு காணும்போது அரசியல் கட்சி தொடங்கி, ‘முதல்வர்’ ஆகும் கனவில் மூழ்கிக் கிடக்கும் நடிகர்களிடையே முற்றிலும் விதிவிலக்கானவராகக் காட்சியளிக்கிறார் அஜித் குமார்.
வாழ்க்கையின் நிலையாமை குறித்த புரிதலுடன், விருப்பு வெறுப்புகளுக்கு இடம்தராத இவரின் மனப்பக்குவம் நம்மை வியப்புக்குள்ளாக்குகிறது; பெரிதும் மகிழ்ச்சிப்படுத்துகிறது.
குறையாத புகழுடனும் குன்றாத உடல்நலத்துடனும் நீண்ட ஆயுள் பெற்று, நிறைவான வாழ்க்கை வாழ்ந்திட அஜீத் குமாரை வாழ்த்துகிறோம்.
* * * * *
https://www.puthiyathalaimurai.com/cinema/actor-ajith-thanks-note-to-the-people-for-support