விபத்தில் சிக்கி மண்டையில் அடிபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ஒருவர் சேர்க்கப்படுவது போன்ற நிகழ்வுகளின்போது, அவர் தங்களின் உறவினராக இருந்தால் காப்பாற்றும்படி கடவுளிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள் நம் மக்கள்.
பெரிய அளவிலான மனநலப் பாதிப்புகளுக்கும்[மணவிலக்கு, தீராத கடன் தொல்லை, அடங்காத நோய்களின் தாக்குதல் போன்றவை] கடவுளை நேர்ந்துகொள்கிறார்கள்.
கடவுள் காப்பாற்றுகிறாரோ அல்லவோ உடல் மனம் தொடர்பான தாங்கொணாத துன்பங்களுக்கு முன்பு செய்த பாவங்களே காரணம் என்று நம்புகிறார்கள்.
மனிதர்கள் செய்யும் பாவங்கள் அனைத்தும் கடவுளின் ஆணைக்கேற்ப எங்கோ பதிவு செய்யப்படுவது உண்மையானால்.....
நடந்துசெல்லும்போது கட்டை விரல் கல்லில் இடித்ததால் உண்டாகும் சிறு வலி, கடைகளில் பேரம் பேசும்போது உருவாகும் சச்சரவால் ஏற்படும் கொஞ்சம் மன வலி போன்றவற்றிற்குக் காரணங்களான சிறு சிறு பாவங்களும்[முற்பிறப்பில் அல்லது இப்பிறப்பில் செய்தவை] அடங்கும்.
முன்னவை பெரிய பாவங்கள்; பின்னவை சிறிய பாவச் செயல்கள்.
‘அளவு’ வேறுபடுகிறதே தவிர மேற்கண்ட இரு வகைத் துன்பங்களுக்கும் மேற்கண்ட பாவங்கள்தான் காரணங்கள் ஆகின்றன.
எனினும், அனுபவிக்கும் சிறு சிறு உடல் வலிகளுக்கும் மன வலிகளுக்கும்கூட முன்பு செய்த பாவங்கள்தான் காரணம் என்று எவரும் எண்ணுவதில்லை; கடவுளிடம் வேண்டுதல் வைப்பதும் இல்லை.
ஆனால், அதிக அளவிலான உடல் & மனத் துன்பங்களுக்கு முன்பு செய்த பாவங்களே காரணம் என்று நம்பி, அவற்றைப் போக்கியருளும்படிக் கடவுளிடம் கோரிக்கை வைக்கிறார்கள் மக்கள்.
கடவுளைப் பொருத்தவரை பெரிய, சிறிய என்னும் வேறுபாடெல்லாம் இல்லை[பாவம் பாவம்தான். புண்ணியம் புண்ணியம்தான்].
சிறிய அளவிலான துன்பங்களை நம் உடம்பும் மனமும் தாமாகவே போக்கிக்கொள்வது போலவே, போதிய உடல் உரமும் மன வலிமையும்[பெறுவது அத்தனை எளிதல்ல] இருந்தால் அதிக அளவிலான துன்பங்களையும் நம்மால் தாங்கிக்கொள்ள, அல்லது போக்கிக்கொள்ள இயலும்[இயலாதபோது ஏற்று வாழ்ந்துமுடிப்பதைத் தவிர வேறு வழியில்லை].
கோரிக்கைகளைச் சுமந்து கோயில் கோயிலாய் அலைந்து திரிதல் வீணான செயல் என்பது புரியும்!