செவ்வாய், 3 ஜூலை, 2018

12 வயதுச் சிறுமியும் ஒரு ஜோதிடனும் 1000 முட்டாள்களும்!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமம். பெயர்? வேண்டாம். 'முட்டாள்கள்'னு எழுதியிருக்கிறேன். படை திரட்டிக்கொண்டு உதைக்க வருவார்கள். 
'அந்த'க் கிராமத்தில் ஒரு 12 வயதுப் பெண். அவளுக்குப் பக்தி அதிகம். அடிக்கடி, ''எனக்குப் பனிரண்டு வயசு ஆனதும் கற்சிலையா மாறிடுவேன்'' என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

மனத்தளவில் அவள் பாதிக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டு, ஒரு மனநல மருத்துவரிடம் அவளை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். செய்யவில்லை. மாறாக, ஒரு ஜோதிடரைச் சந்தித்துப் பெண்ணைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அந்த நபர், பெண்ணின் ஜாதகத்தை ஆராய்ந்து, ''பொண்ணு சொல்லுறது நிசந்தான். இவளோட 12ஆவது பிறந்த நாளில் கோயிலுக்கு அழைச்சிட்டுப் போங்க. அங்கே இவ கற்சிலையா மாறிடுவா'' என்று சொல்லியிருக்கிறார்.

பெண்ணுக்கு 12 ஆவது பிறந்த நாளும் வந்தது. ''நான் இன்னிக்கிச் சிலையா மாறிடுவேன்...மாறிடுவேன்'' என்று அவள் சொன்னாள்; திரும்பத் திரும்பச் சொன்னாள்; சொல்லிக்கொண்டிருந்தாள்.

இந்தச் செய்தி, காட்டுத்தீயாக எட்டுப்பட்டி கிராமத்துக்கும் பரவியது.

சுற்றுவட்டார மக்கள் வேலைவெட்டிகளைக் கிடப்பில் போட்டுவிட்டு இந்த அதிசய நிகழ்வைக் காண வந்தார்கள்.

பெற்றோரும், இரவு வீட்டில் சிறப்புப் பூஜை நடத்தி, காலையில் பெண்ணுக்குப் பட்டுச்சேலை கட்டி, பூவினால் அலங்காரம் செய்து அம்மன் கோயில் வளாகத்திற்குக் காலையில் அழைத்துச்  சென்றனர். 

சாமி முன்னால் கைகூப்பித் தொழுது நின்றாள் சிறுமி; கூப்பின கைகளோடு நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தாளே தவிர சிலையாக மாறவேயில்லை.

கூடியிருந்த ஏராளமான கிராம மக்கள் பெருத்த ஏமாற்றத்தோடு திரும்பிப் போனார்கள். இது இன்றைய தினகரன்[03.07.2018] நாளிதழ்ச் செய்தி.

நம் நாட்டில், பட்டிதொட்டியெல்லாம் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன..

இந்தக் கிராம மக்கள், இவர்களுக்கான பள்ளிகளில் பெற்றது வெறும் ஏட்டறிவுதானா? குறைந்தபட்சப் பகுத்தறிவுகூட இவர்களுக்கு வாய்க்காமல் போனது ஏன்?[இம்மாதிரிக் கிராமங்களை உள்ளடக்கியதுதான் புண்ணிய பாரதமா?]

பள்ளிப் பாடங்களில், 'பகுத்தறிவு' குறித்த படைப்புகள் அறவே இடம்பெறாமலிருப்பது ஒரு காரணம். 

மேலே குறிப்பிடப்பட்டிருப்பவர் போன்ற ஜோதிடர்கள் முக்கிய காரணம்.

பரப்புரைகள் நிகழ்த்துவதற்கென்று பகுத்தறிவாளர்கள் கணிசமான அளவில்கூட இல்லாத நிலையில், ஆன்மிகம் பேசுவதையே தொழிலாகக் கொண்ட பல சொற்பொழிவாளர்களும், விற்பனையை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பலதரப்பட்ட ஊடகங்களும் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் பக்திக் கதைகளை மக்களிடையே பரப்பிக்கொண்டிருப்பது மிக முக்கிய காரணம் ஆகும். 

[இப்பதிவு, குறிப்பிட்டதொரு கிராம மக்களின் அறியாமையை மட்டுமே மனதில் கொண்டு எழுதப்பட்டது]
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

8 கருத்துகள்:

  1. என்னத்தை சொல்வது ? விஞ்ஞான வளர்ச்சியை நம்பும் மனிதன் இதையும் நம்புகிறானே...?

    புதுக்கோட்டை ? (பூதுக்கோட்டை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறையப் படித்தவர்களே இதிலெல்லாம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எப்படித் திருத்துவது?

      பிழையைச் சரிசெய்துவிட்டேன்.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. கருத்துரை வழங்கியமைக்கு நன்றி நாகேந்ர பாரதி.

      நீக்கு
  3. ///கிராமம். பெயர்? வேண்டாம். 'முட்டாள்கள்'னு எழுதியிருக்கிறேன். படை திரட்டிக்கொண்டு உதைக்க வருவார்கள். ///

    ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒத்தையா வந்தா கொஞ்சம் சமாளிக்கலாம். ஊரே திரண்டுவந்தா...எங்கே ஓடி ஒளிஞ்சாலும் விடமாட்டாங்க. அதனால்தான் இந்த முன்னெச்சரிக்கை!

      நீக்கு
  4. உண்மைதான், உலகம் ஒருபக்கத்தால எங்கேயோ போய்க் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. மூட நம்பிக்கைகளை இன்னமும் இறுக்கிப் பிடிச்சுக் கொண்டு சில மக்கள் வாழ்கின்றனர்...

    அவர்களின் அந்த மூட நம்பிக்கை அகன்றுவிட்டால்.. தம் பிழைப்பு நாசமாகிடும் என, சில பில்லி சூனியம் செய்வோர், எடுப்போர் மந்திரவாதிகள் என இருப்போர் விடமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒட்டுமொத்த கிராமமே வேடிக்கை பார்க்கத் திரண்டிருகிறது. புத்தி சொல்ல ஒருத்தன்கூட இல்லை என்பதுதான் பேராச்சரியம்.

      இம்மாதிரி நம்பிக்கைகளைக் கட்டிக்காத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் இங்கே ஊரூருக்கு இருக்கிறார்கள். அரசாங்கங்களும் தலையிடாததால் இவர்கள் திருந்துவது இப்போதைக்குச் சாத்தியமில்லை.தினமலரின் முதல் பக்கத்திலேயே இந்தச் செய்தி இடம்பிடித்திருந்தது.

      நன்றி அதிரா.

      நீக்கு