பிறந்த கிராமத்திலேயே பள்ளிப் படிப்புப் படித்து, வெவ்வேறு நகரங்களில் மேற்படிப்பை முடித்து, அவன் சென்னையிலும் நான்[‘நான்’ அடியேன் அல்ல; தன்னை முன்னிலைப்படுத்திக் கதை சொல்வது ஒருவகை உத்தி] கோவையிலும் வேலை பார்க்கிறோம்.
அவன்? ஆறுமுகம்.
இப்போதெல்லாம் நாங்கள் சந்திப்பது எப்போதாவதுதான்.
கிராமத்தில் ஒரு வாரம்போல நடைபெறும் மாரியம்மன் பண்டிகை அன்று எங்களைச் சந்திக்க வைத்தது.
சிறிது நேரப் பொத்தாம்பொதுவான கலந்துரையாடலுக்குப் பிறகு, “ரெண்டுபேருக்கும் ஒரே வயசு. நான் ரெண்டு குழந்தைகளுக்குத் தகப்பன். நீ இன்னும் கட்டைப் பிரமச்சாரி. ஏண்டா கல்யாணம் பண்ணிக்கலேன்னு கேட்டா ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லுவே. இன்னிக்கி உண்மையைச் சொல்லுடா” என்றேன் ஆறுமுகத்திடம்.
“இதுவரைக்கும் தரகர் மூலமா நிறையப் பொண்ணுகளைப் பார்த்துட்டேன். ஒடுக்கு விழுந்த கன்னமும், துறுத்திய பல்லும், பருத்த உதடுமா கரிக்கட்டை நிறத்தில் இருக்கிற என்னைப் அதுகளுக்குப் பிடிக்கல. போன வாரம் பார்த்த ஒரு பொண்ணு மட்டும் என்னைக் கட்டிக்கச் சம்மதிக்கிறதா தரகர் சொன்னார்” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.
“அவர் சொன்னதில் எனக்கு நம்பிக்கை இல்ல. அவளைத் தனியே சந்திச்சி என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்க நினைச்சேன். அவளைப் பெத்தவங்க சம்மதிக்கல. தரகர் என்னைத் தனியே அழைச்சிட்டுப் போய், ‘ஆணுக்குப் பெருசா அழகெல்லாம் தேவையில்லை. பலான விசயத்தில் பெண்டாட்டியைத் திருப்திப்படுத்திட்டா அவள் புருசனுக்கு அடிமை ஆயிடுவா’ என்று கண் சிமிட்டினார்…..”
பேச்சை நிறுத்தினான் ஆறுமுகம். அவன் சொன்ன பதிலை அறிய ஆவலுடன் காத்திருந்தேன்.
எதுவும் சொல்லாமல், “நீ என்ன நினைக்கிறே?” என்றான்.
“அவர் சொல்வதிலும் உண்மை இருக்குதானே?” என்றேன் நான் பட்டும் படாமலும்.
"மற்ற ஆண்கள் விசயத்தில் உண்மையாக இருக்கலாம். முன் அனுபவம் இல்லாததால், ‘அது’ விசயத்தில் நான் மேம்பட்டவனா, சராசரியா, அதுக்கும் கீழேயான்னு எனக்குத் தெரியாது. என்னைக் கட்டிக்கப்போறவ அது விசயத்தில் எப்படிப்பட்டவளா இருப்பாள்னும் எனக்குத் தெரியாது. இப்படி எதுவும் தெரியாம, ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிட்டு எதிர்பார்ப்பது எதுவும் நடக்கனேன்னா வாழ்க்கை நரகம் ஆயிடும். அதனால, ‘நான் பிரமச்சாரியாவே இருந்துடப்போறேன்னு அவர்கிட்டே திட்டவட்டமாச் சொல்லிட்டேன்" என்றான்.
“கல்யாணம் செய்துக்காம வாழுறது அத்தனைச் சுலபம் இல்லையே?” என்றேன்.
“மனுசனுக்கு ஆறிவு வளர்ச்சி இல்லாம இருந்தபோது, உடலுறவுச் சுகம் மட்டுமே அவனுக்குப் பிரதானமா இருந்தது. அறிவு வளர வளர, இயற்கை அழகை ரசிக்கிறது, நாட்டு நடப்பைப் பற்றிச் சிந்திக்கிறது, எழுதுறது, நல்ல எழுத்துகளைத் தேடித் தேடிப் படிக்கிறது, ஓவியம் வரையறது, கவிதைகள் எழுதுறது, மேடையில் பேசுவது, ஆடுவது பாடுவதுன்னு இயன்றவரை மகிழ்ச்சியோடு பொழுதைக் கழிக்கப் பல வழிகளைக் கண்டுபிடிச்சிட்டான் மனுசன். வாழ்ந்து முடிக்கிறதுக்குக் குடும்ப வாழ்க்கை அவசியத் தேவைங்கிற காலம் மாறிப்போச்சு. அதனால, நான் ஒருத்தன் பிரமச்சாரியாகவே காலம் கழிச்சுடுறது பெரிய விசயம் அல்ல” என்றான் ஆறுமுகம்.
அவனுக்கு ஆறுதல் சொல்லும் வகையறியாமல், “உன் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்” என்று சொல்லி அழுத்தமாக அவன் தோள் வருடினேன்.
‘திருமணம் செய்யாமல் தனிமையில் காலம் கழிக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை நாளும் அதிகரிக்கிறது” என்ற, அண்மையில் படித்த இந்த ஊடகச் செய்தி நினைவுக்கு வந்தது.
செய்தி:
//According to recent data, a significant portion of the Indian population remains unmarried, with estimates suggesting that over 23% of young people are not interested in marriage, which translates to a large number of unmarried bachelors in India in 2024; however, the exact number is difficult to pinpoint due to variations in data sources and age brackets considered// -https://www.google.com/search?q=number+of+unmarried+bachelors+in+india+2024