திங்கள், 23 பிப்ரவரி, 2015

‘மாராப்பு’.....இது பெண்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ தரும் கதை! ஆண்களுக்கு?!

ஜோலார்ப்பேட்டை – ஈரோடு பாஸஞ்சர் ரயில் வண்டி பொம்மிடி தாண்டி, தடதடத்து ஓடிக்கொண் டிருந்தது.

கண்களுக்கு விருந்தாகிக் கண நேரத்தில் காணாமல் போகும் மலை சார்ந்த காடுகளையும் வயல் வெளிகளையும், இருக்கையில் சாய்ந்தவாறு ‘பராக்கு’ப் பார்த்துக்கொண்டிருந்த தேவகி, வலது கால் பாதம் ‘நறுக்’ என்று மிதிக்கப்பட்டதால், காலைப் பின்னுக்கு இழுத்ததோடு, திடுக்கிட்டுப் பார்வையை உள்ளுக்கிழுத்தாள்.

முந்தானை சற்றே விலகியிருந்த தன் ஒரு பக்கத்து மார்பகத்தை எதிரே அமர்ந்திருந்த மாதவன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.

“ஏய்யா என் காலை மிதிச்சே?” என்று கேட்டாள்.

“காத்து வாங்குது. இழுத்து மூடுடி” என்றான் அவன்.

மாராப்பை இழுத்து மூடுவதற்கு மாறாக, அவன் மீது அலட்சியப் பார்வையை வீசிவிட்டு, மீண்டும் இயற்கையழகை ரசிக்கத் தொடங்கினாள் தேவகி.
‘நறநற’வென்று பற்களைக் கடித்தான் மாதவன்.

வீடு போய்ச் சேர்ந்ததும், “உன்கிட்ட ஒன்னு கேட்கணும். டீ கொண்டா” என்று உத்தரவிட்டான்.

தேனீருடன் வந்த தேவகியின் இன்னொரு கையில் நீண்டதொரு அரிவாளும் இருந்தது.

“நீ என்ன கேட்கப் போறேன்னு எனக்குத் தெரியும். சேலை கட்டுற ஒரு பொம்பள எல்லா நேரமும் இழுத்து இழுத்துப் போர்த்திகிட்டு இருக்க முடியாது. கவனக்குறைவா இருக்கும்போது மாராப்பு விலகத்தான் செய்யும். கட்டுன புருஷனா இருந்தாலும் இதைக் கண்டுக்காம இருக்கணும். அப்படி இருக்க உன்னால முடியாது. நமக்குக் கல்யாணம் ஆன இந்த ஒரு வருசத்தில் ஒரு நூறு தடவையாவது “இழுத்து மூடு’’ன்னு சொல்லியிருப்பே. ஒன்னு செய். உன் கையால என்னோட ரெண்டு கொங்கையையும் அறுத்துப் போட்டுடு. அப்புறம் உனக்கு எப்படியோ, எனக்கு நிம்மதி கிடைச்சுடும்.”

தேனீர்க் குவளையை ஒரு புறம் வைத்துவிட்டு அரிவாளை மட்டும் நீட்டினாள் தேவகி.

“என்னை மன்னிச்சுடு தேவகி” என்று சொல்ல நினைத்தான் மாதவன். ஆனால், சொல்லவில்லை; ஆழ்ந்த யோசனையுடன் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

இந்தக் கதையில், முதல் பாதி நான்  [திருட்டுத்தனமாய்ப்] பார்த்தது! மீதி?...கற்பனை!

ஆக்கம்?     ஹி...ஹி...ஹி...

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

‘ஊமைக் கனவுகள்’ என்னும் பதிவுலக நண்ப ருக்கு என் நன்றி!

19.02.2015 நாளிட்ட ‘பதிவர்களுக்கு என் பணிவான பத்து பரிந்துரைகள்’ என்னும் என் பதிவின் தலைப்பில், ‘ப்’என்னும் ஒற்று மிகுமா மிகாதா என்பது குறித்து, நண்பர் ஊமைக் கனவுகளுக்கும் எனக்கும் விவாதம் இடம்பெற்றது.

தமிழ் இலக்கணத்துடனான என் தொடர்பு  பல ஆண்டுகளாக அறுபட்டிருந்தமை; முன்வைத்த கருத்தை நிலைநாட்ட வேண்டும் என்னும் பிடிவாதம்; உரிய நேரத்தில், தவற்றை ஒத்துக்கொள்ளும் பெருந் தன்மை இல்லாமை; போதிய இலக்கண அறிவு வாய்க்கப் பெறாதது........

என்றிவ்வாறான காரணங்களாலும், எனக்கே புரியாத வேறு சில காரணங்களாலும் ‘பத்து பரிந்துரைகள்’ என்று நான் குறிப்பிட்டது சரியே என்று வாதம்[முரட்டு வாதம்!!!] செய்தேன். வாதம் செய்வது முறையன்று என்பது புரிந்த பிறகும் சப்பைக்கட்டுகள் கட்டி, ஊமைக் கனவுகளின் நேரத்தை வீணடித்தேன்.

நான் பெற்றிருந்த பழைய இலக்கண அறிவை மிக முயன்று புதுப்பித்து ஆராய்ந்ததில், ‘பத்து பரிந்துரைகள்’ என்று எழுதுவது பிழை; ஊமைக்கனவுகளின் வாதத்தின்படி, ‘பத்துப் பரிந்துரைகள்’ என்று எழுதுவதே இலக்கண மரபாகும் என்பதை அறிய முடிந்தது. ‘பத்து பரிந்துரைகள்’ என்று எழுதுவது பிழை என்பதை ஏற்கிறேன்.

இதனை அனைத்துப் பதிவுலக நண்பர்களுக்கும் தெரிவிக்கிறேன்.

[//பசி (க்கு கோபம்) வந்தால் பற்றும் அறுந்து படும்?!...// என்று ஊமைக் கனவுகளுக்குப் பின்னூட்டம் இட்டு, நான் எத்தனை பலவீனமான ஆள் என்பதைப் பலருக்கும் புரிய வைத்த ‘அன்பே சிவம்’ அவர்களுக்கும், உளவியல் ரீதியாக என் அடிமனதைப் படித்து, என் பதிவின் 9, 10 பரிந்துரைகளில் பொதிந்துள்ள நகைச்சுவை முரணை வெகுவாக ரசித்த சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.]

‘ஊமைக் கனவுகள்’ அவர்களுக்கு மனப்பூர்வமாய் நன்றி சொல்கிறேன்.....

நன்றி ஊமைக் கனவுகள்.... நன்றி.....மிக்க நன்றி.
=============================================================================================

வியாழன், 19 பிப்ரவரி, 2015

தமிழ்ப் பதிவர்களுக்கு என் பணிவான பரிந்துரைகள்!

ஆங்கிலத்தில் எழுதும்போது அல்லது பேசும்போது பிழை நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம். போதிய மொழிப் புலமை இல்லையெனில், எழுதுவதையும் பேசுவதையும் தவிர்த்துவிடுகிறோம். இந்த மனப்போக்கு, நம் தாய்மொழியாம் தமிழைப் பயன்படுத்தும்போது நம்மில் பெரும்பாலோர்க்கு இல்லை என்பது கசப்பான ஓர் உண்மை.

நான் எழுதும் தமிழிலும் பிழைகள் உள்ளன. எனினும், நண்பர்களின் கணிசமான பதிவுகளில் கண்களை உறுத்துகிற அளவுக்கு அவை கூடுதலாகத் தென்படுவதை மனதில் கொண்டு இந்தப் பத்துப் பரிந்துரைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

பரிந்துரைகள்:

ஒன்று:
பதிவு எழுதி முடித்தவுடன், கருத்துப் பிழைகள் உள்ளனவா என்பதைச் சோதிப்பது போலவே, ஒரே ஒரு முறையேனும் சொற்பிழை, தொடர்ப்பிழை போன்ற மொழிப் பிழைகள் உள்ளனவா என்பதையும் சோதித்துவிடுங்கள்.

இரண்டு:
நாம் கையாளும் சொல்லின் அமைப்பு குறித்து ஐயம் எழுந்தால்[ஆவனமா, ஆவணமா? முந்தானையா, முந்தாணையா? என்பன போல] சோம்பலுக்கு இடம் தராமல், தமிழ் அகராதியைப் புரட்டிவிடுங்கள். கைவசம் இல்லையெனில் ஒன்று வாங்கிவிடுங்கள்.  தமிழில் பதிவெழுதிப் பிரபலம் ஆக ஆசைப்படுகிற நாம் அதை வாங்கத் தயங்கலாமா?

ஐயப்பாட்டுக்குரிய சொல்லைக் கூகிள் தேடலில் தட்டச்சு செய்வதன் மூலமும்[வரிசைகட்டும் பதிவுகளின் தலைப்புகளை வைத்து] அது பிழையானதா, அல்லவா என்பதை ஓரளவுக்கு அறிய முடியும்.

மூன்று:
கருத்துகளைச் சிறு சிறு[simple sentence] வாக்கியங்களாக எழுதுவதன் மூலம் தொடர்ப் பிழைகள் நேர்வதைத் தவிர்க்கலாம். கலப்பு வாக்கியங்களைப் பயன்படுத்தும்போது, ஒருமை பன்மை மயக்கம், எழுவாய் பயனிலை முரண்பாடு போன்றவை இடம்பெற வாய்ப்பு உண்டு.

நான்கு:
ஒரு கருத்துக்கு ஒரு பத்தி[paragraph] என்ற முறையைக் கையாளுங்கள். அடுத்த ஒரு கருத்தைச் சொல்லும்போது, அடுத்த பத்திக்குத் தாவிவிடுங்கள்.

பத்திகள் சிறியனவாக அமைவது வாசிப்போரின் சிரமத்தைக் குறைக்கும் என்பதை மறக்கவே வேண்டாம்.

ஐந்து:
சிலருடைய பதிவுகளில் மிக மிகக் குறைவான பிழைகள் இடம்பெற்றிருப்பதை, அல்லது, பிழைகளே இல்லாமலிருப்பதைக் கருத்தூன்றிப் படிப்பதன் மூலம் அறியலாம். அத்தகையோரின் பதிவுகளைத் தவறாமல் வாசித்தால், அது உங்கள் மொழி நடையைச் செம்மைப்படுத்தும்.

திரு.வி.கல்யாண சுந்தரனார், மு.வரதராசனார் போன்ற தமிழறிஞர்களின் நூல்களை வாங்கிவைத்து, அவற்றை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் படிப்பது மிகுதியும் பயனளிக்கும் என்பதை நம்புங்கள்.

ஆறு:
சந்திப் பிழைகளை முற்றிலும் தவிர்ப்பதென்பது மிக மிக மிகப் பெரும்பாலோர்க்குச் சாத்தியமில்லை. வார்த்தைகளை வாயால் உச்சரித்துப் பார்ப்பதன் மூலமும் முடிவு செய்யலாம்.

வாழை + பழம்...... இவை இணையும்போது ‘ப்’ சேர்ப்பது அவசியம் என்பது புரியும்.

என்று + சொன்னான்.... இவற்றை இயல்பாகச் சொல்லும்போது, ‘ச்’ தேவையில்லை என்பதை அறியலாம். ‘என்றுச் சொன்னான்’ என்று வராது. இலக்கணம் பயின்றவர்களையே திணறடிப்பது இந்தச் சந்தி! இதன் பொருட்டு வெகுவாக அலட்டிக்கொள்ள வேண்டாம்.

ஏழு:
 ‘பிழையின்றித் தமிழ் எழுதுவது எப்படி?’ என்ற தலைப்பிலான பதிவுகளைக் கூகிளில் தேடி அறிந்து, வாய்ப்பு அமையும்போது வாசிக்கலாம்.

எட்டு:
பதிவின் தலைப்பையும் சில ஆரம்ப வரிகளையும் மீண்டும் மீண்டும் கவனமாகப் படித்துப் பிழைகளை அகற்றிவிடுங்கள். திரட்டியில் இணைத்த பிறகு அவற்றைத் திருத்த வாய்ப்பில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஒன்பது:
பதிவுகளில் இடம்பெறும் கருத்துகள் பற்றிப் பின்னூட்டம் இடுகிறோம். அது போலவே, பதிவில் இடம்பெறும் மொழிப் பிழைகள் குறித்தும் பின்னூட்டம் இடுவதைப் பதிவர்களாகிய நாம் வழக்கம் ஆக்கிக்கொள்ளலாம். பிழை சுட்டப்படுவதை எவரும் கௌரவப் பிரச்சினையாக எண்ணுதல் கூடாது.

பத்து:
நல்ல கருத்துகளைப் பதிவிடுவதன் மூலம் நம் தாய்மொழி வாழவும் வளரவும் உதவுகிறோம். அது போலவே, பிழை நீக்கி எழுதுவதாலும் அது வாழ்கிறது... வளருகிறது என்பதை ஒருபோதும் மறத்தல் ஆகாது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பிழை காணின் மன்னியுங்கள்; திருத்துங்கள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு பேரழகியும் துறவியும் சீடனும்!

எச்சரிக்கை[இளவட்டங்களுக்கு]! கதையைப் படித்து முடித்ததும், “தலைப்பில் உள்ள ‘கவர்ச்சி’ கதையில் இல்லையே!?” என்று மனம் வெதும்பி முணுமுணுக்காதீர்!!!

                                              மனதில் சுமந்தவர்
ர் ஆற்றங்கரையில் ஒரு குருவும் சீடனும் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தனர்.

பச்சைப் பசேல் எனக் காட்சியளிக்கும் மலைச் சிகரங்கள் சூழ்ந்த, நெடிதுயர்ந்த மரங்களும். மணம் பரப்பும் செடிகளும், கொடிகளும் நிறைந்த ரம்மியமான சூழலில் தவம் இயற்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

மக்களும் இவர்களைத் தேடி வந்தனர்; உபதேசம் பெற்றனர்.

இது தவிர, இவர்கள் ஊர் ஊராகச் சென்று பக்திச் சொற்பொழிவுகளும் ஆற்றி வந்தார்கள்.

ஒரு சமயம், ஒரு கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள அண்டையிலிருந்த ஓர் ஊருக்கு இருவரும் கிளம்பினார்கள்.

ஆறு குறுக்கிட்டது. அதைக் கடக்க இருந்த நேரத்தில் ஓர் அழகான குமரிப் பெண் அங்கு வந்தாள்; சொன்னாள்:
“சுவாமிகளே, நான் கோயில் திருவிழாவுக்குச் செல்ல வேண்டும். என்னால் ஆற்றைக் கடக்க முடியாது. தண்ணீரைக் கண்டால் ரொம்பவே பயம். உங்களில் ஒருவர் என்னைத் தூக்கிச் சென்று அக்கரையில் சேர்த்தால் மிகவும் நன்றி உள்ளவளாக இருப்பேன்” என்றாள்.

சீடன் திடுக்கிட்டான்.

சற்றே யோசித்த குரு, அந்தப் பெண்ணைத் தன் இரு கைகளாலும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று அக்கரையில் சேர்த்தார்.

சீடன் மனதைக் குழப்பம் ஆக்கிரமித்தது.

 ‘நம் குரு ஒரு இளம் பெண்ணைத் தொட்டுவிட்டாரே. இது தவறில்லையா?’ என்று அவன் மனம் கேட்டுக்கொண்டே இருந்தது.

அவனுக்குக் கோவில் விழா, சுவாமி தரிசனம், அன்னதானம் என எதிலும் மனம் லயிக்கவில்லை.

இருவரும் ஆசிரமம் திரும்பினார்கள்.

இரவு வந்தது. உறங்கச் சென்றார்கள்.

மனக் குழப்பம் சீடனை உறங்கவிடாமல் தடுத்தது.

அவன் புரண்டு புரண்டு படுத்துத் துன்பப்படுவதைக் கவனித்தார் குரு; கேட்டார்:

“என்னப்பா, என்ன பிரச்சினை? உன் நடவடிக்கை சரியில்லையே. என்ன ஆயிற்று உனக்கு? சொல்” என்றார்.

சீடன் சொன்னான்: “ஆம் குருவே. இளம் பெண்களை நாம் தொடக்கூடாதல்லவா? நீங்கள் மதியம் ஒரு பெண்ணை.....” முடிக்காமல் நிறுத்தினான்.

குரு நகைத்தார்; சொன்னார்: “நான் அவள் உடலைத் தொட்டுத் தூக்கிச் சுமந்தேன்; இறக்கி விட்டவுடன் அடியோடு அவளை மறந்துவிட்டேன். நீ இன்னும் அவளை மனதில் சுமந்துகொண்டிருக்கிறாயே?”

சீடன் மனதில் தெளிவு பிறந்தது.

=============================================================================================

இது, என்.சிவராமன் தொகுத்த, ‘ஆன்மிகக் குட்டிக் கதைகள்’ என்னும் தொகுப்பிலிருந்து களவாடிக் கவர்ச்சியூட்டியது!

=============================================================================================

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஒரு பதிவிரதை ‘பத்ரகாளி’ ஆன கதை!!!

போதையிலிருந்தான் பொன்னுச்சாமி. மனதில் ‘அந்த’ ஆசையும் இருந்தது. ஆனால், கையில் காசு இல்லை. எங்கெல்லாமோ அலைந்துவிட்டுக் குடிசைக்குத் திரும்பியபோது நேரம் நள்ளிரவை நெருங்கிவிட்டிருந்தது.

குடிசையின் தட்டிக் கதவைத் தட்டக் குனிந்த அவன் ஏனோ தயங்கினான்.

மேட்டுத் தெரு சம்பங்கி நினைவுக்கு வந்தாள். அளவான சதை மேடுகளுடன் ‘சிக்’கென்று இருப்பாள். ‘ரேட்’ கொஞ்சம் அதிகம். ஒரு தடவை அவளிடம் போயிருக்கிறான்.

பிள்ளையார் கோயில் தெரு பிரபா சுமார்தான்; ஆளும் கறுப்பு. ஆனால், ‘ரேட்’ கம்மி. இருந்த கொஞ்சம் பணமும் ‘டாஸ்மாக்’குக்குப் போய்விட்டதால் கையில் சிங்கிள் பைசா இல்லாததை நினைத்து வருந்தினான் பொன்னுச்சாமி.

அவனால் இச்சையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “இன்னிக்கி ஒரு நாள் சரசுவிடம் கடன் சொல்லலாம்” என்று முணுமுணுத்துக்கொண்டே காந்திநகர் போனான்; கதவு தட்டி, வெளியே வந்த சரசுவிடம் பல்லிளித்தான்.

“பணம் வெச்சிருக்கியா?”என்றாள் அவள்.

‘ஹி...ஹி...வந்து...அது வந்து...அப்புறமா...” என்று அசட்டுச் சிரிப்புடன் குழைந்தான் பொன்னுச்சாமி.

“போன வாரம் வந்து ‘இருந்துட்டு’க் கடன் சொல்லிட்டுப் போனே. இன்னிக்கும் கடனா? சீ...போ” என்று அவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாள் அவள்.

’அந்த’ நினைப்பிலிருந்து விடுபட முடியாத பொன்னுச்சாமி, வாடிய மனதுடன் தன் குடிசைக்குத் திரும்பினான்.

தட்டிக் கதவைத் தட்டியவாறே, “சிவகாமி...” என்று தன் மனைவியை அழைத்தான்.

கதவைத் திறந்துவிட்டுச் சுருண்டு படுத்துவிட்டாள் சிவகாமி.

மூலையில் சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
சிவகாமியின் காலடியில் அமர்ந்து, அவளின் கெண்டைக் காலைச் சுரண்டினான் அவன்.

அவனின் கையைத் தட்டிவிட்டாள் அவள்.

மனம் தளராத பொன்னுச்சாமி, மெல்லத் தன் ஒரு கையை அவளின் ஜாக்கெட்டுக்குள் படரவிட்டான்.

‘விசுக்’கென எழுந்த அவள், “மரியாதையா விலகிப் போயிடு” என்று எச்சரித்தாள்.

“என்னடி மிரட்டுறே? உன் புருசன் சொல்றேன், கம்முனு படுடி” என்று குழறிக்கொண்டே அவளைக் கட்டித் தழுவும் ஆசையில் இருவருக்குமான இடைவெளியைக் குறைத்தான்.

“விலகிப் போயிடு” -அவனை எட்டி உதைத்த சிவகாமி, எழுந்து போய் எரவாணத்தில் செருகியிருந்த அரிவாளைச் ‘சரக்’கென உருவியெடுத்தாள்.

“கையில் காசு இருந்தா தாசிகளைத் தேடிக்கிறே. பைசா இல்லேன்னா பொண்டாட்டி தேவைப்படுறா. பொண்டாட்டின்னா வெறியைத் தணிக்கிற வெறும் மிஷின்னு நினைச்சியா? இனி ஒரு தடவை படுடின்னு சொன்னா, கண்டதுண்டமா வெட்டிப் போட்டுடுவேன்” என்று கர்ஜித்த சிவகாமி, உயர்த்திப் பிடித்த அரிவாளுடன் பத்ரகாளி போல் நின்றாள்.

ஓசைப்படாமல் குடிசையின் ஒரு மூலையில் முடங்கிப் படுத்தான் பொன்னுச்சாமி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000



நான் பைத்தியக்காரன்! நீங்கள்?!

எந்தவொரு பயனுமில்லை என்பது தெரிந்திருந்தும், பிடிவாதமாய் ஒரு செயலைச் செய்துகொண் டிருப்பவன் பைத்தியக்காரன். இதற்கு உதாரணம் நானே! நீங்களும் என்னைப் போன்றவர்தானா? பதிவைப் படியுங்கள்.

யிர்களுக்குப் புலன்கள் உள்ளன.

பொருள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பார்ப்பதற்குக் கண்களும், ஒலியை உள்வாங்குவதற் குச் செவிகளும், சுவைப்பதற்கு நாவும், நுகர்வதற்கு நாசியும், தொட்டு அறிவதற்கு உடம்பும் [மெய்] உதவுகின்றன.

ஐம்புலன்களால் ஈர்த்து அனுப்பப்படும் காட்சி முதலானவற்றை உணர்ந்து அறிவதற்குப் பயன்படுவது மூளை.

மனிதனோ விலங்கோ பறவையோ வேறு எதுவோ, ஓர் உயிரினத்தைப் பொறுத்தவரை மூளைதான் எல்லாமே. அது செயல் இழந்தால் [மூளைச் சாவு] அந்த உயிர் செயல்படும் திறனை இழக்கிறது.

ஆக, உணர்தல், அறிதல், அனுபவித்தல் என உயிர்களின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூளையே ஆதாரம்.

மனிதன், தன் மூளையைப் பயன்படுத்தித்தான் புதியனவற்றைப் படைக்கிறான்; பயன்படுத்துகிறான்.

மனிதனையும் ஏனைய அனைத்தையும் படைத்தவர் கடவுள் என்கிறார்கள்.

எல்லாம் அறிந்த, விரும்பும்போதெல்லாம் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில் செய்கிற, தீராத விளையாட்டுப் பிள்ளையான[?] அவருக்கும் மூளை தேவைதானே?

மனித மூளையைக் காட்டிலும் மிக மிக மிக...........மிக மிக மிக.............மிக மிக மிக[இந்த ’மிக’வுக்கு வரம்பேதுமில்லை] சக்தி வாய்ந்த மூளை கடவுளுக்கும் உள்ளதா?
உண்டெனில், அதற்கும் ‘உருவம்’ உண்டல்லவா? இல்லையெனில் அது அருவமானதா?

அருவமான ஒன்றின் மூலம் சிந்தித்துச் செயல்பட முடியுமா?

மூளையைத் தவிர்த்து, மூளை போன்ற ‘ஏதோ’ ஒன்றை அவர் சிந்திக்கப் பயன்படுத்துகிறாரா?

அந்த ‘ஏதோ’ ஒன்று எப்படியிருக்கும்?!

இந்தக் கேள்வியால் எனக்கோ பிறருக்கோ பயனேதும் இல்லை[?] என்பது தெரிந்திருந்தும், எனக்கு நானே இந்தக் கேள்வியைக் கண்ட கண்ட நேரங்களில் கேட்டுக் கொள்கிறேன்!!!


பயனற்ற இந்தச் செயலைச் செய்கிற நான் பைத்தியக்காரனா?

“ஆம்” என்பது உங்கள் பதிலானால்..... நீங்கள் எப்படி!?


=============================================================================================

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

புருஷன் குடிகாரனா? பெண்டாட்டி உஷார்!... உஷார்!!...உஷார்!!!

இது, குமுதம்[08.09.2010] இதழில் வெளியானது. ஒரு பக்கக் கதையின் தரத்தை இது உயர்த்துகிறதா, தாழ்த்துகிறதா? வாசித்துப் பின் யோசியுங்கள்!


கதைத் தலைப்பு:                    அப்படிப்போடு

“கொட மிளகா பஜ்ஜி போடுன்னு ஒரு மாசமா சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்க மாட்டேங்குற.” கண்ணுச்சாமியின் குரலில் ஏக்கம் கலந்த வருத்தம்.

“யோவ், முந்தா நாள் போட்டேனே. போடப் போடத் தின்னு தீர்த்தியே, மறந்து போச்சா? என்றாள் கல்யாணி.

“ஏண்டி பொய் சொல்றே?”

“நான் எதுக்குப் பொய் சொல்லணும்? பத்து நாள் முந்தி, சுடச்சுடக் குழிப் பணியாரம் வேணும்னே. போட்டுத் தந்தேன். வயிறு முட்டத் தின்னே. அடுத்த நாளே, ‘பணியாரம் கேட்டேனே, ஏன் போடலைன்னு கோபப்பட்டே. நல்லா போதை ஏத்திட்டு வந்து திங்கறே. தூங்கி முழிச்சா எல்லாம் மறந்து போயிடுது!” முகம் சிவக்கச் சொன்னாள் கல்யாணி.
“என்னை மன்னிச்சுடு புள்ள.” குழைவாகச் சொல்லிக்கொண்டே, உடம்பெங்கும் காமம் பரவ, கண்கள் கிறங்கக் கல்யாணியின் கை பற்றினான் கண்ணுச்சாமி.

வெடுக்கெனக் கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்ட கல்யாணி, “குடிச்சிட்டு வந்து ‘அது’க்காக என்னைத் தீண்டுறதை இனி மறந்துடு. நான் கர்ப்பம் ஆயிட்டா, ‘உன்னை நான் தொடவே இல்லை’ன்னு கூசாம பொய் சொல்லுவே” என்று கடுகடுத்தாள் கல்யாணி.

குடிசையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தான் கண்ணுச்சாமி.

*****************************************************************************************************************************************************


சனி, 14 பிப்ரவரி, 2015

உலகம் தோன்றியது எப்படி? ஆதி மனிதர் கள் படைத்த ‘அதிரச’க் கதைகள்!!!

'ஆதியில் ‘யூரிநோம்’ என்னும் உலகமாதா குழப்பமான மனநிலையிலிருந்து விடுபட்டு, அம்மணமாக எழுந்தாள்; தன் கால்களை ஊன்ற இடமில்லாமல், கடலையும் வானையும் பிரித்தாள். கடலின் மீது, தனியாகத் தாண்டவம் ஆடினாள்; தெற்கு நோக்கி ஆடிக்கொண்டே போனாள். புதிதாகத் தோன்றிய காற்று அவள் பின்னால் இதமாக வீசியது.

அவள் காற்றை இரு கைகளாலும் பிடித்துத் தேய்த்தாள். அப்போது, ‘ஓபியான்’ என்னும் பாம்பு தோன்றியது. அந்தப் பாம்பு அவனாக மாறியது.

அவள் அழகிய கோலம் கொண்டு ஆடினாள். மிகு கவர்ச்சியுடன் அவள் ஆட ஆட, ஓபியானின் உடம்பெங்கும் கட்டற்ற காமம் பெருக்கெடுத்தது. அவள் உடலைச் சுற்றி வளைத்து ஆலிங்கனம் செய்து ஆசைதீரப் புணர்ந்தான்.

உலகமாதா கருவுற்றாள். பின்னர் புறா வடிவெடுத்து, ‘பிரபஞ்ச’ முட்டையிட்டாள்.

அதைச் சுற்றி வளைத்து அடைகாத்தான் ஓபியான். முட்டை வெடித்து, சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள், பூமி முதலானவை தோன்றின.'

இது, பண்டைய கிரேக்க மக்கள் புனைந்த கதையாகும்.
கீழ்க்காண இருப்பதும் அவர்களின் கற்பனையில் உதித்ததுதான். என்ன.....கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கும்! பரவாயில்லைதானே?

‘முதலில் வெட்டவெளி உண்டாயிற்று. அதிலிருந்து பூமித்தாய் தோன்றினாள்.

இருளில் இருந்தும் வெட்டவெளியிலிருந்தும் ஒளி தோன்றி இரவும் பகலும் உருவான ஒரு காலக்கட்டத்தில், பூமித்தாய் தன்னை மூடிக்கொள்வதற்காக வானத்தைப் படைத்தாள்.

அப்புறம், அந்த வானம் என்னும் ஆடவனோடு ‘சேர்க்கை’ வைத்துக்கொண்டாள். மூன்று மகன்கள் பிறந்தார்கள். அவர்களுக்குத் தலா ஆயிரம் கைகள் இருந்தன. பெரு வலிமை படைத்த அவர்களால் தனக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சினான் வானமாகிய தகப்பன்.

பூமியாகிய தன் மனைவி மேலும் பிள்ளைகள் பெறாதிருக்க, அவளின் கருப்பையில் உருவாகியிருந்த சிசுக்களை நீண்ட காலம் உள்ளேயே தங்க வைத்தான். அதாவது, பிரசவம் ஆகவிடாமல் தடுத்தான்.

இதனால் வெகுண்ட தாய், தன் புருஷனைப் பழிவாங்கத் திட்டம் தீட்டினாள். அதைத் தன் மகன்களிடம் விவரித்தாள். அதன்படி.........

ஆகாயக் கணவன், மீண்டும் தன் பூமி மனைவியைப் புணரத் தலைப்பட்டபோது, அரிவாளுடன் புதரில் மறைந்திருந்த ஒரு மகன், தன் தந்தையின் ஆண்குறியைக் கையால் பற்றி அரிவாளால் அறுத்து எறிந்தான்!

அப்போது பெருகி வழிந்த  உதிரத்திலிருந்து பழி வாங்கும் ஆவிகள் தோன்றின.

அறுத்து வீசப்பட்ட உறுப்பு கடலில் மிதக்க, அதிலிருந்து உருவான நுரையிலிருந்து அழகிய தேவதை ஒருத்தி தோன்றினாள். சைப்ரஸ் என்று அழைக்கப்பட்ட அவளிடமிருந்துதான் காதலுணர்ச்சி, இன்ப உணர்ச்சி போன்றவை தோன்றின.’

டுத்து வருவது, பண்டைய எகிப்தியர்கள் புனைந்தது.

கடலிலிருந்துதான் தலைமைக் கடவுள் பிறந்ததாக இவர்கள் நம்பினார்கள்.

அந்தக் கடவுளே தன்னைப் பற்றிய ‘சுய விவரத்தை’க் கீழ்வருமாறு கூறுகிறார்:

“நான்தான் முதன்முதலில் உருவானவன். எல்லாம் எனக்குப் பின் தோன்றியவைதான். ஒரு சமயம் நான் மிகவும் களைப்பாக இருந்தேன். எனக்கு நிற்கக்கூட இயலவில்லை. இருந்தும், தனியொருவனாகவே படைப்புத் தொழிலைச் செய்தேன்..........

..............என் கண்களிலிருந்து வடிந்த நீரில்தான் மனிதர்கள் தோன்றினார்கள்....” இப்படி இன்னும் எப்படியெல்லாமோ உளறுகிறார் அந்தக் கடவுள். செம அறுவை!

பின் வருவது, பழங்கால ஆப்பிரிக்கர்கள் கதைத்தது.

‘பம்பாதான் அனைத்தையும் படைத்தவன்.

ஆரம்பத்தில் எங்கும் இருளாக இருந்தது. பம்பா[ஆடவன்] தன்னந்தனியாக இருந்தான். அவனுக்குச் சகிக்கவொண்ணாத வலி ஏற்பட்டது[பிரசவ வலியேதான்!]

நீண்ட நெடுங்கால வேதனையைச் சகித்துக்கொண்டு இந்த உலகத்தை அவன் பெற்றெடுத்தான்.

அப்புறம், சந்திரனையும் நட்சத்திரங்களையும் ஈன்றெடுத்தான். அவன் வாந்தி எடுத்தபோது, ஏதேதோ தோன்றி, கடைசியாக மனிதன் தோன்றினான்.’

விஷ்ணுவுக்கு நாராயணன் என்ற பெயரும் உண்டு.

‘நாரா’ என்றால் நீர் என்று பொருள். பாற்கடலில் ஆதிசேடன் என்னும் பாம்புப் படுக்கையில் உறங்குபவன் இவன். இவனுடைய நாபியிலிருந்து தாமரை தோன்றியது. அதிலிருந்து அவதரித்தவன் பிரம்மா. இந்தப் பிரம்மாவுடன் தோன்றியவர்கள் சந்திரனும் லட்சுமியும்.

அனைத்து உலகங்களையும் படைத்தவன் இந்தப் பிரம்மாதான். இது நம்ம ஊர்க் கற்பனை.

உயிர்களில், ஆணும் பெண்ணும் இணைந்து இன்பம் துய்ப்பதன் விளைவாகப் புதிய உயிர் தோன்றுவதைக் கண்ட நம்மவர்கள், ஆகாயம் என்னும் ஆண் கடவுளும், பூமி என்னும் பெண் கடவுளும் இணைந்து உடலுறவு சுகம் அனுபவித்ததன் விளைவாகவே உலகம் தோன்றியது என்று நம்பினார்கள்.

இறைவனின் பிறப்பு உறுப்பும் இறைவியின் பிறப்பு உறுப்பும் இணைந்த கோலத்தை வடிவமைத்து[?] வழிபட்டார்கள்.

பின்னர் அதைத் தாங்கள் எழுப்பிய கோயில்களில் இடம்பெறச் செய்தார்கள்; விழாக்கள் நடத்தி மகிழ்ந்தார்கள்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

பேராசிரியர் நா.வானமாமலை எழுதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட, ‘பழங்கதைகளும் பழமொழிகளும்’[பிப்ரவரி, 1980] என்னும் நூலிலிருந்து திரட்டி, செறிவூட்டப்பட்ட பதிவு.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

வியாழன், 12 பிப்ரவரி, 2015

வைரமுத்துவின் இந்த வாரக் குமுதம் [16.02.2015] சிறுகதையும் என் ‘குட்டி’[க்] கதையும்!

பருவக் குமரிகளின் அழகைக் காட்சிப்படுத்தப் போதுமான எழுத்து வன்மை எனக்கு இல்லாததால், என் கதையின் நாயகி ‘ரூபி’யை  வர்ணிக்கக் கவிஞரின் சில  ‘வசிய’ வரிகளைச்  எடுத்தாண்டிருக்கிறேன். அவர் என்னை மன்னிப்பாராக.

வைரமுத்து சிறுகதையின் சுருக்கம்[குமுதம் படிக்காதவர்களுக்கு]:
‘தியா’, 18 வயதே ஆன ஒரு கவர்ச்சிப் பெண்[ஆசை தீர வர்ணித்திருக்கிறார் கவிஞர்!]. 

தன் தோழியான மனோகரியிடம், “நான் மூனுபேரோட பழகுறேன். காதலுக்கும் நட்புக்கும் மத்தியில் நிற்கிறேன். இவனுகள்ல எவனும் எனக்குப் புருஷன் இல்ல. மூனு பேர்ல எவன் எனக்குப் பொருத்த மானவனோ, அவனை நான் கல்யாணம் பண்ணிக்குவேன்” என்று சொல்வதிலிருந்தே இவளின் குணாதிசயத்தைப் புரிந்து கொள்ளலாம்.


“மூனு பேர்ல எவனும் என்னைத் தொட்டுப் பேசலாம். தொட்டா என்ன தப்பு? தொடுற இடம்... காரணம்தான் முக்கியம். தேவையில்லாம உணர்ச்சி வசப்படுறது ஒரு மன நோய்” என்று சொல்லுகிற அளவுக்கு முற்போக்கு எண்ணம் கொண்டவள்.


“ஆண்களோட குறைகளை மட்டுமே நீ பார்க்குற. உன் குறை உனக்குத் தெரியல” என்ற, தோழி மனோகரியின் கூற்றுக்கு.....


“என்கிட்ட எந்தக் குறையும் இருக்கிறதா எனக்குத் தெரியல. அப்படியே இருந்தாலும், அந்தக் குறைகளோட என்னை ஏத்துக்கிற ஒருத்தன் கிடைக்காமலா போயிடுவான்” என்ற பதில் இவளின் வாழ்தல் பற்றிய புரிதலை எடுத்தியம்புகிறது.


அடுத்த சில ஆண்டுகளில், இந்த இரு இளம் தோழிப் பெண்களின் திருமண வாழ்க்கை எவ்வாறு அமைந்தது என்பதை விவரிப்பதே இந்தச் சிறுகதையின் நோக்கமாக உள்ளது.


ஒரு கட்டத்தில் இருவரும் பிரிகிறார்கள்.


தியா மூன்று வாலிபர்களுடன் நட்புக்கொண்டிருக்கிறாள்[இது மனோகரிக்கும் தெரியும்].


மூவருள் வெங்கட் ஒருவன்; தன் பெற்றோரிடம் இவளை அழைத்துச் செல்கிறான். இவள், காலணியைக் கழற்றாமல் வீட்டுக்குள் நுழைந்ததும், கால் மேல் கால் போட்டு அமர்ந்ததும் வெங்கட் குடும்பத் தார்க்குப் பிடிக்காததால் இவர்களின் உறவு முறிகிறது.


மார்பகங்களைத் திறந்து போட்டுத் திரிகிறாள் என்பதால், முதலில் நட்பு பாராட்டிய சேகர்மேனனும் இவளின் உறவைத் துண்டிக்கிறான்.


“உண்மையைச் சொல்லு, உனக்கு எத்தனை காதலர்கள்?” என்று கேட்டு, இவளின் ஏடாகூடமான பதிலால் விலகுகிறான் மூன்றாமவன்.


இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில்.........


சென்னை விமான நிலையத்தில், மனோகரியைச் சந்திக்கிறாள் தியா.


கண் பார்வையற்ற ஓர் ஆடவனுக்கு வாழ்க்கைப்பட்டு, ஒரு மழலைக்குத் தாயாகவும் ஆகியிருந்த மனோ, “மூனு பேரில் நீ யாரை செலக்ட் பண்ணின?” என்று தியாவிடம் வினவுகிறாள்.


“என்னிடம் குறையிருந்தாலும் அதோட என்னை ஏத்துக்கிற ஆம்பிளையை என்னால சந்திக்க முடியல” என்பது தியாவின் பதிலாக இருக்கிறது.


மனோ, தோழியைக் கடிந்துகொள்கிறாள்; அவளிடம் விடை பெற்று, தன் கணவன், குழந்தையுடன் கோவை செல்லும் விமானம் நோக்கி நடக்கிறாள்.


‘யார் குறைப் பிறவி? அவளா? அவள் கணவனா? மனம் ஊனப்பட்ட நானா?’ என்று மனதுக்குள் கேள்வி எழுப்பித் திகைத்து நிற்கிறாள் தியா.


மேற்கண்டவாறு முடிகிறது.கதை.




என் கதை:                                                  ரூபி

லைந்த ஓவியமாகக் காட்சியளித்த ரூபியின் முகத்தைத் தன் பக்கம் திருப்பினார் ராகவேந்தர்.

“நீ அஞ்சு வயதுக் குழந்தையா இருந்தபோது உன் அம்மா செத்துப்போனாள். போறதுக்கு முன்னால, உன்னைக் கண் கலங்காம பார்த்துக்கணும்னு என்கிட்ட சத்தியம் வாங்கினா. நான் சத்தியம் தவறலாமா? நீ அழலாமா? உன்னை நான் அழ விடுவேனா? சொல்லுடா, உன்னைத் தற்கொலை செய்துக்கத் தூண்டிய அவன் யார்? காதலிச்சிக் கெடுத்துக் கைவிட்ட அந்தப் பொறுக்கி எந்த ஊர்? ஒரே நாளில் அவனைக் கண்டுபிடிச்சி உன் கண் முன்னாலயே கண்ட துண்டமா வெட்டிப் போடுறேன். சொல்லு...சொல்லுடா” என்று ஆவேசம் பொங்க அக்கினி வார்த்தைகளை உதிர்த்தார் பெரும் செல்வந்தரும் மேலிடங்களில் நிரந்தரச் செல்வாக்குப் பெற்றவருமான ராகவேந்தர்.

ரூபி சொல்லிவிடத்தான் நினைத்தாள். சொல்ல நினைத்த வார்த்தைகளை ஒருங்கிணைப்பது  அத்தனை எளிதாகப்படவில்லை. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள்.

அவள் பேசத் தொடங்குவதற்கு முன்னால் அவளைக் கொஞ்சம் வர்ணித்துவிடலாம்.

‘ரகளை செய்யும் அழகு அவளுடையது. உளி படாத சதைச் சிற்பம். 170 செண்ட்டிமீட்டர் உயரம். அந்த உயரத்திற்கு அவள் எழுபது கிலோ எடை இருக்கலாம் என்பது பௌதிக அனுமதி. ஆனால், அறுபத் தைந்தில் ஒரு அவுன்ஸ் கடக்க மாட்டாள். மார்பில் தவிர வேறேங்கும் உபரிச் சதை ஆகாது என்பது அவள் உடற்கொள்கை. முறைக்கும் மற்றும் முறைக்க வைக்கும் அவளது ஜோடித்திமிர். எந்த ஆணுக்குமான சவப்பெட்டி என்று சொல்லும் அந்த அழகின் பள்ளம். நட்சத்திரங்கள் உடைந்து சிதறும் கண்ணில் அந்த அலட்சியம்தான் கவர்ச்சி. இரை உண்ணாத பாம்பைப் போல உள்ளடங்கிய வயிறு. வழித்தெடுத்த மெழுகைத் துடைத்தெடுத்த தொடைகள்.’[நன்றி: வைரமுத்து]

பெண்களின் அழகை மட்டுமே வர்ணித்து ஒரு புத்தகம் எழுதினால், அதன் அட்டைப் படமாக இவளைப் போடலாம். ஒரு தூக்குத் தண்டனைக் கைதி, கடைசி ஆசையாக இவளை ஒரு முறை தொட்டுக் கொள்ளலாம். சாகும் தருணத்தில் இவளைப் பார்த்துக்கொண்டிருந்தால் மரண பயம்கூட விலகிப் போகும்!

இத்தனை பேரழகியான இந்த ரூபிதான் தற்கொலைக்கு முயன்று தப்பிப் பிழைத்து, தனக்கிருக்கும் ஒரே ஆதரவான தந்தையைக் கண்ணீர் வடிக்கச் செய்திருந்தாள்.

பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ராகவேந்தரிடம் ரூபி சொன்னாள்: “அப்பா, நீங்க நினைக்கிற மாதிரி யாரும் என்னைக் கெடுக்கல. ராகவேந்தர் மகளைப் பலவந்தப்படுத்த யாருக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு? உங்க செல்ல மகளான நான்தான் பல ஆண்பிள்ளைகளைக் கெடுத்திருக்கேன்.....”

அதிர்ந்தார் ராகவேந்தர்: “என்னம்மா சொல்றே?”

“நடந்ததைத்தான் சொல்றேன். காதலைப் பொழுதுபோக்கா எடுத்துட்டு ஆண்களோடு விளை யாடிட்டேன். வினோத் என்னோடு படிச்சவன். என் காதல் விளையாட்டுக்கு முதல் பலி அவன்தான். இப்போ படிப்பைப் பாதியில் விட்டுட்டான். முகத்தில் தாடியும் உடம்பில் அழுக்குமா புதுக் கவிதை எழுதிட்டு அலையறான்.....”

பிரமை பிடித்தவராகக் கேட்டுக்கொண்டிருந்தார் ராகவேந்தர்.

“விரிவுரையாளர் ரவிவர்மா, கட்டிய பெண்டாட்டியைக் கைக்குழந்தையோடு பிறந்த வீட்டுக்கு விரட்டக் காரணமும் நான்தான். இன்னும் எவ்வளவோ இருக்கு....”

முகம் முழுக்கத் துக்கம் பரவ, மகள் சொல்லும் சோகக் கதையைச் செவிமடுத்துக்கொண்டிருந்தார் ரூபியின் தந்தை.

ரூபி தொடர்ந்தாள். “ஆடைகளை மாத்துற மாதிரி, காதலர்களையும் மாத்தினேன்.என்னால் காதலித்துப் புறக்கணிக்கப்பட்டவர்கள் பித்துப் பிடிச்சி அலையறதைப் பார்ப்பதில் எனக்கு அலாதியான திருப்தி. ஆனா, அந்தத் திருப்தி நீடிக்கல. நாலு நாள் முந்தி நடந்த அந்தச் சம்பவம் என் மனசை மாத்திடிச்சி. நம்ம விட்டுக் கார் டிரைவர் முருகேசனும் அவனுடைய குருட்டுத் தாயும் தற்கொலை செய்துட்டாங்களே, அந்தச் சம்பவத்தைத்தான் சொல்றேன். அவங்க சாவுக்கு நான்தான் காரணம்.....

.....முருகேசனின் வாட்டசாட்டமான உடம்பு மேல ரொம்ப நாளாவே எனக்கு ஆசை. சம்பவத்துக்கு முந்தின நாள், விருந்தினர் விடுதிக்கு அவனை அழைச்சிட்டுப் போனேன். ரொம்பவே பயந்தான்; ஓடப் பார்த்தான். பொய்ப் பழி போட்டு வேலையை விட்டு நீக்கிடுவேன்னு பயமுறுத்தி இணங்க வெச்சேன். யாருடைய துரதிருஷ்டமோ, நாங்க சந்தோசமா இருந்ததைத் தோட்டக்காரரும் சமையல்காரரும் பார்த்துட்டாங்க......

.....அவங்க பார்த்ததைப் பத்தி நான் கவலைப்படல. முருகேசன் அரண்டு போய்ட்டான். ஊரை விட்டு ஓடிப்போக நினைச்சான். பார்வையில்லாத தாயை அனாதையா விட்டுப் போக அவன் மனசு உடன்படல. நடந்ததை அவள்கிட்டே சொல்லியிருக்கான். நீங்க கொடுக்குற தண்டணையிலிருந்து தப்ப முடியாதுன்னு நினைச்சோ என்னவோ அவள் தூக்கில் தொங்க, தாய் மேல இருந்த அளவில்லாத பாசத்தால இவனும் தற்கொலை பண்ணிட்டான்.....”

சொல்லி நிறுத்திய ரூபி, “ஒரு கன்னிப் பொண்ணுக்குக் காதல் வரலாம்; கல்யாணத்துக்கு முந்தி காமம் வரலாமா அப்பா? என்னுடைய காமம் எத்தனை பேருடைய வாழ்க்கையைப் பாழாக்கிடிச்சி.” என்று கூறி முடித்து, வெடித்துச் சிதறி “ஓ”வென அழ ஆரம்பித்தாள்.

அவள் அழுது தீர்க்கட்டும் என்று காத்திருந்தார் ராகவேந்தர்.

=============================================================================================


திங்கள், 9 பிப்ரவரி, 2015

வாஸ்து போதையில் மிதக்கும் மாநில முதல்வர்களின் வாசிப்புக்கு......!!!

‘கஜானாவைக் காலி செய்யும் சந்திரபாபு, சந்திரசேகர ராவ்’ என்று தலைப்புக் கொடுத்து நான்கு பெரிய பத்திகளில் அதிச்சியான செய்தி வெளியிட்டிருக்கிறது ‘காலைக்கதிர்’[09.02.2015] தினசரி.

அதன் சாராம்சம்..........

‘ஆந்திரா, தெலுங்கானா முதல்வர்களின் வாஸ்து மோகத்தால் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் பாழாகி வருவதாக அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

ஆந்திர தலைநகரை, சிங்கப்பூர் போல மாற்றுவேன் என்று முழங்கிய சந்திரபாபு நாயுடு, நீர்நிலை அருகே தலைமைச் செயலகம் இருத்தல் வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூற,  குண்டூர் மாவட்டம், கிருஷ்ணா நதிக்கரை அருகே தலைநகரை அமைக்க முடிவு செய்திருக்கிறாராம்.
முன்பிருந்த அலுவலகம் வாஸ்துபடி இல்லை என்று, 20 கோடி ரூபாய் செலவு செய்து, ‘எல்’ பிளாக்கில் புதிய அலுவலகத்தை அமைத்துக் கொண்டுள்ளார்[இன்னும் செய்திகள் உள்ளன].

தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவும், தலைமைச் செயலகத்தில் வாஸ்து சரியில்லை என்று, 150 கோடி ரூபாய் செலவில், எரகடாவில் உள்ள அரசு காச நோய் மருத்தவமனை வளாகத்திற்கு மாற்றப் போவதாக அறிவித்திருக்கிறார்.

இந்தப் புதிய தலைமைச் செயலகக் கட்டுமானத் தொடக்க நிகழ்ச்சியில் அனைத்து மதத்தவர்களும் கலந்துகொண்டு பிரார்த்திப்பார்களாம்!

விஜயவாடா கனகதுர்க்க அம்மாவுக்கும்,  திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாருக்கும் தங்க மூக்குத்தி வழங்கப்படும். பத்ரகாளிக்குத் தங்க கிரீடம்! வீரபத்திர சாமிக்குத் தங்க மீசை[!!!] என்றெல்லாம் அறிவித்துள்ளார்.

முதல்வர்களைப் பின்பற்றி, ஆந்திரா தெலுங்கானா அரசு உயர் அதிகாரிகளும் வாஸ்து முறைப்படி அலுவலகங்களை மாற்றி அமைத்து வருகிறார்களாம்!

இம்மாநில முதல்வர்களும் இவர்களைப் போன்ற ஆளும் வர்க்கத்தவரும் வாஸ்து போதையிலிருந்து விடுபடுவதற்கு, 20.08.2013 இல் நான் எழுதி வெளியிட்ட ‘டுபாக்கூர் ‘வாஸ்து’வும் டூப்ளிகேட் கடவுள்களும்!’ என்னும் பதிவு உதவக்கூடும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. அச்சுப் படி[print out] எடுத்துக் குறிப்பிடத்தக்க பலருக்கும் அனுப்பவுள்ளேன்!

எவர் வேண்டுமானாலும் என் அனுமதியின்றி இதைப் படி எடுக்கலாம்; எவருக்கு வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம்.


பதிவு..........

நவக்கிரகங்களை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு ’ஜோதிடம்’ கட்டமைக்கப் பட்டது போல, எட்டுத் திசைகளையும் ஆதாரக் களமாகக் கொண்டு உருவாக் கப்பட்டது ‘வாஸ்து என்பது அனைத்து வாஸ்து தோஸ்துகளும் அறிந்ததே.
வாஸ்து பற்றி விஸ்தாரமாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், ’திசை’யைப் பற்றி அத்துபடியாய் அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.

திசை என்றால் என்ன?

ஒரு பொருளுக்கும் [உயர்திணை அஃறிணை என்று எதுவாகவும் இருக்கலாம்] இன்னொரு பொருளுக்கும் இடையிலான நேர்க்கோணத்தைத் திசை என்கிறார்கள். [மன நிறைவு தரும் விளக்கம் ஆங்கில விக்கிபீடியாவில்கூட இல்லை]

'The line along which anything lies, faces, moves etc.....' என்கிறது  www.definitions.net.

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகியவற்றை, அல்லது பஞ்சபூதங்களின் சேர்க்கை யால் உருவான பொருள்களைப் புலன்களால் அறிவது போல, திசையும் அறியத்தக்க ஒன்றா?

இல்லை என்பதே அறிவியல் தரும் பதில்.

ஆயினும், பொருள்கள் நிலைகொண்டிருக்கும் இடத்தை அல்லது அவற்றின் இயக்கத்தின் போக்கை அறிய, கிழக்கு முதலான திசைகளை மனிதன் உருவாக்கிக் கொண்டிருக்கிறான்.

உருண்டை வடிவத்தில் சுழன்றுகொண்டிருக்கிற இந்தப் பூமியில் அது எப்படிச் சாத்தியமாயிற்று?

தோன்றி மறைகிற சூரியனை முன்னிலைப்படுத்தி, அது உதயமாகிற நேர்க் கோணத்தைக் கிழக்கு என்றார்கள்.

எனவே, சூரியன் தோன்றுகிற பக்கம் கிழக்கு ஆயிற்று.

கிழக்கில் சூரியன் தோன்றுகிறான் என்பது தவறு. காரணம், உண்மையில் கிழக்கு என்று எதுவும் இல்லை என்பதே. [பாபு என்பவர், ‘செம்புலப் பெயல் நீராவோம்’ என்னும் தலைப்பில், முக நூலில் திசை பற்றி எழுதியிருக்கிறார்]

கிழக்கு என்பதற்கு எதிர்த் திசை மேற்கானது. பின்னர், வடக்கு... தெற்கு.....இப்படித் திசைகள் உருவாக்கப்பட்டன.

இரவுப் பொழுதில், வட திசையில் தெரியும் துருவ நட்சத்திரம், வட திசைக் கான அடையாளமாகவும் கொள்ளப்பட்டது. பழங்காலத்தில், மரக்கலப் பயணங்களில், இந்நட்சத்திரமே திசை அறிய உதவியிருக்கிறது. இன்று புதிய சாதனங்கள் வந்துவிட்டன.

அதே போல, விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட காந்த சக்தியும் வடதிசைக்கான அடையாளமாக அறியப்பட்டது.

காந்த சக்தி என்பது, புவியீர்ப்பு சக்தி போல பூமியில் இயற்கையாக உள்ள ஒரு ஈர்ப்புச் சக்தி. அதுவும் ஓர் அடையாளம்தான். வடதிசையில் ஈர்ப்புச் சக்தி இருக்கிறது. அவ்வளவே. ஈர்ப்புச் சக்தி இருப்பதால் அது வடதிசை ஆகி விடாது.

ஆக, மேற்கண்ட தகவல்களின் மூலம், இந்தப் பூமி உருண்டையில், ஐம்புலன்களால் அறியத்தக்க வகையில் திசை என்பதே இல்லை; அது இயற்கையானதும் அல்ல; அது, மனித குலம் தன் வசதிக்காக உருவாக்கிக் கொண்ட குறியீடு[?] என்பதை நம்மால் அறிய முடிகிறது.

திசை இல்லை என்பதை, அகன்று பரந்து விரிந்து கிடக்கும் விண்வெளியில் மனதைச் செலுத்தினால் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

வான வெளியில் சுழன்று கொண்டிருக்கும் சூரியன் முதலான கோள்களையும், கோடானுகோடி நட்சத்திரங்களையும் ஒன்று மிச்சமில்லாமல் துடைத் தெறியுங்கள் [கற்பனையாகத்தான்].

இப்போது வெற்று வானம் மட்டுமே உங்கள் மனக்கண் முன் விரிகிறது. “கிழக்கே பார்” என்று அசரீரியாக ஒரு குரல் ஒலிக்கிறது. பார்க்கிறீர்கள்.

கிழக்கு தெரிகிறதா? இல்லைதானே?

காரணம், ‘வெளி’க்குத் திசை இல்லை என்பதுதான்.

மீண்டும் அத்தனை நட்சத்திரங்களையும் கோள்களையும் வான வெளியில் இடம் பெறச் செய்யுங்கள். இப்போது மட்டும் திசை தெரிகிறதா என்ன? இல்லைதானே? துருவ நட்சத்திரத்தை வைத்து ஓரளவு அறியலாம் என்கிறார்கள்.

பூமியில் இடம் கொண்டிருப்பதால், மேல், கீழ் என்பனவற்றை உணர்கிறோம். உருண்டை உருண்டையாக விண்வெளியில் அலைந்து திரியும் கோள்களுக்கோ பிறவற்றிற்கோ மேல், கீழ் பக்கவாட்டு என்பனவெல்லாம் இல்லை.

இப்போது, பதிவின் தலைப்புக்கு வருவோம்.

சுழன்று கொண்டிருக்கும் உருண்டை வடிவான இந்தப் பூமிக்கோ, பிரபஞ்ச வெளிக்கோ திசைகளே இல்லாத நிலையில், இந்த வாஸ்துகாரர்கள் அவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டடங்கள் கட்டுவதற்கென்று, கட்டுப்பாடுகளை உருவாக்கியது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

இதை, இந்திய நாட்டின் அரிய பொக்கிஷம் என்கிறார்கள்.

5000 ஆண்டு பழைமையான விஞ்ஞானம் என்கிறார்கள்.

விஞ்ஞானம் என்று சொன்ன அதே வாயால், “தத்துவம் மிகுந்த நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது” என்கிறார்கள் [ustrology. dinakaran.com/vastu.asp]

விஞ்ஞானிகள் கண்டறிந்து சொன்ன cosmic force, காந்தசக்தி பற்றியெல்லாம் கதை கதையாகச் சொல்கிறார்கள்.

நமக்கு, உடல் நலமும் மகிழ்ச்சியும் மன உணர்வுகளாலோ, உடற்பயிற்சி யாலோ கிடைக்காதாம். அவற்றை நமக்கு வாரி வழங்குவது வாஸ்துதானாம்.

இன்னும் எத்தனை எத்தனையோ பொய்யுரைகள்; புளுகுகள்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், பழங்காலக் கட்டடக் கலைஞர் கள், மண்ணின் தன்மை, மரங்கள், கற்கள் போன்றவற்றின் உறுதிப்பாடு, கட்டடத்தின் பரப்பளவு, உயரம், வெளிச்சம், காற்று போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, கலையம்சமும் நீண்ட ஆயுளும் பொருந்திய அழகிய கட்டடங்களைச் சமைப்பதற்குக் கட்டடக் கலை இயலை உருவாக்கினார்கள். வாஸ்து பண்டிதர்கள் மூட நம்பிக்கைகளைப் அதில் புகுத்திவிட்டார்கள்.

இந்த வாஸ்துகாரர்கள், பொது மக்களிடம் அள்ளிவிடும் பொய்கள் அளவிறந்தவை.

இந்த வாஸ்துவுக்கென்று ஒரு கடவுள் இருக்கிறாராம்.

தேவர் அசுரர் போரில், அசுரர்கள் புரிந்த அலம்பல்களை முழுமுதல் கடவுளான சிவனிடம் தேவர்கள் சொல்ல, அவர் கடுங்கோபம் கொள்கிறார். அவர் உடம்பிலிருந்து வேர்வை [நல்ல வேளை, அது வேர்வைதான். வேறு எதுவுமில்லை] சுரக்கிறது. [முழுமுதல் கடவுளுக்கும்கூட வேர்க்குமா என்று குதர்க்கமாகக் கேள்வி எழுப்ப வேண்டாம்]. அந்த வேர்வைதான் வாஸ்துவாக வடிவம் கொண்டு, அசுரர்களை அழித்ததாம்!

சிவபெருமானின் உத்தரவுப்படி, அசுரர்களின் சடலங்களை அழித்துவிட்டு, இந்த மண்ணுலகிலேயே உறங்க ஆரம்பித்தார் வாஸ்து பகவான். முழுமுதல் கடவுளின் கட்டளைப்படி, ஓர் ஆண்டில் எட்டு நாட்கள் மட்டும் விழித்திருந்து, சிவபெருமானைத் துதி பாடுகிறாராம். [அதென்ன கணக்கு எட்டு? புரிந்தால் சொல்லுங்கள். உங்களுக்குக் கணக்கில்லாமல் திருப்பதி லட்டு வாங்கித் தருகிறேன்!]

ஈசனுக்குச் சொந்தமான வடகிழக்குத் திசையில் தலை வைத்து, தென் மேற்கில் இரு பாதங்கள் நீட்டிச் சயனம் செய்கிற இவரை [வாஸ்து புருஷன் என்று சொல்கிறார்கள்] மக்கள் வழிபட்டால் நற்பயன் விளைவது நிச்சயம் என்கிறார்கள் வாஸ்து மேதைகள்!

வீட்டின் தலைவாசல் அருகே பூஜை அறை கூடாது.

காரணம் என்ன தெரியுங்களா?

சாமிக்கு அதிர்ச்சி ஏற்படுமாம்! இழவுக்குப் போய் வர்றவங்களும் வீட்டுக்குத் தூரமான பெண்களும் நுழைவதால் சாமிக்கும் தீட்டுப் படுமாம்!

‘படுக்கை அறையில் தையல் மிஷின் இருந்தால் புருஷன் பெண்ஜாதிக் கிடையே அடிக்கடி சண்டை வரும்.’

ஒன்னுக்கு ரெண்டு பீரோவா வெச்சா, தினசரி சண்டை வருமில்லையா?

வெகு சுளுவா பெண்டாட்டையைக் கழட்டி விட்டுட்டுப் புதுப் பெண்டாட்டி கட்டிக்கலாம்.

‘நீங்கள் பணம் வைக்கிற பெட்டி அல்லது லாக்கர் தென்திசை அறையில் இருத்தல் குற்றம்.’ ஏன்னா, அந்த திசையில் யமதர்மன் இருக்கிறார்.

யமன் உயிரைத்தான் பறிப்பான்னு நினைச்சிட்டிருந்தோம். பணத்தையும் பறிச்சிடுவான்னு தெரியுது!

அதே போல, குபேரனுக்குச் சொந்தமான வடதிசையிலும் செல்வத்தை வைக்கக் கூடாதாம்.

சாமி இருக்கிற பூஜை அறையில் வைத்தாலும் சேமிப்பு அதோ கதிதான்!

படுக்கையறை, சமையலறை, கக்கூஸ்னு எது எதை எங்கெங்கே வைக்க ணும்னு வாஸ்து விஞ்ஞானிகள் அத்துபடியா சொல்லியிருக்காங்க. அதன்படிதான் நீங்க நடந்துக்கணும். மீறினா அதுக்கான தண்டனையை அனுபவிக்க நேரும்.

நீங்க பாட்டுக்கு, கக்கூஸை ஈசான முலையில் அமைச்சிடக் கூடாது. அது ஈசனுக்குரிய மூலை இல்லையா? கக்கூஸ் நாத்தம் அவர் மூக்கைத் துளைக்குமே.

வடக்கு-குபேரன், தெற்கு-யமன், வடகிழக்கு-ஈசன்.....இப்படி எட்டுத் திக்குகளையும் எட்டு கடவுள்கள் காக்கிறார்கள்!

கடவுள் ஒருவனே. அவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்று சொல்லப்படும் நிலையில் திசைக்கொரு குட்டிக் கடவுளை நியமனம் செய்தது யார்?

அந்த முழு முதல் கடவுளேவா?

எட்டு பேரில் ஒரு பெண் கடவுள்கூட இல்லையே? கடவுளர் சமூகத்திலும் பெண் இனத்துக்கு அநீதியா?


‘மாணவர்கள் தெற்கு கிழக்காகப் படுக்க வேண்டும். மாணவியர் கிழக்கு மேற்காக. தம்பதியர் தெற்கு மேற்காக.....’

சின்ன வீட்டோடு படுக்கும் போது......?

‘பிரபஞ்ச சக்தியை வீட்டுக்குள் வரவழைக்கிறது வாஸ்து.’

அந்தச் சக்திதான் ஒவ்வொரு அணுவிலும் பரவிக் கிடக்கிறதே, அப்புறம் என்ன வரவழைக்கிறது?

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ கதைவிட்டு மக்களில் பெரும்பாலோரை வசியம் செய்து பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வாஸ்து விற்பன்னர்கள்.

 சிற்பம் மற்றும் கட்டடக்கலை வல்லுநரான கணபதி ஸ்தபதி பற்றி அறியாதார் வெகு சிலரே. நம் பெருமதிப்புக்குரியவர். 2011 ஆம் ஆண்டு காலமானார். அவரிடம், “இன்று பயன்பாட்டிலுள்ள வாஸ்துவும் தாங்கள் அறிந்த வாஸ்து வும் ஒன்றா?” என்று கேட்கப்பட்ட போது, [எழுத்தாளர் திலகவதியின் பேட்டி. ‘இவர்கள் இப்படித்தான் சாதித்தார்கள்’ என்னும் நூலில். அம்ருதம் பதிப்பகத்தின் 2006 ஆம் ஆண்டு வெளியீடு] “நான் அறிந்த வாஸ்து வேறானது” என்கிறார்.

அவர் குறிப்பிடும் வாஸ்து ஓரளவுக்கேனும் அறிவுபூர்வமாக இருக்கும் என்று நம்பலாம்.

அது எவ்வாறிருப்பினும், இன்று நாம் ஏற்க வேண்டிய தலையாய கடமை, அறியாமை மிகுந்த நம் மக்களை இந்தப் பொய்யர்களிடமிருந்து விடுவிப்பது தான்.

’வாஸ்து சம்பந்தமான புளுகுகளை வெளியிட வேண்டாம்’ என்று மனோ டேனியல் என்பவர் ‘இந்து’ஆங்கில நாளிதழுக்கு ஒரு கடிதமே எழுதினாராம்! [www.keetru.com]

'அரசியல் சாசனப்படி, விஞ்ஞானம் அல்லாத இந்த வாஸ்துவுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று பகவான்ஜி ரயானி என்பவர் மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது நக்கீரன் வார இதழ்ச் செய்தி.

இப்படிச் சிலர் தம்மால் இயன்றதைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நம்மால் முடிந்தது, பதிவுகள் எழுதுவதும் பாராட்டிப் பின்னூட்டங்கள் இடுவதும் மட்டும்தான்.

*****************************************************************************************************************************************************














வியாழன், 5 பிப்ரவரி, 2015

வெடித்துச் சிதறப் போகிறது வெண்ணிலா!! எப்போது?! [அறிவியல் பதிவு]

அந்தவொரு காலக்கட்டத்தில் மனிதன் வாழ்ந்திருந்தால், அவன் எம்பிக் குதித்து[!!!]த் தொட்டுவிடும் தூரத்தில்தான் ‘சந்திரன்’ என்னும் துணைக் கோள் இருந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். காரணம், சொல்பவர்கள் விஞ்ஞானிகள்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, வான வெளிதனில், அதி பிரமாண்டமான ஒரு பொருள் பூமியின்மீது மோதியதால் சிதறிய ஒரு பகுதிதான் நிலவாக உருவெடுத்ததாம். அப்போது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் துக்கடா 14,650 கிலோ மீட்டர்தானாம்!
அப்போது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரமெல்லாம் தேவைப்படவில்லை; வெறும் ஆறு மணி நேர அவகாசத்தில்[பகல் மூன்று மணி நேரம்; இரவு மூன்று மணி நேரம்.] ‘கரகர’வென்று ஒரு முறை சுழன்று முடித்துவிடும்.

இன்று பூமிக்கும் சந்திரனுக்குமான இடைவெளி 2லட்சத்து 36,000 கி.மீ. என்கிறார்கள்.

பூமித் தாயிடம் பிணங்கிக்கொண்டு சந்திரன் இத்தனை தொலைவு விலகிப் போகக் காரணம் என்ன?

விஞ்ஞானிகள் சொல்வதைக் கவனமாகப் படியுங்கள்.

‘சந்திரன் பூமியைச் சுற்றும்போது சும்மா சுற்றுவதில்லை; கடல் நீரைத் தன் பக்கம் ஈர்க்கிறது. இதன் விளைவாக, சில நேரங்களில் கடல் நீர், சற்று உள்வாங்கியும் சில நேரங்களில் கரை கடந்தும் இருக்கும். இதைத்தான் ஆங்கிலத்தில் tides என்கிறார்கள். கடலின் நீர் மட்டம் அதிகரிப்பதற்கும் குறைவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும் சந்திரனின் ஈர்ப்புச் சக்தி ஒரு முக்கிய காரணம்.

இதே காரணத்தால்தான், சந்திரன் பூமியிடமிருந்து விலகி விலகிச் செல்கிறது[எப்படி என்பது விஞ்ஞானிகளுக்கே வெளிச்சம்!]. இடைவெளியும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க, பூமியின் சுழற்சி வேகமும் குறைந்துகொண்டே வருகிறது. அதன் விளைவாக, அது தன்னைத்தானே சுற்றும் நேரமும் அதிகரிக்கிறது.

இடைவெளி 14,650 ஆக இருந்தபோது தனக்குதானே சுற்றிவரத் தேவைப்பட்ட 6 மணி நேரம், 90கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இடைவெளி அதிகரித்த நிலையில் 18 மணி நேரமாக ஆனது. அதுவே, 62கோடி ஆண்டுகளுக்கு முன்பு 22 மணி நேரமாக இருந்தது. இன்று 24 மணி நேரம்.

100 ஆண்டுகளுக்கு 3கி,மீ.அளவில் சந்திரன் விலகிக்கொண்டே இருக்கிறது. ஒரு நாளின் அளவும் 0.02 வினாடிகள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இந்நிலை தொடரும்போது, 700 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, பூமியின் ஒரு நாள் காலம் 50 மணி நேரமாக ஆகும்.

500 கோடி ஆண்டுகளிலேயே சூரியன் மிக மிகப் பெரிதாக மாறிவிடும். இதன் காரணமாக, விலகி விலகிப் போய்க்கொண்டிருக்கிற சந்திரன், மீண்டும் , இந்தப் பூமியை நோக்கிப்[பயப்பட வேண்டாம். நாம் சம்பாதிக்கும் புண்ணியத்தால் அப்போது நாமும் நம் சந்ததியாரும் சொர்க்கத்தில் சுகபோக வாசிகளாக இருப்போம்!] பயணம் புறப்பட்டுவிடும்.

ஒரு கட்டத்தில், பூமியின் மீது மோதி வெடித்துச் சிதறி நிர்மூலம் ஆகும்!

##########################################################################################################

‘விஞ்ஞானச் சிறகு’[பிப்ரவரி - 2015] என்னும் அறிவியல் மாத இதழில், சிதம்பரம் ரவிச்சந்திரன் எழுதிய கட்டுரையின் உள்ளடக்கத்தைக் கொஞ்சம் முறை மாற்றித் தொகுத்து, சற்றே எளிமைப்படுத்தியுள் ளேன்.

சிதம்பரம் ரவிச்சந்திரனுக்கு என் மனமுவந்த நன்றி.

########################################################################################################## 









புதன், 4 பிப்ரவரி, 2015

ஆசைப்பட்ட குழந்தையைப் பெறுவதற்கான எளிய வழி! இயற்கை நெறி!!

9493 பேர் விரும்பி வாசித்த பதிவு இது! இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடக்க வேண்டும் என்னும் ‘பேராசை’யில் மீண்டும் வெளியிடுகிறேன்!!!

னித் தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் ‘மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை’ என்னும் நூலில் எப்போதோ படித்தது இது. ஆசைப்பட்ட பிள்ளையை இயற்கையான முறையில் பெறுவதற்கான வழிவகை அதில் விவரிக்கப்பட்டிருந்தது. அதை உள்ளது உள்ளபடி என் நடையில் தருகிறேன்.

மூக்கின் வலது துவாரத்தில் சுவாசம் நிகழ்வதை ‘சூரிய கலை’ என்றும், இடது துவாரத்தில் அது நிகழ்ந்தால், அதைச் ‘சந்திர கலை’ என்றும் சொல்வார்கள். இது உங்களுக்கு[ஆண்களுக்கு]த் தெரிந்ததுதான்.

இந்தப் பதிவின் மைய இழையே இதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் நினைவு கொள்வது மட்டுமல்ல, உங்கள் அன்புக்குரியவளிடமும் சொல்லி வைப்பது மிகவும் அவசியம்.

கீழ்க்காணும் விடயத்தையும் அவர் காதில் போட்டு, மனதில் ‘சக்’கென்று பதிய வைப்பது உங்களின் தலையாய கடமை.

விந்தணுக்கள், வீரியத்துடன் வெளிப்பட்டு, பெண்ணின் யோனிக் குழாயில் பரவி, அவளைச் சிலிர்க்கச் செய்யும் அந்தத் தருணத்தில், உங்கள் நாசியில் ‘சூரிய கலை’ சுவாசம் [நாசியின் வலது துவாரத்தில் மூச்சுக் காற்று உட்புகுந்து வெளியேறுவது] இடம் பெறுமேயானால், கருவில் உருப்பெறும் சிசு ஆணாக இருக்கும்.

மூக்கின் வலது துவாரத்தில் சுவாசம் நிகழ நீங்கள் ஆற்ற வேண்டிய பணி என்ன?

அது மிக மிக எளிய ஒன்று.

சேர்க்கை கொள்வதற்கு முன்பு, நீங்கள் உங்கள் மனைவியை எதிர்கொள்ளும் நிலையில் இடப்புறமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும். படுத்த சிறிது நேரத்திலேயே, வலது துவாரத்தில் சுவாசம் நிகழ்வதை உங்களால் அறிய முடியும். இதுவே சூரிய கலை!

எதிரெதிராக, ஒருவர் முகம் ஒருவர் பார்த்தவாறு, ஒருக்களித்துப் படுத்த நிலையில் புணர்ச்சி செய்வது சிரமம் ஆயிற்றே என்று நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால், நீங்கள் மன்மதக் கலையை இன்னும் சரிவரக் கற்கவில்லை என்று அர்த்தம்.

தொடர்ந்து முயலுங்கள்; சாதிப்பீர்கள்.
இதே போல, பெண் பிள்ளை பெற விரும்பினால், நாசியின் இடது துவாரத்தில் சுவாசம் நிகழும் வகையில், வலப்பக்கமாக ஒருக்களித்துப் படுத்துக் கலவி புரிய வேண்டும்.

ஆரம்ப நிலையில் இம்மாதிரி முயற்சிகள் தோல்வியில் முடியலாம். இன்பம் பெறுதலே நோக்கம் என்றில்லாமல், விரும்பிய சிசுவைப் பெறுவதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

சூரிய கலை, சந்திர கலைன்னு கணக்குப் போட்டிட்டிருந்தா கலவியில் ஈடுபாடு குறைஞ்சிடுமேன்னு நீங்க கவலைப் படுவதும் புரிகிறது. விரக தாபத்தைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசுவதன் மூலம் உணர்ச்சி வேகம் தணியாமல் பாதுகாக்கலாம்.

மேற் சொன்ன முறையைக் கையாண்டும் ஆசைப்பட்ட ஆண் குழந்தையைப் பெற இயலவில்லை என்றால், ஆணின் குரோமோசோமில் y இல்லை என்பது அறியற்பாலது.

ஆணின் x ம் பெண்ணின் x ம் சேர்ந்தால் பெண் குழந்தை.

பெண்ணின் x ம் ஆணின் y ம் சேர்ந்தால் ஆண் குழந்தை. ஆணிடம் y குரோமோசோம் இல்லையாயின் ஆண் குழந்தைக்கு வாய்ப்பு இல்லை என்பது போன்ற உடற்கூற்று உண்மைகளெல்லாம் நீங்கள் அறிந்தவைதாம்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பயன் தரும் என்று நீங்கள் நம்பினால், நன்றி சொல்ல நினைப்பீர்கள். அது இப்போது வேண்டாம். பெண்ணோ ஆணோ விரும்பிய குழந்தையைப் பெற்ற பிறகு சொல்லலாம். அதுவும் எனக்கல்ல; சுவர்க்கத்தில் உலா வரும் மறைமலை அடிகளாருக்கு!

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

பதிவர் அமுதவன் படைத்த அமுத நாவல்!..... ஒரு பாராட்டுரை!

கண்ணெதிரே நடக்கிற அல்லது கற்பனையில் உருவாகிற ஒரு காட்சியையோ நிகழ்ச்சியையோ வார்த்தைகளால் வடித்தெடுப்பது, எந்தவொரு ‘சராசரி’ எழுத்தாளனுக்கும் சாத்தியமே. ஆனால், நாடி நரம்புகளில் ஊடுருவும் இனம் புரியாத உணர்வுகளுக்கு வடிவம் கொடுப்பது தேர்ந்த படைப்பாளர் களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

தேர்ச்சி பெற்ற அத்தகைய எழுத்தாளர்களில் நம் சக பதிவர் அமுதவனும் ஒருவர்.

‘ரகசியமாய் ஒரு பரிசு’[மாலைமதி - 08.04.1993] என்பது இவர் எழுதிய புதினம்.

மாணவர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட, ஓர் ஆசிரியைக்கும், “டீச்சர், என்னை பெயிலாக்கிடுங்க. பாஸ் ஆயி வேற யார்கிட்டயும் படிக்க எனக்கு இஷ்டமில்ல. எப்பவும் உங்ககிட்டதான் படிக்கணும்னு தோணுது. இது சத்தியம்” என்று ஆவேசமாய்ப் பேசும் அவரது மாணவனுக்கும் இடையிலான உறவைக் கொஞ்சமும் கொச்சைப்படுத்தாமல் கதையாக்கியிருக்கிறார்.

இந்த நாவலின் நாயகியான ‘டீச்சர்’ பெயர் சந்திரிகா.

காலையில் வகுப்பு தொடங்கியதும், “எல்லோரும் சாப்பிட்டு வந்தீங்களா?” என்று கேட்டுப் பட்டினியாய் வந்தவர்களுக்குத் தன் மதிய உணவைக் கொடுத்துப் பசியாற வைக்கிற ஒருவரைப் பார்த்திருக் கிறோமா? இல்லைதானே? அப்படியொருவரை மானசீகமாய்ப் படைத்துத் தன் புதினத்தின் தலைவி ஆக்கியிருக்கிறார் அமுதவன்.

“பசி இருந்தா பாடம் ஏறாது. பசி மட்டும்தான் ஞாபகத்தில் மிஞ்சியிருக்கும். ஏழைக் குழந்தைகள் பட்டினியோட படிச்சா படிப்பு ஏறாதுன்னுதான் காமராஜர் இலவச உணவுத் திட்டத்தையே கொண்டுவந்தார்” என்று ஓரிடத்தில் அவரைச் சொல்லவும் வைக்கிறார்.

தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணுக்குக் கிட்டத்தட்ட வந்து முக்கி முனகுபவர்களுக்குக் கூடுதலாக ஐந்தோ ஆறோ மார்க்குகள் போட்டு அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பவள் இந்தச் சந்திரிகா.

“என்ன மூளை பார்த்தியா? பார்வைக்கு எத்தனை சாதுவாய் இருக்கும் இந்தப் பிள்ளை எவ்வளவு திறமையை ஒளித்து வைத்திருக்கிறது பார்” என்று வகுப்பறையில் மாணவர்களை உற்சாகப்படுத்தவும் செய்வாள் இவள்.

இன்னும் இப்படி எத்தனையோ நல்ல குணங்களின் இருப்பிடமான இவளை அத்தனை மாணவர் களுக்கும்  மெத்தப் பிடித்துப்போனதில் ஆச்சரியம் இல்லை. குறிப்பாக, தாமோதரன் என்னும் மாணவனைக் காந்தமாய்க் கவர்ந்து ஈர்க்கிறாள்.. அந்த ‘ஈர்ப்பு’, விட்டு விலக முடியாத நேசமாகவும் மாறுகிறது.

அந்த நேசம், “டீச்சருக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது” என்று சொன்ன சக மாணவன் மீது பாய்ந்து மூர்க்கமாய்க் கீழே தள்ளி, அடித்துத் துவைக்கும் அளவுக்குத் தாமோதரனை ஆவேசம் கொள்ள வைத்தது என்பதையும், டீச்சரிடமே, “டீச்சர்...டீச்சர்...இது நியாயமா டீச்சர்” என்று கேட்டு, எதிரிலிருந்த தூணில் ‘மடேர்...மடேர்’ என்று முட்டி மோதி மயங்கி அவனை விழ வைத்தது என்பதையும் உணர்ச்சிபூர்வமாய் விவரித்திருக்கிறார் கதாசிரியர்.

தன் குடும்பத்தாருடன் தாமோதரனையும் பிக்னிக் அழைத்துப் போகிறாள் சந்திரிகா.

பஸ்ஸில் அவளுக்குப் பக்கத்தில் உட்காரும் வாய்ப்பை எதிர்பார்த்து ஏமாறுகிறான் தாமோதரன்.

பின் சீட்டில் அமர்ந்து அவளின் பின்னலையும், சந்தன நிற சங்குக் கழுத்தையும் சோளி அழுத்திய தோள்பட்டையையும் ரசித்து, ‘இது தப்பில்லையா?’ என்று மறுகுவதையும் காட்சிப்படுத்துவதன் மூலம் அவன் அவள் மீது கொண்டிருந்த நேசம் ஆசையாகப் பரிணாமம் பெற்றுவிட்டதை விரசம் கலவாத வார்த்தைகளால் விவரித்திருக்கிறார் அமுதவன்.

பிக்னிக் முடிந்து ஊர் திரும்ப இருந்தபோது, “ஊருக்குத் திரும்பணுமேன்னு வருத்தமா இருக்கு டீச்சர்” என்கிறான் தாமோதரன். முன்னதாக, “பூஜை அறையிலிருந்து வந்தபோது நீங்க ரொம்ப அழகா இருந்தீங்க” என்று அவன் சொல்லியுமிருக்கிறான். இதன் வாயிலாக, அவனின் நேசத்தில் காமம் கலந்துவிட்டதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறாரோ என்று எண்ண வைக்கிறது.

வகுப்பறையில் ஒரு முறை, மனம் கவர்ந்த தலைவரைப் படம் வரையும்படி மாணவர்களிடம் சந்திரிகா சொன்ன போது, இவன் மட்டும் அவளின் உருவத்தை வரைந்து கொடுக்க, அதைக் கடிந்துகொண்ட சந்திரிகா, பின்னொரு கட்டத்தில், “நீ வரைஞ்ச படத்தை அப்படியே கிழிச்சி பீரோவில் வச்சிகிட்டேன்” என்று அவளைச் சொல்ல வைத்ததன் மூலம் சந்திரிகாவின் மனதில் இடம்பெற்றுவிட்ட உணர்ச்சிப் போராட்டத்தையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

ஆனாலும், இருவருக்குமிடையேயான இந்த விரும்பத்தகாத உறவு தொடர்வைதைப் பக்குவப்பட்ட அவள் மனம் விரும்பவில்லை. இரு கைகளாலும் அவன் முகத்தை ஏந்திச் சொல்கிறாள்:

“இதோ பாரு தாமு, இதெல்லாம் ஒருவிதமான் பிரமை. மன பிரமை. நம்மை மீறிக்கொண்டு எங்கேயோ சென்று உரசும் உரசல். மனத்தை நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவில்லையென்றால், இப்படித்தான் எங்கேயோ தறிகெட்டு ஓடும். ஆனால், உன்னை நான் தப்புச் சொல்ல மாட்டேன். ஆயிரத்தில் ஒரு மாணவனுக்கும் டீச்சருக்கும் இம்மாதிரியான மன ஈடுபாடு உருவாவது சாத்தியம்தான்.  என்னவென்றே புரியாத ஒரு நெருக்கம்...பாசம்...அன்னியோன்னியம். இந்தப் பருவத்தில் உள்மனதில் என்னென்னவோ பிம்பங்கள் விழும். ..என்னென்னவோ நினைப்புகள் வரும். இவையெல்லாம் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டிய நினைவுகள்தான். காலப்போக்கில் இவையெல்லாம் மறிப்போகும்.என்றாலும் அந்தந்த நேரத்தில் இவைதான் சாசுவதம் போலத் தோன்றும். என்றைக்குமே அழியாத, அழிக்க முடியாத சித்திரங்கள் போல் காட்சி தரும். இவை எல்லாமே தற்காலிகமானவை தாமு. கொஞ்ச நாட்கள் இருந்து மாறிவிடக் கூடியவை. இதுக்காக மனதைப் போட்டு அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. பேசாமல் இருந்தால் அதுபாட்டுக்கு வடிந்துவிடும்.

சந்திரிகாவுக்குத் திருமணம் ஆக இருப்பதை அறிந்து, அவளைச் சந்தித்து, தூணில் மோதி மயங்கிச் சாய்ந்த தாமோதரன் பின்னர் மயக்கம் தெளிந்த நிலையில், “இதற்கெல்லாம் ஒருவகையில் நானும் காரணம். எது எப்படியோ எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று சந்திரிகா சொன்ன போது, “எனக்குப் பைத்தியம் பிடிச்சுரும் டீச்சர்...எங்கேயாவது விழுந்து செத்துப் போயிருவேன்” என்கிறான் தாமோதரன்.

அப்படியெல்லாம் நடக்க விடமாட்டேன். உன் உணர்வுகளைக் கௌரவித்துத்தான் உன்னை அனுப்பப் போறேன். உனக்கு நான் ஒரு பரிசு தருவேன். கொஞ்சம் சம்பிரதாயங்களையும் பண்பாடுகளையும் மீறிய பரிசுதான். உலகம் ஒப்புக்கொள்ளாது. ...” என்று சொல்லி, அவன் முகத்தைக் கைகளில் ஏந்தி, அவன் நெற்றி கண்கள் கன்னம் என்று முத்தமிடுகிறாள்; “உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இது இருக்கட்டும். நாம் இப்போது பிரிவோம்...இனிமேல் சந்திக்கவே வேண்டாம்” என்கிறாள் டீச்சர் சந்திரிகா.

இப்படி இவள் சொல்வதோடு நிறுத்தியிருந்தால் கதையும் முடிகிறது.

அவ்வாறு செய்யாமல், சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, தாமோதரனை, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி எல்லாம் முடித்த பல்கலைக்கழகப் பேராசிரியராக்கிக் கதையைத் தொடங்குகிறார் அமுதவன்[இதுவரையிலான கதை, இடையிடையே பின்னோக்கு உத்தி மூலம் சொல்லப்பட்டது].

வகுப்பு மாணவர்களில் ஒருத்தியாகச் சந்திரிகாவை எதிர்ப்படுகிறான் அவன்.

சில சந்திப்புகளுக்குப் பிறகு, அவள் விதவையாகி, பல்கலைக் கழக மாணவியானதை அறிகிறான்.

தன்னுடைய டீச்சரே தனக்கு மாணவியாக வர நேர்ந்திருக்கும் விசித்திரம் அவனுக்கு ஆச்சரியம் அளித்தது.

இரவெல்லாம் யோசித்துப் பார்த்தபோது, ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது.

‘மாணவப் பருவத்தில் ஏற்பட்ட அந்த உறவு இனிமேல் வெவ்வேறு வடிவங்கள் எடுக்கலாம்.’

‘கணவனை இழந்து நிற்கும் டீச்சரின் துயரத்தில் பங்கேற்கப் போகிறோம் என்ற சாக்கில் ஆண் பெண் உறவில் போய் முடியலாம்....’

‘டீச்சர் எம்.ஏ. முடிக்கட்டும்...பெரிய வேலைக்குப் போகட்டும்.’

‘டீச்சருக்கும் தனக்கும் இருந்த உறவு எந்த வகையிலும் கொச்சைப்பட்டுப் போக வேண்டாம்.’

‘அந்த ரகசியப் பரிசுக்கு எந்தப் பங்கமும் வந்துவிடக் கூடாது. காலங் காலங்களுக்கும் அது எனக்குள்ளேயே இருந்து எனக்குள்ளேயே மடியட்டும்.’

‘இவ்வாறான எண்ணங்களுக்குப் பிறகு, ஒரு வெள்ளைத் தாளை எடுத்துத் தன்னுடைய ராஜினாமாக் கடிதத்தை எழுத ஆரம்பித்தான் தாமோதரன்.’ என்று முடிகிறது நாவல்.

படித்து முடித்தவுடன், ‘எத்தனை அருமையான நாவல்!’ என்று மனம் சிலாகித்தது; ‘எது எப்படியோ சந்திரிகாவும் தாமோதரனும் இணைந்து வாழ வாப்பில்லாமல் போனதே’ என்று வருந்தவும் செய்தது.

=============================================================================================

சூழ்நிலை காரணமாக, கருத்துரைகளுக்கு மறுமொழி வழங்க ஒரு நாள் தாமதம் நேரலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

============================================================================================