எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வெள்ளி, 2 மே, 2025

அங்கே[பாக்-இந்திய எல்லை] அவலச்சுவை! இங்கே[கேரளா] பிரதமரின் நகைச்சுவை!!

 

26 சுற்றுலாப் பயணிகளைச் சாகடித்த தீவிரவாதிகளின் ‘பஹல்காம்’ தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான் படையினருக்கும் நம் படை வீரர்களுக்கும் இடையே மோதல்கள் நிகழ்வதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

உயிரிழப்புகள்[இருதரப்பிலும்] நேர்வதும் உறுதி.

எந்தவொரு கணத்திலும் ‘போர்’ வெடிக்கக்கூடும் என்னும் பகீர் செய்திகளுக்கும் பஞ்சமில்லை.

அதிவிரைவுத் தகவல் தொடர்பு வசதிகள் உள்ளனவெனினும், தலைநகரிலேயே தங்கியிருந்து, இருதரப்பு மோதல் போக்குகளை மிகக் கவனத்துடன் பரிசீலித்து, படைத் தலைவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது, அல்லது உத்தரவுகள் பிறப்பிப்பது போன்ற பொறுப்புகளைச் சுமப்பதால், பிரதமர் மன இறுக்கத்துக்கு உள்ளாவார் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

முன்கூட்டியே அதைத் தவிர்ப்பதற்காகத்தான், காஷ்மீர்[பகல்காம்] சென்று, சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதையும், காயமுற்றவர்களுக்குத் தேறுதல் கூறுவதையும் தவிர்த்தார் நம் பிரதமர்.

இப்போது கேரளா சென்று விழிஞ்சம் துறைமுகத் திறப்பு விழாவில் பங்கேற்றதோடு வேடிக்கையாகப் பேசி, ‘ஜோக்’ சொல்லிச் சிரித்து மகிழ்ந்திருக்கிறார். 

இவற்றைத் தகாத செயல்கள் என்று கருதத் தேவையில்லை; நெருக்கடியானதொரு சூழலில், மன இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ள அவர் கையாளும் வழிமுறைகள் இவை என்று சொல்லலாமா?