மீள்பதிவுரை:
பொழுதைக் கழிப்பதற்குத்தான் வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கினேன். ஆர்வம் காரணமாகக் கதைகளும் பல்வகைப் பதிவுகளும் எழுத நேரிட்டது. அவற்றுள் கடவுளின் 'இருப்பு' குறித்து ஆராய்வது பிடித்திருந்ததால், அது குறித்துப் பல பதிவுகள் எழுதியுள்ளேன். அவற்றுள் இதுவும் ஒன்று.
முற்றிலும் மாறுபட்ட கோணங்களில் கடவுளை ஆராய்வதால் நான் எழுதிய மிகவும் பயனுள்ள[?!] பதிவுகளில் இதுவும் ஒன்று என்பது என் நம்பிக்கை.
ஆண்டுக்கு ஒரு முறையேனும் இதை மீள்பதிவு செய்வது என் விருப்பம். எனினும், 2018க்குப் பிறகு இதை வெளியிடவில்லை.
‘பார்வை’ எண்ணிக்கை 700[+]. ஒரு சாமானியனின் படைப்புக்கு இதுவே அதிகமோ!!!
* * * * *
அனைத்து உலகங்களையும் உயிர்களையும் படைத்தவர் கடவுள்[என்கிறார்கள்].
நம்மைப் படைத்தவரும் அவரே.
நாம் வேண்டிக்கொண்டதால் கடவுள் நம்மை மனிதராகத் தோற்றுவிக்கவில்லை. அதாவது, நம் சம்மதம் இல்லாமலே இவ்வுலகில் பிறந்து இன்பதுன்பங்களை அனுபவிக்கச் சபித்திருக்கிறார் என்று நான் சொன்னால் அதை உங்களால் எளிதில் மறுத்திட இயலாது.
அவர் படைத்துவிட்டார்.
வேறு வழியின்றி நாம் வாழ்கிறோம்.
இது தெரிந்திருந்தும் நம்மில் எவரும் செத்து மடியத் தயாராயில்லை.
ஆசை... ‘இன்னும் வாழ வேண்டும்’ என்னும் பேராசைதான் காரணம். ஆசைப்பட வைத்தவரும் அந்தப் பேரருளாளன்தான்!
இந்த ஆசை காரணமாக, சாவை நினைத்து அஞ்சுகிறோம்; மனம் கலங்குகிறோம்; மரணமில்லாப் பெருவாழ்வை எண்ணி நாளும் ஏங்குகிறோம். ஆனாலும், சாவு நம்மை விட்டு வைப்பதில்லை; ஓட ஓட ஓட விரட்டி ஒரு நாள் ‘காவு’ கொள்கிறது.
இந்தச் சாவுக்கான காரணக் கர்த்தா யார்?
நம்மில் மிகப் பெரும்பாலோர் நம்புகிற... நாள்தோறும் போற்றித் துதி பாடுகிற கடவுள்தானே?
நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணை வடிவான கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார்.
இவர் மட்டும் ஆதியும் அந்தமும் இல்லாதவர்; என்றும் இருப்பவர். எந்தவொரு கெடுதியும் இவரை அணுகாது; அணுகவும் முடியாது, அணு முதல் அண்டம்வரை அனைத்தையும் ஆள்பவர் இவரே என்பதால்.
ஆனால், மானுடப் பதர்களான நமக்கும் பிற உயிர்களுக்கும் மட்டும் அற்ப ஆயுள். அதிலும் அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதல். இனி என்ன ஆவோம் என்று தொடர்ந்து சிந்திக்கவே இடம் தராத கொடூரச் சாவு.
இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய ஜீவன்களாகக் கடவுள் ஏன் நம்மைப் படைக்க வேண்டும்?
மனிதனைப் படைக்காமல்[பிற உயிர்களையும்தான்]வெறும் சூன்யத்தில் கலந்து மோனத் தவத்தில் ஆழ்ந்து கிடக்கலாமே? உயிர்களற்ற வெறும் பிண்டமான அண்டத்தைக் கண்டு கண்டு கண்டு ரசித்துக் காலம் கழிக்கலாமே? அதை விடுத்து.....
உயிர்களைப் பரிதவிக்கச் செய்யும் பாவச் செயலை ஏன் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்?
தனக்கொரு நீதி; தன்னால் படைக்கப்படும் உயிர்களுக்கு ஒரு நீதி என்றிருக்கும் இந்த நபரையா மக்கள் இத்தனை காலமும் வழிபட்டார்கள்? இனியும் வழிபடப்போகிறார்கள்?!
வழிபட்டது போதும். இனியேனும்.....
வாய்க்கிற அற்ப வாழ்க்கையைப் பயனுள்ள வகையிலும், இயன்றவரை நோய் நொடி இல்லாமலும் வாழ்ந்து முடித்து, மன அமைதியுடன் மரணத்தை எதிர்கொள்வது குறித்துச் சிந்திக்கலாமே!