திங்கள், 20 ஏப்ரல், 2015

நான் ஒரு ரவுடியிடம் உதை வாங்கிய கதை!!!

“சேலம் போய் வந்ததிலிருந்து ஒரு மாதிரி இருக்கீங்க. சொல்லுங்க, என்ன நடந்தது?” என்றாள் என் மனைவி.

“எதுவும் நடக்கல. இயல்பாத்தானே இருக்கேன்.” கொஞ்சமாய்ச் சிரிக்க முயன்று தோற்றேன்.

“மூஞ்சி, கறுத்துச் சுண்டிப் போயிருக்கு. நாலு நாளா எதைப்பத்தியோ தீவிரமா யோசிச்சிட்டிருக்கீங்க. வேண்டத்தகாதது ஏதோ நடந்திருக்கு. மறைக்காம சொல்லுங்க.” என் தாடையைப் பற்றி நிமிர்த்திப் பரிவுடன் நோக்கினாள் என்னவள்.

“அன்னிக்கி, சேலம் போன வேலை முடிஞ்சி   பஸ் நிலையம் போயிட்டிருந்தேன். என் பின்னால பைக்கில் வந்த ஒரு முரடன் என்னை இடிச்சித் தள்ளிட்டான். குப்புறச் சரிந்து எழுந்து, உடம்பு துடைச்சி நிமிர்ந்தபோது, “முண்டம், , ஓரமா போறதுக்கென்ன?”ன்னு  அவன் முறைச்சான்.

“ஏண்டா தடிமுண்டம், இடிச்சதும் இல்லாம திமிர் பேசுறியான்னேன். ‘ஆமா, திமிர்தான் பேசுறேன். என்னடா பண்ணுவே’ன்னு பைக்கை ஸ்டேண்டு போட்டுட்டு என்னை நெருங்கினான்.......லேசா சாராய நெடி. போதையில் இருந்தான்.”

“ஐயோ...அப்புறம்.....”

“கூட்டம் கூடிச்சி. எல்லாரும் வேடிக்கைதான் பார்த்தாங்க. ‘என்னடா, குடிச்சுட்டு வம்புக்கு வர்றே. மரியாதையா வீடு போய்ச் சேருன்னு நான் சொல்ல,  ‘மரியாதையாவா?’ன்னு நக்கலா கேட்டுட்டு, அசிங்கமாவும் கொச்சையாவும் திட்டினான். என்னால, அவனளவுக்குத் தரம் தாழ்ந்து பேச முடியல. பன்றி...நாய்...கழுதைன்னு ஏதோ உளறினேன்.........”

குறுக்கிட்டாள் என் மனைவி. “என்னங்க ஆச்சு? சீக்கிரம் சொல்லி முடிங்க.”

“வாய்ச் சண்டையோட விவகாரம் முடிஞ்சிடும்னு  நினைச்சேன். ஆனா அவன் நான் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் என் நெஞ்சில் எட்டி உதைச்சிட்டான். தரையில் மல்லாக்க விழுந்து உருண்டேன். உதைக்கு உதை கொடுக்கத்தான் நினைச்சேன். அதுக்குள்ள ஆயிரம் யோசனை. ரெண்டு பேரும் உதைச்சிட்டுக் கட்டிப்புரண்டு, ரத்த காயம் பட்டு, போலீஸ், கோர்ட்டுன்னு.....இப்படி மனசுக்குள் பட்டிமன்றம் நடத்தி ஒரு முடிவுக்கு வர்றதுக்குள்ள அவன் இடத்தைக் காலி பண்ணிட்டுப் போய்ட்டான். ஒரு பெரிய கும்பலுக்கு மத்தியில் நான் கூனிக்குறுகி ஒடுங்கி நின்னேன். அப்புறம் எப்படியோ வீடு வந்து சேர்ந்தேன். விழுந்த வேகத்தில் எழுந்து போய் அவனை உதைக்காம இருந்துட்டமேன்னு வருத்தமா இருக்கு. ”

“தெருவில் திரியற ஒரு சொறி நாய் நம்மைக் கடிச்சுடுது. அதை நாம திருப்பிக் கடிக்கலையேன்னு வருத்தப்படுறோமா? அது அவமானம்னு நினைக்கிறோமா? அது மாதிரிதாங்க இதுவும். ஒரு கனவா நினைச்சி மறந்துடுங்க” என்றாள் என்னவள். என்னை அமைதிப்படுத்த இன்னும் என்னவெல்லாமோ சொன்னாள். அவற்றில் எதுவும் என் நெஞ்சில் பதியவில்லை.

நாட்கள் கழிந்தன.

அன்றைய செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது, ‘பிரபல ரவுடி கைது’ என்று ஒரு செய்தியின் தலைப்பு கண்ணில் பட்டது. ரவுடியின் புகைப்படமும் வெளியாகியிருந்தது.

‘தங்கச் சங்கிலி பறிப்பு, வழிப்பறி ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தவன் சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி கலிவரதன். காவல்துறையால் தேடப்பட்டு வந்த இவன், களவாடிய பைக்கில் போன போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாரால் கைது செய்யப்பட்டான். இவன் கொலை, கொள்ளை வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவன். இவனால் வெட்டிக் கொல்லப்பட்டவர்களில், காவல்துறை ஆய்வாளரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.’

மனைவியை அழைத்து, அந்தச் செய்தியைப் படிக்கச் சொன்னேன்.

“ஐயய்யோ.....இன்ஸ்பெக்டரையே வெட்டிக் கொன்னவனா? இவனோடவா நீங்க சண்டை போட்டீங்க?”

“நல்லா ஞாபகம் இருக்கு. இவனோடதான்.”

“அவனை உதைக்காம விட்டதுக்கு வருத்தப்பட்டீங்களே. உங்க கையோ காலோ அவன் மேல பட்டிருந்தா உங்களை வெட்டிப் போட்டிருப்பான். நம்ம குல தெய்வம்தான் உங்களைக் காப்பாத்தியிருக்கு. அவனைத் திருப்பித் தாக்கலையேன்னு நினைச்சி இனியும் வருத்தப்படாதீங்க; நடந்ததை அடியோட மறந்துடுங்க” என்றதோடு, மாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள் என் மனைவி.

“அதுக்கென்ன மறந்துட்டாப் போச்சு” என்றேன்.

அது வெறும் வாய் வார்த்தைதான். இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், ஒரு குடிகாரப் பொறுக்கியிடம் பட்ட அவமானத்தை மறப்பது அத்தனை எளிதா என்ன?

சற்று முன்னர்கூட  அந்தச் சம்பவம் மனதை உறுத்தியது; வருத்தியது. அந்த வருத்தத்தைத்தான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். இதன் மூலம் கொஞ்சம் ஆறுதல் பெறமுடியும் என்பது என் நம்பிக்கை.

===========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக