கதை | நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை | நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 ஜூலை, 2021

'அடச்சீ...ச்சீ...ச்சீய்' கதை!!!

2012ஆம் ஆண்டில், குமுதம் வார இதழ், 'ச்சீ..ச்சீய்...கதைகள்' என்னும் தலைப்பில் சிறுசுகளைச் சீரழிக்கும் கதைகளை வெளியிட்டுச் சீரும்சிறப்புமாய்த் தன் விற்பனையைப் பெருக்கிக்கொண்டது.

இம்மாதிரிக் கதைகளைத் தன்னால் மட்டுமே படைத்தளிக்க முடியும் என்று அது பெருமைப்பட்டுக்கொண்டது என்பது செவிவழிச் செய்தி. 

குமுதத்திற்குச் சவால்விடும் வகையில் இந்த நம் வலைப்பக்கத்திலும் ஒரு 'ச்சீ...ச்சீய்...கதை'யை வெளியிட்டோம். பல நாட்களாக, 'சீரியஸ்' ஆன பதிவுகளையே படித்துப் படித்துச் சோர்ந்து கிடக்கும் உங்களுக்கு உற்சாகம் ஊட்டுவதற்காக இந்தச் சிற்றின்பக் கதையை மீள்பதிவாக வழங்குகிறோம்!

குணாளன்!

பெயருக்கேற்ப, நல்ல குணங்கள் உள்ள இருபத்தைந்து வயது வாலிபன்.

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன். பொழுது போகாத நேரங்களில், 'காந்தி’யின் ‘பிரமச்சரியம்’, திரு.வி.க.வின் ‘பெண்ணின் பெருமை’ போன்ற மன மாசுகளைப் போக்கும் நல்ல புத்தகங்களை மட்டுமே படிப்பவன்.

வாரப் பத்திரிகைகளும் படிப்பதுண்டு.

'குமுதம்’ படிக்கும்போது, சினிமாச் செய்திகள், கவர்ச்சிப் படங்கள், விரசம் கலந்த ‘அரசு பதில்கள்’, ஒற்றக் கூத்தனின் ‘ஆட்டமா, தேரோட்டமா?’ போன்ற மனதைக் கெடுக்கும் ’குப்பைக் கூளங்களை’க் கிழித்தெடுத்துவிட்டு, மிச்சமிருப்பதைப் பின் அடித்துக்கொண்டு படிப்பான்.

இப்படிப்பட்ட குணாளனின் கண்களில், குமுதத்தில் ‘கோலப்பன்’ என்னும் புனை பெயரில் குமுதம் ஆசிரியர் எழுதிவரும் ‘ச்சீய்..!’ கதை கண்ணில் பட்டது; கண்ணாடியில் பார்த்து மட்டுமே படிக்கும் வகையில் எழுத்துகளைத் திருப்பிப் போட்டு அச்சிட்டிருந்தது குமுதம். 

தலைப்பே ‘ச்சீய்...’ன்னா, உள்ள இருக்கிற மேட்டரும் 'நாத்தம்’ புடிச்சதாத்தான் இருக்கும் என்கிற முடிவோடு, கதையைப் படிப்பதற்கு முகம் பார்க்கும் கண்ணாடி தேடினான் குணாளன்.

வீடு முழுக்கச் சல்லடை போட்டுத் தேடியும் அது கிடைக்கவில்லை[வீட்டில் நிலைக்கண்ணாடியும் இல்லை].

பொறுமை இழந்து, “பாட்டி, முகம் பார்க்குற கண்ணாடி எங்கே?”ன்னு தன் பாட்டியிடம் கேட்டான். குழந்தைப் பருவத்திலிருந்தே அவன், தாத்தா பாட்டி வீட்டில் வளர்பவன்[பாட்டிக்கு வயது 60. தாத்தாவுக்கு 70].

"பக்கத்து வீட்டுக் காலேஜ் கொமுரி வாங்கிட்டுப் போனா. இன்னும் திருப்பித் தரல” என்று பொய் சொன்னாள் பாட்டி!

எழுத்துகளைத் தலைகீழாப் போடுறது; பத்து வரிக் கதையை ரெண்டு வரியா துக்கிளியூண்டு எழுத்தில் அச்சிட்டு மண்டை காய வைக்கிறது; வரிகளை வட்ட வட்டமாச் சுழிச்சி முகம் சுழிக்க வைக்கிறது. இப்படி, விதம் விதமான உத்திகளைக் கையாண்டு, இதழ் விற்பனையைக் கூட்டுறது [அந்தக் காலக்] குமுதத்துக்குக் கைவந்த கலை என்பது நினைவுக்கு வரவே, நண்பன் விவேக்கைப் பார்க்கக் கிளம்பினான் குணாளன்.

கண்ணாடியில் ‘ச்சீய்...கதை’ படித்துக்கொண்டிருந்த விவேக், இவனுக்காகச் சத்தம் போட்டுப் படித்தான். கேட்டதும் குமுறும் எரிமலையானான் குணாளன்.

"எத்தனை நல்ல உள்ளங்களைக் கெடுக்குது இந்தச் ‘ச்சீய்..கதை!’. இப்படி ஆபாசக் கதை போட்டு அட்டூழியம் பண்றதைக் குமுதம் நிறுத்தணும். தவறினா, குமுதம் பத்திரிகையைத் தடை செய்யச் சொல்லிப் பெரிய போராட்டமே நடத்தணும்” என்று வெடித்தான்.

“நீ மட்டும்தான் இப்படிக் குமுறிக் கொந்தளிக்கிறே. இந்தச் ‘ச்சீய்...’க் கதை அஞ்சாறு வாரமா வருது. குடும்பத் தலைவர்கள், தலைவிகள், பொது நலவாதிகள்னு யாருமே வாய் திறக்கலையேடா. இனியும் பெணாத்தாதே. உன் வேலையை மட்டும் பாரு” என்று நண்பனைக் கடிந்துகொண்டான் விவேக்.

அவனுக்குப் பதில் தரும் வகையறியாமல் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த நம் குணாளன், “இனியும் இந்தக் குமுதம் என் வீட்டு வாசப்படிகூடத் தாண்டக் கூடாது. என் தாத்தா பாட்டிகிட்டேயும் சொல்லிடுறேன்” என்று நண்பனிடம் சூளுரைத்துவிட்டுத் தன் வீட்டுக்குக் கிளம்பினான்.

வீட்டுக் கதவு சாத்தியிருந்தது.

கதவைத் தட்ட அவன் கை நீண்டபோது, உள்ளே தாத்தாவும் பாட்டியும் பேசுவது கேட்டது.

அறுபது வயதான பாட்டி, எழுபது வயதுத் தாத்தாவிடம் சொன்னாள்: “குணா, கண்ணாடி எங்கே, கண்ணாடி எங்கே?ன்னு கேட்டுட்டே இருக்கான்.”

”மறந்தும் கொடுத்துடாதே” என்று கடுமையாக எச்சரித்தார் தாத்தா.

'அந்த அசிங்கக் கதையை நான் படிச்சுடக் கூடாதுன்னு தாத்தா நினைக்கிறார். அவருக்குத்தான் என் மேல எவ்வளவு அக்கறை?’ என்று நினைத்து மகிழ்ந்தான்; நெகிழ்ந்தான் குணாளன்; மெய் சிலிர்த்தான்!

ஆனால், அப்புறம் தாத்தா சொன்னதைக் கேட்டதும் அந்த மகிழ்ச்சி நெகிழ்ச்சியெல்லாம் போன இடம் தெரியவில்லை.

தாத்தா சொன்னது....

“குமுதம் கோலப்பன்னா கோலப்பன்தான். இந்த 'எழுத்துச் சித்தன்’ என்னமா எழுதுறான்! படிக்கும்போதே மனசு கிளுகிளுக்குது. 'அது'க்கான  'மூடு' வந்துடும் போல இருக்கு. இன்னும் எத்தனை கதை எழுதுவானோ தெரியல. அதுவரைக்கும் நம் பேரனுக்குக் கண்ணாடியைக் கண்ணில் காட்டிடாதே. குமுதம் வாங்குறதையே அவன் நிறுத்திடுவான்.” 

அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த குணாளன், "அடக் கடவுளே, இதெல்லாமும் உன் திருவிளையாடல்தானா?” என்று சொல்லித் தலைதலையாய் அடித்துக்கொண்டு தரையில் சரிந்தான். அவன் சுய நினைவு பெறுவதற்கு நீண்ட நேரம் ஆனது!

முக்கியக் குறிப்பு:

இந்தக் கதையை நமக்கு அனுப்பிய நண்பர், தன்னுடைய பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் 'கதாசிரியர்' பெயர் குறிப்பிடப்படவில்லை.

திங்கள், 26 அக்டோபர், 2020

அந்தரங்கம் புனிதமானது!!![சி.கதை]

‘உடலுறவில் உச்சம் தொடுவது எப்படி?’ என்ற பலான புத்தகத்தைப் பூங்காவின் கடைக்கோடியில், சிதிலமடைந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து படிக்கத் தொடங்கியபோது[அப்போ நான் புது மாப்பிள்ளை!], “வணக்கம் ஐயா. நலமா? பார்த்து ரொம்ப நாளாச்சி” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டேன்.

பார்வையைச் சுழற்றிக் குரலுக்குரியவரைத் தேடினேன். தொலைவில் சில மனித உருவங்கள் தென்பட்டன. பேச்சுச் சத்தம் கேட்கும் அளவுக்கு என்னைச் சுற்றி ஆட்களின் நடமாட்டமே இல்லை. என் அந்தரங்க வாசிப்புக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அங்கே ஒருவர் குரல் கொடுத்தது எப்படிச் சாத்தியமாயிற்று? யாருமில்லை[எட்டி விழுந்து திருட்டுத்தனமாய்ப் படிக்க] என்று உறுதிப்படுத்தித்தானே அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்!

“பார்த்து ரொம்ப நாளாச்சி... பார்த்து.. .சார்த்து... கோர்த்து... போர்த்து...  வார்த்து...” 

எதுகை மோனைச் சொல்லடுக்கு எனக்குள் குழப்பம் விளைவித்தது. புத்தகத்தைக் கைப்பையில் திணித்துக்கொண்டு எழுந்து நின்று செவிப்புலனைக் கூர்மையாக்கினேன்.

“அவனா? அவன் பெரிய எத்தன் ஐயா. எத்தன்... வத்தன்... கொத்தன்... வத்தல்... தொத்தல்... மொத்தல்...”

சில வினாடி இடைவெளிக்குப் பிறகு மர்மக் குரல் தொடர்ந்து ஒலித்தது. “க் ச் ட் த் ப் ற்... க ச ட த ப ற...ய ர ல வ ழ ள... ல ள ழ... ஒன்னு ரெண்டு மூனு... அஞ்சு... பத்து... அம்பது நூறு... ஆறு...”

“ஆருடா அவன்...? நான் பேசுறதைக் கவனிக்காம ஒளிச்சி வெச்சிப் படிக்கிறியே என்ன புஸ்தகமடா அது?”.....

“கதையா, இல்ல, 'பலான' புத்தகமா?”

“மறைக்காதே. மரியாதையா என்கிட்ட குடுத்துடு. கொண்டாந்து குடுடா.”

“நீயா வர்றியா நான் வரட்டுமா?”

என் அடிமனதில்  பயம் கவ்வியது; நாடிநரம்புகளிலெல்லாம் அது ஊடுருவியது. கால்கை உதறலைக் கட்டுப்படுத்திக்கொண்டு எழுந்து நின்று, வரிசை கட்டியிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு அப்பால் பார்வையைச் செலுத்தினேன்.

செடிகளின் மறைவில் சற்றே வயதான ஒரு ஜிப்பா உடுத்த மொழுமொழு மண்டை மனிதர் நின்றுகொண்டிருந்தார்.

எனக்குள் நிம்மதி பரவியது. 

‘ஐயோ பாவம். அந்த வழுக்கை பைத்தியம் போலிருக்கு’  -மனதுக்குள் அனுதாபத் தீர்மானம் போட்டுவிட்டு, வேறு தனியிடம் தேட முடிவெடுத்துப் பெஞ்சிலிருந்து தரையில் குதித்தேன்.

நான் குதித்த சத்தம் பைத்தியத்திற்குக் கேட்டிருக்க வேண்டும். “மிஸ்டர்...” என்று உரத்த குரலில் விளித்தது; ஒரே தாவலில் என்னை நெருங்கிவிட்டது; “வத்திப்பெட்டி இருந்தால் கொடுங்களேன்” என்றது.

கடந்த வாரம் என் நண்பருக்கு இதே பூங்காவில் ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்து என்னை மிரள வைத்தது. ஓசிப் பீடி கேட்டுவந்த ஓர் ஆளிடம்[பைத்தியம்], இவர் “இல்லை” என்று சொல்ல, “உள்ளே ஒளிச்சி வெச்சிருக்கே” என்று நயமாய்ச் சிரித்துக் கண்மூடித் திறப்பதற்குள் அவருடைய வேட்டியை உருவிவிட்டதாம் அது!

“தீப்பெட்டி இருந்தால் கொடுங்களேன்.” -கோரிக்கையைப் புதுப்பித்தது பைத்தியம்.

சந்தேகமில்லை. இந்தக் கிழவன்தான் அந்தப் பைத்தியம்!

நான் ஓடிவிட நினைத்து,  இரண்டு அடிகள் எடுத்து வைத்தேன்.

“மிஸ்டர், சத்தியமா இந்தப் பூங்காவில் உலவுற பைத்தியம் நான் அல்ல. நான் தனிமையில் பிதற்றினதைப் கேட்டா அப்படித்தான் நினைக்கத் தோணும். நான் பள்ளிக்கூட வாத்தியார். புதுசா பல்செட் போட்டிருக்கேன். பேசிப் பிழைக்கிறதுதானே என் தொழில். சரியாப் பேச வருதான்னு தனியான இடம் தேடிவந்து சோதிச்சிப் பார்த்திட்டிருந்தேன். நீங்க உட்கார்ந்திருப்பதையும் கவனிச்சேன். உங்களுக்குக் கேட்காதுன்னு நினைச்சி நான் பாட்டுக்குப் பேசிட்டுருந்தேன். உங்களுக்குக் கேட்டுடிச்சி போல. நீங்க நினைக்கிற மாதிரி நான் பைத்தியம் அல்ல. சந்தேகம் இருந்தா பார்த்துக்கோங்க” என்று வாய் திறந்து புதிய பல்செட்டைக் கழற்றிக் காட்டினார் வழுக்கை மனிதர்.

“ஹி...ஹி...ஹி...” -அசடு வழியச் சிரித்துவிட்டு, புத்தகப் பையுடன் மீண்டும் தனியிடம் தேடி நகர்ந்தேன்.

ஹி... ஹி... ஹி!!!

வியாழன், 31 மே, 2018

ஜோதிடலோகம்![பொழுதுபோக்குக் கதை]

சொர்க்கத்தை மேற்பார்வையிட்டுத் திரும்பிய இறைவி, இறைவன் வெற்று வானத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டு, “பிரச்சினை எதுவானாலும் தியானம் பண்ணினா தீர்வு கிடைக்கும்னு சொல்லியிருக்கேன். ஏதோ பிரச்சினையில் சிக்கியிருக்கீங்கன்னு உங்க முகமே சொல்லுது. மோனத்தவத்தில் மூழ்காம பிது பிதுன்னு முழிச்சிட்டிருக்கிங்களே, ஏன்?'' என்று கேட்டார்.

“அதுக்குத்தான் உட்கார்ந்தேன். மனசை ஒருமுகப்படுத்த முடியல” என்றார் இறைவன், வருத்தம் தோய்ந்த குரலில்.

“ஏனாம்?”

“பகுத்தறிவாளன்கிற பேர்ல, கண்ட கண்ட கசமாலங்கள் எல்லாம் 'கடவுள் எப்போ பிறந்தார்? எப்போ மறைவார்? எப்பவும் இருந்துகொண்டே இருப்பார்னா அது எப்படிச் சாத்தியம்?'னு அடுக்கடுக்கான கேள்விகளால கிடுக்கிப்பிடி போட்டுட்டே இருக்கானுக. நம்ம அவதாரம்னு சொல்லிட்டுத் திரியற ஆட்களால அவங்களைச் சமாளிக்க முடியல. யோசிச்சிப் பார்த்தா எனக்குமே பதில் தெரியல. இனி என்ன செய்யறதுன்னும் புரியல.”

“கவலையை விடுங்க. பூலோகத்திலிருந்து ஒரு ஜோதிடரை வரவழைச்சி, 'கோடிகோடி கோடானுகோடி பிரபஞ்ச ஆண்டுகளுக்கு முன்னால, இன்ன நட்சத்திரத்தில் கடவுள் தோன்றினார்; யுகயுகயுகாதி ஆண்டுகளுக்கு அப்புறம், இன்ன நட்சத்திரத்தில் மறைவார்; மறுபடியும் தோன்றுவார்...மறைவார்...தோன்றுவார்..மறைவார்..... இப்படியாகத்தானே, இடைவெளி விட்டுத் தோன்றுவதும் மறைவதுமாக எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்' அப்படீன்னு பூலோகத்திலுள்ள எல்லா ஊடகங்களுக்கும் அறிக்கை தரச் சொல்லிடறேன். யோசிச்சி யோசிச்சி மண்டை காய்ந்து நாத்திகர்கள் 'மெண்டல்' ஆயிடுவாங்க. அப்புறம் எவனும் கேள்வி கேட்க மாட்டான்” என்றார் இறைவி.

“ஜோதிடர்கள் விடுற அறிக்கையை மக்கள் நம்புவார்களா?” -இது இறைவனின் சந்தேகம்.

“என்ன நீங்க, உலகம் புரியாத கடவுளா இருக்கீங்க. பூலோகமே இந்த ஜோதிடர்கள் பின்னாலதான் போயிட்டிருக்கு” என்றார் இறைவி.

இறைவனின் வதனத்தில் பேரானந்தம் பரவியது!

---------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

கணினியுகக் காதல்!!!.....சிரிப்புக் கதை!

விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஒரு வார இதழில் வெளியான கதை இது. இப்போது ‘அது’, ‘தடை செய்யப்பட்ட எழுத்தாளர்’ பட்டியலில் என்னைச் சேர்த்திருக்கிறது!

அழைப்பு மணி இடைவிடாமல் ஙணஙணத்தது.

எரிச்சலுடன் ஓடிப்போய்க் கதவைத் திறந்த கேசவன், எதிர்த்த வீட்டு வேலப்பன் உருவத்தில் வேட்டியும் தொளதொள பனியனுமாய், இரணியனைச் சம்ஹாரம் செய்த நரசிங்கமூர்த்தியே நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்.

“வாருமய்யா ஓசி......இப்பத்தான் முதல் தடவையா அழைப்பு மணியை அடிச்சிப் பார்க்குறீரா?”

”ஆமா. அதோட முதல் தடவையா ஒரு கொலையும் செய்யப்போறேன்.”

வெலவெலத்துப் பின்வாங்கினார் கேசவன். “என்னய்யா சொல்றீர்?" என்றார்.

“உம்ம மகன் என் பொண்ணுக்கு உயிரையே தர்றதா காதல் கடிதம் எழுதியிருக்கான். அந்த உயிரைத்தான் வாங்கிப் போக வந்தேன்” -உரமேறிய வார்த்தைகளை உதிர்த்தார் வேலப்பன்.

“ஏய்யா கத்தறீர்?.” -அவரை இழுத்துப் போய் இருக்கையில் அமர்த்திவிட்டுக் கதவையும் அடைத்துவிட்டுச் சொன்னார் கேசவன், ‘உம்ம பையன் என் மகளைக் கணக்குப் பண்றான். இனியும் நாவல் கீவல்னு இரவல் கேட்டு என் வாசல்படி மிதிச்சான்னா நான் பொல்லாதவன் ஆயிடுவேன்’னு நீர் எச்சரிக்கை பண்ணினதிலேயிருந்து என் மகனோட பார்வைகூட உம் வீட்டு மேல படியறதில்ல. அதோ பாரும், மூடிய எங்க வீட்டு ஜன்னல் கதவைத் திறந்து ஆறு மாசம் ஆச்சு. பூச்சி கூடு கட்டியிருக்கு. என் மகன் கண்டிப்பா காதல் கடிதம் கொடுத்திருக்க மாட்டான்.”

“கொடுத்திருக்கான். இதோ பாரும் அவன் நேத்துக் கொடுத்த கடிதம்.”

“தபாலில் அனுப்பியிருப்பானோ?”

“தபாலில் அனுப்பிப் பிடிபட உம்மை மாதிரி உன் மகன் கூமுட்டையா என்ன? அவன் புத்திசாலி. நீர் என்கிட்டே ஒசி வாங்கிப் படிச்சிட்டுத் திருப்பித் தர்ற புராண இதிகாசப் புத்தகங்களில் உன் புத்திரசிகாமணி கடிதம் வெச்சி அனுப்பியிருக்கான். நேத்து என் மகள்கிட்டே கொண்டு வந்து கொடுத்தீரே வியாசர் பாரதம், அதை நான் வாங்கிப் புரட்டினப்போ இந்த ரகசியம் அம்பலமாச்சு. மிரட்டி விசாரிச்சதில் என் மகள் உண்மையை ஒத்துட்டா. கண்ட கண்ட கழுதைப் பயல்களின் வலையில் விழுந்துடக் கூடாதுன்னுதான் என் மகளுக்கு செல்ஃபோன்கூட வாங்கித் தராம இருந்தேன். அப்படியும் உன் மகன் என்னை முட்டாள் ஆக்கிட்டான். நல்ல வேளை என் மகள் சியாமளா உன் மகனுக்குக் கடிதம் ஏதும் எழுதல.”

அவமானத்தால் தொங்கிப் போனது கேசவன் முகம். “வெரி சாரிப்பா. இனிமே இது மாதிரி நடக்காம பார்த்துக்கிறேன்” என்றார்.

“உம்ம வாக்குறுதியில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஒரு வாரம் அவகாசம் தர்றேன். உம்ம மகனை எங்காவது அனுப்பி வெச்சிடணும். அது ஆகாத காரியம்னா, ஒரு மாசம் டைம் தர்றேன். மரியாதையா நீரே வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிடும். உம்ம மகன் எழுதின அத்தனை கடிதங்களும் என்கிட்டே இருக்கு. அவனையும் அவனுக்கு உடந்தையா இருந்ததா உம்மையும் கம்பி எண்ண வெச்சிடுவேன்.” -கையிலிருந்த கடிதக் கற்றையை விசிறி போல விரித்துக் காட்டிவிட்டுப் புயலாய் வெளியேறினார் வேலப்பன்.

சன்னலருகே அமர்ந்து பராக்குப் பார்த்துக்கொண்டிருந்த வேலப்பன், கேசவன் தன்னைத் தேடி வருவதைக் கண்டார். அவர் பின்னால் அவர் மகன் பாலன், ஒரு தோல்பையுடன் வந்து கொண்டிருந்தான்.

‘பயல் வெளியூர் கிளம்பிட்டான் போல’ என நினைத்தார் வேலப்பன்.

அவரை அணுகிய கேசவன்,  “நீர் சொன்னபடியே இவனைச் சேலத்தில் இருக்கும் என் தங்கை வீட்டுக்கு அனுப்பறதா முடிவு பண்ணிட்டேன். போறதுக்கு முந்தி உம்மகிட்டே இவன் எதோ பேசணும்னு சொன்னான். அதான் அழைச்சுட்டு வந்தேன்” என்றார்.

“ஓ, தாராளமா...”

பாலன் சொன்னான்:

“நீங்க அடிக்கடி, பாட்டுக் கேட்க எங்க வீட்டிலேயிருந்து ‘பென்டிரைவ்’ இரவல் வாங்கிட்டு வருவீங்க இல்லியா? நீங்க திருப்பித் தர்ற ‘பென்டிரைவ்’ களில் பாடலை அழிச்சிட்டு யாரோ புதுக்கவிதை பதிவு பண்ணியிருக்காங்க. போட்டுக் காட்டுறேன். குரலை வைத்து அது யாருன்னு கண்டுபிடிக்க முடியுதா பாருங்க” என்று சொல்லிக்கொண்டே, தோல்பையிலிருந்து ஒரு மடிக்கணினியை எடுத்து வைத்து இயக்கினான்.

திகைத்து, திராவகத்தில் விழுந்துவிட்டவர் போல, வேலப்பன் துடித்துப் போனார்.

பாலன் மீது கொண்டிருந்த அதீத காதலால், பென்டிரைவில் கவிதைச் சரம் தொடுத்திருந்தாள் அவர் மகள் சியாமளா!

“நான் போறேங்க” என்ற பாலனின் குரல்தான் அவரைத் திகைப்பிலிருந்து விடுவித்தது. அவன் தோல்பையுடன் வெளியேறிக்கொண்டிருந்தான்.

“மாப்பிள்ளை... போகாதிங்க...நில்லுங்க...” என்று கூவிக்கொண்டே அவனை நெருங்கினார் வேலப்பன்.

வெள்ளி, 1 ஜூலை, 2016

இந்தக் கதையில்... வயாகரா 30%, சிரிப்பு 30%, சஸ்பென்ஸ் 40% !!!

“எழுபது வயதுக் கிழவன் நீ. எழுதுவதற்கு நல்ல விசயமே இல்லையா?” என்று என்னை ஏசாதீர். இது என் வாலிப வயதில்[21] எழுதிய கதை!


ஏறத்தாழ மூன்று மணி நேர சிறை வாசத்திற்குப் பிறகு, திரையரங்கிலிருந்து விடுதலையாகி வெளியேறிக்கொண்டிருந்தது ரசிகர் கூட்டம்.

அந்த அலைகடலில் எதிர் நீச்சல் போட்டேன்.

பரமசாது போல் தோன்றிய ஒரு வாலிபருக்கு “ஹலோ” சொல்லி,  “படம் பார்த்துட்டுத்தானே வர்றீங்க?” என்றேன்.

அவர், சிறிது தலையசைத்துப் பார்த்த பார்வை, “ஆமா, எதுக்குக் கேட்கிறீங்க?” என்ற ஒரு பதிலையும் கேள்வியையும் உள்ளடக்கியிருந்தது.

“குடும்பத்தோட பார்க்கத் தகுந்த படம்தானே?” -நான்.

“குடும்பம் ஓட நீங்க மட்டும் தனியா பார்க்கத் தகுந்த படம்!” என்று வார்த்தை ஜாலம் புரிந்துவிட்டுப் போனார் அவர்.

சிரித்த முகத்துக்காரர் ஒருவரை வளைத்துப் பிடித்தேன்.

”நல்ல கலைப்படம்னு சொன்னாங்க. எப்படியிருக்கு?”

“மட்டமான செக்ஸ் படம். தியேட்டர் மாறி வந்துட்டீங்க.”

மேலும் விளக்கம் கேட்க நினைத்த போது, அவர் கழன்றுகொண்டுவிட்டார்.

அவநம்பிக்கை என்னிடம் விடை பெறவில்லை.

எதிரே, மோதுவது போல் வந்த ஒருவரை லாகவமாகப் பிடித்து நிறுத்தி, “படம் எப்படி?” -விசாரித்தேன்.

“போஸ்டர்லே செக்ஸ் காட்சிகள் நிறைந்த படம்னு போட்டிருக்கான். செக்ஸுக்கு முன்னால் ஒரு பயங்கரம் சேர்த்துக்கோங்க. ஒரு ‘ஏ’ தான் கொடுத்திருக்கான். ஒன்பது ‘ஏ’ கொடுக்கலாம். ஃபிரேமுக்கு ஃபிரேம்...சே...!” -கூடை கூடையாய் வெறுப்பைக் கொட்டிவிட்டுப் போனார் அவர்.

அவரைப் போகவிட்டுத் திரையரங்க முகப்பை நுகர்ந்தேன்.

பெண் வாடையே வீசவில்லை! கண்டிப்பாக இது ஒரு ‘முழுநீல’ப் படம்தான் என்று முடிவெடுத்தேன்.

அதை உறுதிப்படுத்துவது போல், டிக்கெட் கவுண்ட்டரில் முட்டி மோதும் ரசிகர் கூட்டம்!

களத்தில் இறங்கப் போதிய உடல் பலம் இல்லாததால், நான்கு மடங்கு விலை கொடுத்து ‘பிளாக்’கில் ஒரு டிக்கெட் வாங்கினேன்.

ஏனுங்க சிரிக்கிறீங்க?

“ஆபாசப் படம்னு தெரிஞ்சி டிக்கெட் வாங்கியிருக்கே. இதுவரைக்கும், கலைப்படமா, குடும்பப் படமான்னு அபிப்ராயம் சேகரிச்சியே, அது ஏனய்யா?"ன்னு கேட்குறீங்களா?

அது வந்து...அடுத்தவங்களை அணுகி,  “இது நல்ல செக்ஸ் படமான்னு கேட்கக் கூச்சமா இருக்குங்க. கூச்சப்படாம கேட்டா, கேட்கிறவனை ஒரு சாக்கடைப் புழவாகப் பார்க்கிறாங்க. எல்லார்கிட்டேயும் ஒருவித போலித்தனம் இருக்கு. அதனாலதானுங்க இப்படியொரு தந்திர உத்தியைக் கையாண்டேன்.

"இதுக்குப் போயி இப்படி அலட்டிக்கணுமா? விளம்பரப் போஸ்டரைப் பார்த்தாலே படத்தோட தரம் புரிஞ்சி போயிடுமே”ன்னு சொல்றீங்களா?

அடப் போங்கய்யா, போஸ்டரைப் பார்த்து எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோட படம் பார்க்கப் போயி, நான் எத்தனை தடவை ஏமாந்திருக்கேன் தெரியுங்களா?

[முன்னணி வார இதழான ‘ராணி’யில் பற்பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது]

****************************************************************************************************************************************************
முதல் முறை வாசித்தவர்களுக்கு...“நன்றி”

ஏற்கனவே ஒரு முறை வாசித்தவர்களுக்கு...“மன்னியுங்கள். சரக்கு தீர்ந்துடிச்சி”