எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 16 அக்டோபர், 2025

‘அது’க்கு அது ஆகாத சாதி! ‘இது’க்குமா?(புதிர்&புரட்சிப் படைப்பு)

 கைப்பேசியின் அழைப்பு.

“அலோ...” சொன்னார்  அறிவழகன்.

“தலைவரே, நான் குமார் பேசுறேன். நம்ம ஜாதிப் பொண்ணு  அமுதா ‘அந்த’ ஜாதிப் பயலோட மலைக் கோயிலுக்குப்  போற பஸ்ஸில் ஒன்னா உட்கார்ந்திருக்கா. ரெண்டு பேரும் நெருங்கிப் பழகுற விசயத்தை உங்ககிட்டே சொல்லியிருக்கேன். கல்யாணம் பண்ணிக்கப் போறாங்களோன்னு சந்தேகமா இருக்கு” என்றான் குமார்.

“இது சம்பந்தமா அமுதாவோட அப்பன் காளியப்பன்கூட ஃபோனில் பேசியிருக்கேன். நீ உடனே புறப்பட்டு வா. நம்ம ஆட்களோட அவரையும் கூட்டிட்டுக் கோயிலுக்குப் போவோம். அவனைக் கடத்திட்டுப் போய் விசாரிப்போம்.” -கொதிக்கும்  நெருப்பு வார்த்தைகளை உதிர்த்தார் அறிவழகன்.

காளியப்பனை, அவர் வீட்டில் சந்தித்துக் கலந்தாலோசித்த பின்னர் அவர்கள் புறப்பட ஆயத்தமானபோது,  அமுதாவே அங்கு வந்து சேர்ந்தாள்.

எதிர்பாராத அதிர்ச்சியை உள்வாங்கிக்கொண்ட அறிவழகன், அமுதாவை விசாரிக்கும்படி காளியப்பனுக்கு ஜாடை காட்டினார்.

“ஏதோ சர்டிஃபிகேட் வாங்கக் காலேஜ் போறதா சொல்லிட்டுப் போனே. வாங்கிட்டியா?” என்றார் காளியப்பன்.

“வாங்கிட்டேன். முதல் வகுப்பில் பாஸ் பண்ணியிருக்கேன்.”

“அப்புறம், வேற எங்க போனே?”

“மலைக் கோயிலுக்குப் போனேன். அப்பா, நான் என் கிளாஸ்மேட் கலைச்செல்வனைப் பத்தி உங்ககிட்டே சொல்லியிருக்கேன். ரொம்ப நல்லவன்; புத்திசாலி. நான் எம்.எஸ்ஸி., முதல் வகுப்பில் தேறியிருக்கேன்னா அதுக்கு அவன்தான் காரணம். அவனை நான் மலைக் கோயிலுக்கு அழைச்சிட்டுப் போயி மாதொருபாகன் முன்னிலையில் அவனுக்கு ராக்கி கட்டினேன். தாழ்த்தப்பட்ட ஜாதிப் பையனைக் காதலிக்கிறதுதான் தப்புன்னா சகோதரனா ஏத்துக்கிறதுகூடத் தப்பாப்பா?” -சொல்லி முடித்தபோது அவளின் பார்வை அறிவழகனின் முகத்தில் பதிந்திருந்தது. 

அவர் பார்வையோ தரையில் தாழ்ந்து கிடந்தது!

                                     *   *   *   *   *

***“இது புதிய சிந்தனையில் உருவான புரட்சிப் படைப்பு. கதாசிரியர் யார்?” என்கிறீர்களா?

அது வந்து... ஹி... ஹி... ஹி!!!