ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

தூக்கணாங்குருவிகள் நடத்தும் சுயம்வரம்!![பொழுதுபோக்கு]

'மனிதர்களைப்போல விலங்குகளோ பறவைகளோ சுயம்வரம் நடத்துவது உண்டா?' என்றொரு கேள்வியையும், அதற்குரிய சுவையானதொரு பதிலையும் வாசிக்க நேர்ந்தது பழைய வாரமலர்[10.10.2004] இதழில். 
துணை தேடும் பருவத்தில், ஆண் தூக்கணாங்குருவிகள் ஒரு குழுவாக இணைந்து கூடுகள் கட்டத் தொடங்கும். கூட்டுக் குடும்பமாக வாழ்வதற்கல்ல; தத்தமக்கென ஒரு ஜோடியைச் சேர்த்துக்கொண்டு தனித்தனியே குடும்பம் நடத்துவதற்காக.

ஐம்பது குருவிகள் போல ஒரு கூட்டமாக இணைந்து, இன்னிசை எழுப்பியவாறே அலைந்து திரிந்து, நீர்நிலைகளின் ஓரத்தில் உள்ள மரங்களின் மெல்லிய நுனிக்கிளைகளைத் தேர்வு செய்யும்.

ஒவ்வொரு பறவையும் தன் கற்பனைத் திறனுக்கேற்ப வேறு வேறு வடிவங்களில் கூடுகளைக் கட்டும். ஒவ்வொரு கூட்டிலும் ஒன்று அல்லது இரண்டு அறைகள் இருக்கும். பெண் பறவை முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பதற்குத் தனி அறை வடிவமைக்கப்படும்.

நன்கு வளையும் மிக மெல்லிய நுனிக் கிளைகளில் கூடுகள் கட்டப்படுவதால் கொஞ்சம் பெரிய எலி போன்ற உயிரினங்கள் கூட்டிற்குள் நுழைதல் இயலாது. நீர்நிலைகளை ஒட்டிக் கூடுகள் அமைக்கப்படுவதால், வசிப்பிடத்தில் எப்போது குளு குளு தட்பவெப்பம் நிலவும்.

இவ்வகையில், ஆண் குருவிகள் தத்தமக்கெனக் கூடுகளைக் கட்டி முடித்த பிறகு, குழுவாக இணைந்து இன்னோசை எழுப்பிப் பெண் குருவிகளுக்கு அழைப்பு விடுப்பது வழக்கமாம். இவ்வாறு அழைப்பு விடுக்கும் இந்த நன்னாள்தான் பெண் குருவிகள் தத்தமக்கான துணைவனைத் தேர்வு செய்யும் சுயம்வர நாளாகும்.

இந்த நிகழ்வின்போது, ஆண் குருவிகள் தமக்குப் பிடித்தமான பெண் குருவிகளை அழைத்துச் சென்று அவை கட்டிய கூடுகளைச் சுற்றிக் காட்டும்.

தத்தமக்குப் பிடித்த ஆணுடன் பெண்குருவிகள் இணைந்து இல்லற வாழ்வை மேற்கொள்ளும்.

தன்னோடு இணைந்துவிட்ட பெண் குருவியுடன் தாம்பத்திய சுகம் அனுபவிக்கையில், பெண் குருவி முட்டையிட்டு அடைகாக்கத் தொடங்கிவிட்டால், சில எமகாதக ஆண்குருவிகள் அடுத்து நிகழும் சுயம்வரத்துக்காகப் புதிய கூடுகளைக் கட்டத் தொடங்குமாம். மற்றபடி, 'ஒன்னு போதும்'னு சாதுவா குடும்பம் நடத்துற ஆண் குருவிகளும் உண்டு என்கிறார்கள் பறவை இன ஆய்வாளர்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக