வியாழன், 31 மே, 2018

ஜோதிடலோகம்![பொழுதுபோக்குக் கதை]

சொர்க்கத்தை மேற்பார்வையிட்டுத் திரும்பிய இறைவி, இறைவன் வெற்று வானத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டு, “பிரச்சினை எதுவானாலும் தியானம் பண்ணினா தீர்வு கிடைக்கும்னு சொல்லியிருக்கேன். ஏதோ பிரச்சினையில் சிக்கியிருக்கீங்கன்னு உங்க முகமே சொல்லுது. மோனத்தவத்தில் மூழ்காம பிது பிதுன்னு முழிச்சிட்டிருக்கிங்களே, ஏன்?'' என்று கேட்டார்.

“அதுக்குத்தான் உட்கார்ந்தேன். மனசை ஒருமுகப்படுத்த முடியல” என்றார் இறைவன், வருத்தம் தோய்ந்த குரலில்.

“ஏனாம்?”

“பகுத்தறிவாளன்கிற பேர்ல, கண்ட கண்ட கசமாலங்கள் எல்லாம் 'கடவுள் எப்போ பிறந்தார்? எப்போ மறைவார்? எப்பவும் இருந்துகொண்டே இருப்பார்னா அது எப்படிச் சாத்தியம்?'னு அடுக்கடுக்கான கேள்விகளால கிடுக்கிப்பிடி போட்டுட்டே இருக்கானுக. நம்ம அவதாரம்னு சொல்லிட்டுத் திரியற ஆட்களால அவங்களைச் சமாளிக்க முடியல. யோசிச்சிப் பார்த்தா எனக்குமே பதில் தெரியல. இனி என்ன செய்யறதுன்னும் புரியல.”

“கவலையை விடுங்க. பூலோகத்திலிருந்து ஒரு ஜோதிடரை வரவழைச்சி, 'கோடிகோடி கோடானுகோடி பிரபஞ்ச ஆண்டுகளுக்கு முன்னால, இன்ன நட்சத்திரத்தில் கடவுள் தோன்றினார்; யுகயுகயுகாதி ஆண்டுகளுக்கு அப்புறம், இன்ன நட்சத்திரத்தில் மறைவார்; மறுபடியும் தோன்றுவார்...மறைவார்...தோன்றுவார்..மறைவார்..... இப்படியாகத்தானே, இடைவெளி விட்டுத் தோன்றுவதும் மறைவதுமாக எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்' அப்படீன்னு பூலோகத்திலுள்ள எல்லா ஊடகங்களுக்கும் அறிக்கை தரச் சொல்லிடறேன். யோசிச்சி யோசிச்சி மண்டை காய்ந்து நாத்திகர்கள் 'மெண்டல்' ஆயிடுவாங்க. அப்புறம் எவனும் கேள்வி கேட்க மாட்டான்” என்றார் இறைவி.

“ஜோதிடர்கள் விடுற அறிக்கையை மக்கள் நம்புவார்களா?” -இது இறைவனின் சந்தேகம்.

“என்ன நீங்க, உலகம் புரியாத கடவுளா இருக்கீங்க. பூலோகமே இந்த ஜோதிடர்கள் பின்னாலதான் போயிட்டிருக்கு” என்றார் இறைவி.

இறைவனின் வதனத்தில் பேரானந்தம் பரவியது!

---------------------------------------------------------------------------------------------------------------

6 கருத்துகள்:

  1. எதை ஒழித்தாலும் ஜோதிடத்தை ஒழிப்பது கடினமான செயல்தான் போலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிக மிகக் கடினம்.

      நன்றி கில்லர்ஜி. உடனடி வருகைக்கும் நன்றி.

      நீக்கு
  2. நீங்க மெண்டல்னு ஒத்துக்கிறீங்க?

    பதிலளிநீக்கு
  3. அருமை
    ஒரு சிறு கால இடைவெளிக்குப் பிறகு இன்றுதான் வலையுலகிற்குத் திரும்பியுள்ளேன்.
    இனி தொடர்வேன்
    நன்றி

    பதிலளிநீக்கு