பழைய இடுகைகளில் சேர்க்கப்பட்டிருந்த படங்கள் முற்றிலுமாய் அழிந்துவிட்டன[அழிக்கப்பட்டன?]. மீட்டெடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. வருந்துகிறேன்.

திங்கள், 17 மார்ச், 2025

அன்று[1992] பாபர் மசூதி! இன்று ஔரங்சீப் கல்லறை!! நாளை?!

மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத்(VHP) தீவிரப்படுத்தியுள்ளன. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பாபர் மசூதி இடிப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் குழுக்கள் மிரட்டியுள்ளன[ஊடகச் செய்தி*].

சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள குல்தாபாத்தில் அமைந்துள்ள ஔரங்கசீப்பின் கல்லறை பிரிவினையின் சின்னம் என்பதும், வகுப்புவாத ஒற்றுமையைச் சீர்குலைப்பதை ஊக்குவிக்கிறது என்பதும் கல்லறையை இடிப்பதற்கு அவர்கள் கூறும் காரணம்.

இந்த விவகாரம் தீவிரம் அடைந்துள்ளது.

முன்பு பாபர் மசூதி குறித்துப் பிரச்சினைகள் உருவாகி, விவாதங்கள் சூடுபிடித்து, ஆளும் கட்சியின் ஆதரவுடன் அது விஸ்வ இந்து பரிஷத் & அதன் கூட்டணி அமைப்புகளின் ஆர்வலர்களால் உடைத்து  நொறுக்கப்பட்டது. அது நடந்தது டிசம்பர் 6, 1992இல்[ராமஜென்ம பூமி என்று சொல்லப்படும் அந்த இடத்தில்தான் ராமருக்குப் பிரமாண்டமான கோயில் கட்டியுள்ளார் மோடி].

அதே போன்றதொரு பிரச்சினைக்கு இன்று இலக்காகியிருக்கிறது ஔரங்சீப் கல்லறை.

விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்று அஞ்சி மகாராட்டிர அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்த ஏற்பாடு தொடருமா, மேலிடத்து அழுத்தம் காரணமாகப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, பாபர் மசூதிக்கு ஏற்பட்ட கதியே ஔரங்சீப் கல்லறைக்கும் ஏற்படுமா என்பது இன்றில்லாவிட்டாலும் சில மாதங்களுக்குப் பின்னர் தெரியக்கூடும்.

ஒருவேளை.....

கல்லறை இடித்து நொறுக்கப்பட்டால்[அங்கே அனுமான் குரங்குக்கா, சீதாப்பிராட்டிக்கா லட்சுமணனுக்கா யாருக்குக் கோயில் கட்டுவது என்பது பின்னர் தீர்மானிக்கப்படும்] அடுத்ததாக, இங்குள்ள இஸ்லாமியர்களாலும் வகுப்புவாத ஒற்றுமை சீர்குலைக்கப்படும் என்று காரணம் காட்டி, அண்டை அயலிலுள்ள நாடுகளுக்கு அவர்கள் விரட்டப்படக்கூடும்.

அவ்வாறு அவர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டால் இந்து வெறியர்களின் அடுத்த இலக்கு.....

அவர்களுக்கு அடிபணிய மறுக்கும் இனத்தவரை[குறிப்பாகத் தமிழரை] இந்த நாட்டைவிட்டு வெளியேற்றுவதுதான்.

தாங்கள் வெளியேற்றப்படும் அபாயம் குறித்துத் தமிழர்கள் இப்போதே தீவிரமாகச் சிந்தித்து, தங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்வது நல்லது என்பது நம் எண்ணம்.

                                       *   *   *   *   *

*Authorities Restrict Direct Entry To Aurangzeb's Tomb After Hindu Groups Threaten Babri-Like Action; Security Heightened In Sambhaji Nagar