செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

'பத்தரை மாற்று'ப் பகுத்தறிவாளன்!!!

30.05.1778 அன்று இரவு 11 மணி.

200 ஆண்டுகளுக்கு முன்னரே , மக்களைப் பிணித்திருந்த மூடநம்பிக்கைத் தளைகளை அறுத்தெறிவதற்காக ஓய்வறியாது உழைத்த ஓர் இதயம் தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. அந்த இதயத்துக்குச் சொந்தக்காரர்.....

''அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், அவர்களின் உபதேசங்கள் அறிவுக்குப் பொருத்தமானவையா என்று எண்ணிப்பார். பொருத்தம் என்றால் ஏற்றுக்கொள். இல்லையேல், தயவுதாட்சண்யமின்றி அவற்றை ஒதுக்கித் தள்ளு'' என்று எவருக்கும் அஞ்சாமல் முழக்கமிட்ட பிரெஞ்சு நாட்டு அறிஞன் 'வால்ட்டேர்'[Voltaire] ஆவார்.
வால்ட்டேர், மரணத்தைத் தழுவுவதற்குச் சற்று முன்னர் மதகுருமார்கள்  இருவர் அவரை நெருங்கினார்கள். ஒருவரின் கையில் ஒரு பத்திரம் இருந்தது. அதில்.....

'எல்லாம் வல்ல ஆண்டவனே, நான் அறியாமை காரணமாக மதங்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறேன். மதகுருமார்களின் செயல்பாடுகளையும் கண்டித்திருக்கிறேன். என் அறியாமை காரணமாகக் கடவுள் தத்துவங்களையும் மிக மோசமாக விமர்சனம் செய்திருக்கிறேன். என்னுடைய அடாத இச்செயல்களுக்காக இப்போது வருந்துகிறேன். இறைவனே, நான் மரணத்தைத் தழுவ இருக்கின்ற இந்தத் தருணத்தில் நீர் என்னை மன்னிப்பீராக!' என்று எழுதப்பட்டிருந்தது.

அப்பத்திரத்தில் வால்ட்டேர் கையொப்பம் இடுவாரேயானால், 'நம் மதத்தை எதிர்ப்பவர் எவராயினும் என்றேனும் ஒரு நாள் இப்படிச் சரணடைந்தே தீரவேண்டும்' என்று மக்களிடையே பரப்புரை செய்வது மதகுருமார்களின் நோக்கமாக இருந்தது. சாவைத் தழுவவிருந்த வால்டேரைப் பத்திரமும் கையுமாக அவர்கள் சந்தித்ததன் நோக்கமும் அதுவே.

பத்திரம் வைத்திருந்த மதகுரு, ''வால்ட்டேர் அவர்களே, உங்களுடைய வாழ்க்கை முடியப்போகிறது. இந்தத் தருணத்திலாவது, நீங்கள் ஏசுநாதர் கடவுளின் அவதாரம்தான் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பாவ மன்னிப்புக் கிட்டும்'' என்றார்.

வால்ட்டேர் அதற்கு உடன்பட்டாரா? ஊஹூம்!

மதகுருவின் நடவடிக்கையால் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளானார் பகுத்தறிவுச் சிந்தனையாளர் வால்ட்டேர்; ஒரு கையால் அந்த மதகுருவை ஒதுக்கித் தள்ளினார்; சொன்னார்:

''என்னை நிம்மதியாகச் சாகவிடுங்கள்.''

வால்ட்டேர் இறந்த பின்னரும், குருமார்களின் பழிவாங்கும் போக்கு நீடித்தது. அவரைப் புதைப்பதற்கு எந்தவொரு கல்லறையிலும் அனுமதி கிடைக்கவில்லை. அவரின் கல்லறைப் பெட்டி 100 கல் தொலைவிலிருந்த திருச்சபையின் மண்ணில் புதைக்கப்பட்டது.

வால்ட்டேர் இறந்து 10 ஆண்டுகள் கழித்து, பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றது. ஆட்சிக்கட்டிலில் வீற்றிருந்த பதினாறாம் லூயியின் தலை துண்டிக்கப்பட்டது. பிரபுக்களின் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இவை அனைத்தையும்விட மகத்தானதொரு சம்பவமும் இடம்பெற்றது பிரெஞ்சு மண்ணில்! அது.....

வால்ட்டேரின் கல்லறைப் பெட்டியைத் தோண்டி எடுத்து, மாபெரும் ஊர்வலம் நடத்தி, பாரீஸ் நகரத்துக்குக் கொண்டுவந்து மீண்டும் புதைத்து வால்ட்டேருக்குச் சிறப்புச் செய்தார்கள் பிரெஞ்சு மக்கள்!
========================================================================
தார நூல்: 'வால்ட்டேர்', வ.உ.சி.நூலகம்; ராயப்பேட்டை, சென்னை. முதல் பதிப்பு: 2003.

7 கருத்துகள்:

  1. அதிசயத் தகவல் நண்பரே...
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்று முன்னர்தான் உங்களின் புதிய பதிவை வாசித்தும் மணவிழாப் படங்களைப் பார்த்தும் மகிழ்ந்தேன்.

      கருத்துரைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  2. //வால்ட்டேரின் கல்லறைப் பெட்டியைத் தோண்டி எடுத்து, மாபெரும் ஊர்வலம் நடத்தி, பாரீஸ் நகரத்துக்குக் கொண்டுவந்து மீண்டும் புதைத்து வால்ட்டேருக்குச் சிறப்புச் செய்தார்கள் பிரெஞ்சு மக்கள்!//

    இந்திய மக்கள் செய்வதற்கு நேர்மாறான தகவல்கள். மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள்.

      நன்றி நண்பர் வேகநரி.

      நீக்கு
  3. கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதி
    போற்றுதலுக்கு உரியவர்

    பதிலளிநீக்கு