எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 26 மே, 2025

சாகும்போதும் அழகு சிதைவதை விரும்பாத அதிசயப் பெண்!!!

வாழ்நாள் முழுதும் அழகாகத் தோன்ற வேண்டும் என்று ஆசைப்படுவது மனித இயல்பு. இந்த ஆசை பெண்களுக்குச் சற்றே[மிகவும்?] அதிகம் எனலாம்.

மரணத்தைத் தழுவும்போதுகூட தன் ‘மேனி அழகு’ குறைந்துவிடக்கூடாது என்று பெண்ணொருத்தி ஆசைப்பட்ட செய்தி மனதைப் பெரிதும் நெகிழச் செய்தது[இணையத்தில் வாசித்தது].

அந்தப் பெண்.....

ஹிட்லரின் ஆசை நாயகியாக இருந்து, மனைவியாகவும் ஆன[2ஆம் உலகப் போரில் தோல்வியைத் தழுவிய நிலையில் பாதாள அறையில் அவர் பதுங்கியிருந்தபோது] ஈவா பிரவுன்.

மே 2, 1945 அன்று பெர்லின் சரணடைந்த பிறகு, ஹிட்லர் தப்பிச் செல்வார் என்று சோவியத் தரப்பினர் எதிர்பார்த்தார்கள். ஹிட்லரோ தற்கொலை புரிவது என்ற முடிவை மேற்கொண்டார்.

பிடிபட்டதும் தான் மாஸ்கோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ‘மிருகக்காட்சிச் சாலையில் கூண்டில் அடைக்கப்பட்ட விலங்கு போல’ நடத்தப்படுவதை அவர் விரும்பாததே காரணம்.

மனைவி ஈவா பிரவுனுடனும் அவரது பெண் செயலாளர்களுடனும் தற்கொலைக்கான பல்வேறு முறைகள் குறித்து அவர் விவாதித்தார்.

இறுதியில், அவர் இரண்டு உறுதியான முறைகளைப் பயன்படுத்தினார், துப்பாக்கியை அவரது வலப்புற நெற்றிப்பொட்டில் குறிவைத்து, தூண்டுதலை[trigger] இழுத்த அதே நேரத்தில், ஒரு சயனைடுக் குப்பியையும்[காப்ஸ்யூல்] கடித்தார்.

‘திருமதி ஹிட்லர்[ஈவா பிரவுன்], தற்கொலைக்குப் பின் தன் சடலம் அழகு குன்றாமல் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் விஷத்தை மட்டுமே பயன்படுத்தினார்’ என்பது வரலாறு வழங்கும் சோகச் செய்தி.