எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 22 மே, 2025

இயற்கையின் கோர முகம்! இறைவனின் கொடூர நெஞ்சம்!!

ந்த உலகில் வாழ்ந்து மறைந்த ஞானிகள், மகான்கள், அவதாரங்கள், சீரிய சிந்தனையாளர்கள், அரிய உயரிய அறிவியலாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள் என்போர் மிகப் பலர்.

இவர்களில் தப்பிப் பிழைத்தவர் எவருமே இல்லை.

“வெகு வெகு அற்ப மானிடப் பதராகிய  நாமும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல என்னும் நிலையில், இறப்பை எண்ணி அஞ்சுவது அறிவீனம்” என்று சொல்லிச் சொல்லிச் சொல்லி இந்தவொரு அச்சத்திலிருந்து முற்றிலுமாய் விடுபட முயற்சிக்கிறோம்.

ஆனால்.....

ஆண்டுகள் கழிந்து கழிந்து, வயது முதிர்ந்து முதிர்ந்து சாவை நோக்கிய நம் பயணம் தொடரும் நிலையில் மனமும் ஒட்டுமொத்த உடம்பும் கிடந்து தவிக்கிறதே! துடிக்கிறதே!!

வாழப் பணித்துச் சாவையும் பரிசாகக் கொடுத்த இயற்கை இத்தனைக் கோரமானதா? கடவுள் இருந்தால் இத்தனைக் கொடூரக் குணத்தவனா அவன்?!