வெள்ளி, 22 ஜூன், 2018

மாசேதுங் சொன்ன கடவுள் கதை!!!

சீனாவில், பல ஆண்டுகள் அதிபராக இருந்தவர் மாசேதுங். ஆலய வழிபாடுகளைத் தடைசெய்து பெரும் புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தியவர். 

அவர் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, கீழ்க்காணும் சுவையான கதையைச் சொல்லி மக்களைச் சிந்திக்க வைப்பது வழக்கமாம்.


கதை.....

#ஒரு கிராமத்தில் ஓர் ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள்.

இவர்களுடைய இருப்பிடத்திலிருந்து சிறிது தொலைவில் ஒரு நகரம் இருந்தது. குறுக்கே ஒரு மலையும் இருந்ததால், மலையைச் சுற்றித்தான் நகரத்துக்குச் செல்லவேண்டும். அதனால் நெடுந்தொலைவு பயணம் செய்யவேண்டியிருந்தது.

''இந்த மலை நமக்கு இடையூறாக இருக்கிறது. இதை உடைத்து ஒரு பாதையை ஏற்படுத்தினால், நம்மால் சுருக்காக நகரத்துக்குச் சென்றுவர முடியும். மூவரும் சேர்ந்து வேலையைத் தொடங்குவோம்" என்றான் விவசாயி. மகன்களும் சம்மதித்தார்கள்.

மூவரும் கடப்பாறைகளையும் பிற தளவாடங்களையும் பயன்படுத்தித் தினமும் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் மலையை உடைக்க ஆரம்பித்தார்கள்.

இவர்களின் இந்தச் செயலைக் கண்ணுற்ற ஒருவர், ''நீங்கள் செய்யும் செயலைக் கவனித்தால் சிரிப்புத்தான் வருகிறது. வெறும் கடப்பாறையையும் சில கருவிகளையும் வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய மலையை உடைக்க முடியுமா? உருப்படியா வேறு வேலை இருந்தால் பாருங்கள்'' என்றார்.

''இந்த வேலையை நாங்கள் நிறுத்திவிடப் போவதில்லை. எங்களுக்குப் பிறகு எங்களின் வாரிசுகளும் இதைத் தொடருவார்கள். என்றாவது ஒரு நாள் இந்த மலையை உடைத்து நகரத்துக்குப் பாதை போடப்படும். இந்தப் பாதை என் குடும்பத்துக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் பயன்படும்'' என்று உறுதிபடச் சொன்னான் விவசாயி. சொன்னதோடு நில்லாமல், தன் மகன்களுடன் மலையை உடைக்கும் வேலையைத் தொடர்ந்தான்.

''புத்தி சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டேன்'' என்று முணுமுணுத்துக்கொண்டே அங்கிருந்து அகன்றார் அந்த ஆள். இதன் பிறகும், இரவு பகல் பாராமல் மூவரும் மலையை உடைக்கும் பணியில் மிகக் கடுமையாக உழைத்தார்கள்.

இவர்களின் உழைப்பையும் தன்னம்பிக்கையையும் கண்டு வியந்த கடவுள், இரண்டு தேவதைகளை அனுப்பினார்.

இவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்த இரவு நேரத்தில் தமக்குள்ள அபூர்வ சக்தியால் மலையைத் தரைமட்டம் ஆக்கினார்கள் தேவதைகள்.

விடிந்ததும், இக்காட்சியைக் கண்ட தந்தையும் மகன்களும் அளவிறந்த மகிழ்ச்சிக்கு ஆளானார்கள்#

கதையைச் சொல்லி முடித்ததும் கதை குறித்த விமர்சனத்தையும் தருவாராம் மாசேதுங். 

''இன்றளவும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பதால், விவசாயக் குடும்பத்துக்குக் கடவுள் உதவி செய்ததாக ஒரு கற்பனைக் கதையைச் சொன்னேன். இதையோ, இம்மாதிரிக் கதைகளையோ இனியும் நீங்கள் நம்புதல் கூடாது. 

உண்மையில் மக்களாகிய நீங்கள்தான் கடவுள்.

இந்த விவசாயியைப் போல உயர்ந்த குறிக்கோளும் தளராத நம்பிக்கையும் கடின உழைப்பும் உள்ளவர்களுக்கு நீங்கள் உதவிட வேண்டும். இதன் மூலம் தனி மனிதன் மட்டுமல்ல, இந்த நாடே பயன் பெறுகிறது.''

மாசேதுங் மகா புத்திசாலி.
========================================================================
பல ஆண்டுகளுக்கு முன்பு ஏதோவொரு பருவ இதழில் வாசித்த கதை இது[இப்போது என் மொழிநடையில்]. இதழின் பெயரோ எழுதியவர் பெயரோ நினைவில் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.






8 கருத்துகள்:

  1. கதை சிந்திக்க வைத்தது நண்பரே...

    முடிவில் கதையை நம்பக்கூடாது என்றது கூடுதல் சிந்திக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவில் இருந்ததைக் கதையாக்கியுள்ளேன். மூலக்கதை இன்னும் கனமானதாகவும் சுவையானதாகவும் இருக்கக்கூடும்.

      நீக்கு
  2. உம்மைப் பொருத்தவரைக்கும் கடவுள் இல்லேன்னு சொல்றவங்கெல்லாம் புத்திசாலிங்கதான்!

    பதிலளிநீக்கு
  3. உழைப்பும் தளராத நம்பிக்கையும் போற்றதலுக்கு உரியதுதான் ஐயா
    கதை அருமை

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு தகவல்.
    //அவர் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, கீழ்க்காணும் சுவையான கதையைச் சொல்லி மக்களைச் சிந்திக்க வைப்பது வழக்கமாம்.//
    இங்கு கடவுள் மலையை தகர்த்தெறிந்தார் என்று ஒரு கற்பனை கதை சொல்லும் போதே மகிழ்ச்சிக்கு ஆளாகி, உணர்ச்சிவசபட்டு பார்த்தாயா!
    எப்போதும் கடவுள் ஒரு great, `கடவுளுக்கு நன்றி` என்று சொல்லும் நிலை தான் உள்ளது.

    பதிலளிநீக்கு