‘தாய்லாந்து நாட்டில் சமீபகாலமாக 'வாடகை மனைவி' கலாச்சாரம் அதிகரித்துவருகிறது. அங்கு சுற்றுலா செல்பவர்களுக்கு இளம்பெண்கள் வாடகை மனைவிகளாக மாறுகிறார்கள்’ என்பது பலராலும் அறியப்பட்ட செய்தி.
வாடகை மனைவி[Rental Wife] என்கிற கலாச்சாரம்... அல்ல, ‘தொழில்’ முறை இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது என்னும் அதிர்ச்சிச் செய்தி அண்மையில் வெளியாகியுள்ளது.
இந்தத் தொழில் தடங்கல் ஏதும் இல்லாமல் நடைபெறுவது இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில்.
அந்த மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தின் கிராமங்களில் இளம் பெண்களை ஆடவருக்கு ‘வாடகை மனைவி’['தாதிச்சா பிரதா']யாக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
இந்த வழக்கத்தின்படி, பெண்கள் ஒரு மாதம் முதல் ஒரு வருடம்வரை ஆண்களுக்கு மனைவிகளாக வாடகைக்கு விடப்படுகிறார்கள். இதற்கென்று ஆடு மாடு ‘சந்தை’ போல் பொது இடங்களில் ‘வாடகை மனைவிச் சந்தை’ நடத்தப்படுகிறது.
திருமணத்திற்குப் பெண்கள் கிடைக்காத கிராமத்தின் பணக்கார ஆண்கள் இந்தச் சந்தைக்கு வந்து தத்தம் விருப்பத்திற்கு ஏற்பக் குமரிகளை ஏலத்தில் எடுக்கிறார்களாம். கன்னித்தன்மை, உடல் தோற்றம், வயது போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் அவர்கள் விலைபேசப்படுகிறார்கள்.
ஏலச் சந்தையில் 8 முதல் 15 வயதிற்குட்பட்ட கன்னிப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக லீகல் சர்வீசஸ் இந்தியா அறிக்கை கூறுகிறது. இதற்காக ரூ. 15,000 முதல் 25,000 வரை அந்தப் பெண்களுக்குப் பணம் தரப்படுகிறது. சில நேரங்களில் அழகான கன்னிப் பெண்கள் என்றால் ரூ.2 லட்சம் வரை ஏலம் எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறது அந்த அறிக்கை.[14 வயதில் ரூ.80,000-க்கு வாடகை மனைவியாக ஏலம் விடப்பட்ட சிறுமி, தனது துணையாலும், அவரது குடும்பத்தில் உள்ள ஆண்களாலும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக ஆய்வுக்குழுவிடம் தெரிவித்துள்ளார். இக்கலாச்சாரம் குறித்து மத்தியப் பிரதேசக் காவல்துறைக்குத் தெரிந்திருந்தாலும், புகார் தர யாரும் முன்வருவதில்லை என்பதால், சட்ட ரீதியாகத் தடுக்கமுடியவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது].
ஏலம் விடும் பெண்களுக்கும் ஏலத்தில் எடுக்கும் ஆண்களுக்கும் இடையே ரூ.10-இல் தொடங்கி ரூ.100 வரையிலான பத்திரத்தில் ஒப்பந்தம் போடப்படுகிறது. ஒப்பந்தக் காலத்தின் முடிவில், பெண்கள் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளவும் முடியுமாம்.
பாலின விகிதங்கள், வறுமை, வரதட்சணைக் கொடுமை ஆகியவற்றால் வாடகை மனைவி நடைமுறை பின்பற்றப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், இந்த கொடூர நடைமுறையால் பெண்கள் பாலியல் ரீதியாகச் சுரண்டப்படுகிறார்கள் என்கிற அச்சமூட்டும் உண்மையும் வெளிப்பட்டுள்ளது.
அதனால்தான், இந்தத் ‘தாதிச்சா பிரதா’ என்னும் அசிங்க நடைமுறை பற்றி நம் பிரதமர் மோடி அவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்கிறோம்.
கொண்டுசென்றால்.....
நம் பிரதமர் அவசரமாக மேற்கொள்ளவிருக்கும் அயல் நாட்டுப் பயணத்தைக்கூட ஒத்திவைத்து, ‘தாதிச்சா பிரதா’வை ஒழித்துக்கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார்.
ஒழிக தாதிச்சா பிரதா! வாழ்க நம் பிரதமர்!!
hps://taml.news18.com/photogallery/trend/who-are-rental-wives-of-india-gives-services-like-wife-che-full-details-here-nw-mma-ws-b-1723267.html -February 9, 2025