எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 9 ஏப்ரல், 2025

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... அமைதி! கடவுள் எண்ணுகிறார்... “ஒன்று இரண்டு மூன்று...”

த்துவம் பேசுவோர், ‘முடிவிலி[Infinite]' பற்றி விவாதிப்பதுண்டு.

அதென்ன ‘முடிவிலி’?

‘முடிவு’ என்று ஒன்று இல்லாதது ‘முடிவிலி’. அதாவது, அது எதுவாயினும் எந்த வரம்பும் இல்லாதது[being without limits of any kind]. 

இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு கோட்டில் உள்ள புள்ளிகளை எண்ணுவது, பிரபஞ்சத்திலுள்ள நட்சத்திரங்களைக் கணக்கிடுவது, “ஒன்று... இரண்டு... மூன்று... ” என்றிப்படி எண்களை இடைவிடாமல் எண்ணிக்கொண்டிருப்பது போன்றவற்றைச் சொல்லலாம்.

எண்களை மட்டுமே எண்ணுவது ஓர் எளிய எடுத்துக்காட்டு.

“ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து.....” என்று உண்டு உறங்கிய நேரம் போக வாழ்நாளெல்லாம் எண்ணிக்கொண்டே இருப்பது[இது சாத்தியமா என்று கேள்வி எழுப்ப வேண்டாம், புரிய வைத்திட வேறு வழியில்லை என்பதால்]

‘100000000000000000000000.....’ எண்ணுவது எண்ணுபவர்களின் ஆயுள் உள்ளவரை நிகழும். அப்புறம்?

வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் அதைத் தொடரலாம்.

மனித இனம் உள்ளவரை தொடர்ந்து எண்ணுவது[100000000000000000000000000.....>முடிவில்லை] இயலும்.

இதுவும்கூட மனித இனம் உள்ளவரைதான்.

அப்புறம்?

என்றென்று இருந்துகொண்டே இருக்கிறவர்[‘ஆதி அந்தம்’ இல்லாதவர்] என்று சொல்லப்படுகிற கடவுளிடம்  இந்தப் பொறுப்பை ஒப்படைக்கலாம்[கடவுளால் அனுப்பப்பட்ட மோடியோ கடவுள்களின் குருவான ஜக்கியாரோ சிபாரிசு செய்தால் அவர் சம்மதிப்பார். ஹி... ஹி... ஹி!!!].

ஆனால், “அந்தக் கடவுளின் ‘எண்ணும் செயல்’கூட முடிவு பெறாது” என்பது அறியத்தக்கது.

ஆம், “ஒன்று ஒரண்டு மூன்று நான்கு ஐந்து.....” என்று எண்ணத் தொடங்கிய கடவுள் இன்றளவும்[இந்த நொடிவரை] எண்ணிக்கொண்டே இருக்கிறார்; எண்ணிக்கொண்டே இருக்கிறார்; எண்ணிக்கொண்டே இருக்கிறார்; எண்ணிக்.....

இதைத்தாங்க ‘முடிவிலி’[being without limits of any kind] ன்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இந்த ‘எண்ணுதல்’ என்னும் ஒரு செயலைச் செய்து முடிப்பதே மனிதர்களுக்குச்[கடவுளுக்கும்கூட] சாத்தியம் ஆகாத நிலையில், படைப்பு, அல்லது கடவுள் குறித்து, ‘ஏன், எப்போது, எப்படி’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டு, ஆளாளுக்கு ஒரு கடவுளைக் கற்பித்து மதங்களை உருவாக்கி, ஆதிக்க வெறியராய் அடித்துக்கொண்டு செத்தொழிந்தார்கள் நம் முன்னோர்களில் எண்ணற்றவர்கள்; இன்றளவும் சாதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இனியேனும், இம்மாதிரியான தவறுகளைச் செய்யாமல், ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி அமைதியாக வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும்.