அனைத்து உயிர்களுமே தமக்குத் தேவையான ஆற்றலை உண்ணும் உணவின் மூலம் பெற்று வாழ்கின்றன.
அந்த உணவைப் பிற உயிர்களை[பெரும்பாலும்> இறைச்சி உண்ணாதவை விதிவிலக்கு>] அழித்தே அவை பெறுகின்றன.
தெரியாதனவற்றுள் வைரஸ் போன்ற நுண்ணுயிர்களும் அடங்கும்.
அவை தாம் உயிர்வாழ்வதற்குரிய ஆற்றலைப் பெற்றிட, மனிதர்களாகிய நம் உடல் உறுப்புகளில் ஊடுருவித் தாக்குகின்றன. அந்தத் தாக்குதல் தடுத்து நிறுத்தப்படாத நிலையில்தான் நாம்[+பிற உயிர்கள்] நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கிறோம். உயிரிழந்த பிறகும் கண்ணுக்குத் தெரிகிற/தெரியாத புழுப்பூச்சிகளுக்கும் நுண்ணுயிர்களுக்கும் உணவாகிறது நம் உடம்பு.
நோய்வாய்ப்படும்போது அந்த நோயை[+வறுமை போன்ற பிறவற்றையும்] நீக்குமாறு கடவுளைத் தொழுகிறோம்; அவரைக் கொண்டாடுகிறோம்.
இதைச் செய்யும்போது நாம் நினைவில்கொள்ளத் தவறுவது ஒன்று உண்டு.
மனிதர்களுக்குப் பிற உயிர்களை உணவாக்கிய[ஊன்> இறைச்சி உண்ணாமல் வாழும் அகிம்சை நெறியெல்லாம், அறிவு வளர்ச்சி பெற்ற நிலையில் வகுக்கப்பட்டவை] அதே கடவுள்தான் பிற உயிர்களுக்கு[நுண்ணுயிர்கள் உட்பட] மனிதர்களை உணவாக்கியிருக்கிறார்.
கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் வகுத்த நெறி[விதி]தான் இது.
வேண்டிக்கொள்வதால், தான் வகுத்த ஒரு பொது விதியிலிருந்து மனிதர்களுக்கு மட்டும் அவர் விலக்களிக்கமாட்டார்.
நோய் என்றில்லாமல், வேறு வகையான துன்பங்களை[வறுமை, பகைமை போன்றவற்றால் வருபவை] அனுபவிக்கச் செய்வதும் அவர் வகுத்த வேறு வேறு விதிகளின்படியே என்பது அறியத்தக்கது.
ஆகவே, நமக்கு வாய்த்திருக்கும் ஆறறிவை முழுமையாகப் பயன்படுத்தி, துன்பங்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கும், அவற்றை ஏற்று வாழ்வதற்கான மன வலிமையைப் பெறுவதற்கும் முயற்சிப்பதே அறிவுடைமை ஆகும். கடவுளை வழிபடுவதால் பெறும் பயன் ஏதுமில்லை.

