நான் 'ஆவி' ஆன கதை!!!
முதலில், கீழ்வரும் ஒரு பக்கச் 'சுடுகாட்டுக் கதை'[கதையின் தலைப்பும் இதுதான்] படியுங்கள். அதையடுத்து நான் ஆவியான கதை!
#நான் குப்புசாமி. இப்போது நான் இருக்குமிடம் எங்கள் ஊர்ச் சுடுகாடு.
செத்துப்போன ஒரு கிழவரை எரிப்பதற்கான ஏற்பாடுகளைச் சிலர் செய்துகொண்டிருக்க, எஞ்சியிருப்பவர்கள் சிறு சிறு குழுக்களாக நின்று தத்தம் சொந்தக் கதைகளையோ சொந்தம் அல்லாதவர் கதைகளையோ பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ஒதுங்கி நின்று, தகன மேடையையும் சொர்க்க ரதத்தில் சயனித்துப் பிடி சாம்பலாகக் காத்திருக்கும் பெரியவரையும் இனம் புரியாத பய உணர்வுடன் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்த எனக்குள் ஒரு விபரீதக் கேள்வியின் முகிழ்ப்பு.
'இங்கே கூடியிருப்பவர்களில் அடுத்துச் சாகப்போகிறவர் எவர்?'
வயது குறைந்தவர்களையும், ஆரோக்கியமான உடலமைப்புக் கொண்டவர்களையும் விடுவித்துக்கொன்டே வந்ததில், மூன்று பேர் மட்டும் மிஞ்சுகிறார்கள்..
ஒருவர் என்பதுக்குக் குறையாத வயதுக்காரர். அடுத்தவருக்கு என்புருக்கி நோயாளி போல எலும்பும் தோலுமான தேகம். மூன்றாமவர் பானை வயிற்றுடன் ஒரு மாமிச மலையாகவே காட்சியளிக்கிறார்..
இந்த மூன்று பேரில் முதலில் சாகப்போகிறவர் யார்?
இன்றளவும் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்பவர்கள் உண்டு என்பதால், என்பதைத் தாண்டியவரைப் பட்டியலிலிருந்து நீக்குகிறேன். அடுத்த கேள்வி.....
எஞ்சியிருக்கும் இருவரில் முந்திக்கொள்பவர் யார்?
விடை கண்டறியும் முயற்சியில் நான் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, என் சட்டைப்பையிலிருந்த பேசி சிணுங்குகிறது.
''அலோ...'' -குரல் கொடுக்கிறேன்.
''குப்பு, உன் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடிச்சதில் சமையலறை, கதவு, ஜன்னல் எல்லாம் நொறுங்கிடிச்சி. வீட்டிலிருந்த உன் அம்மா, பெண்டாட்டி, குழந்தைங்க எல்லாருமே செத்துட்டாங்க'' என்ற அதிர்ச்சித் தகவலை யாரோ சொல்ல, ''ஐயோ'' என்று அலறுகிறேன்; கொஞ்சம் கொஞ்மாய் நினைவிழக்கிறேன்.''#
இனி, நான் ஆவியான கதை.....
கடந்த வாரம் சென்னை செல்ல நேர்ந்தபோது, மேற்கண்ட கதையும் உடன் பயணித்தது. பிரபல வார இதழ் ஆசிரியரிடம் அதைப் பரிசீலனைக்குச் சமர்ப்பிப்பது என் திட்டம்.
இதழ் அலுவலகம் சென்றேன். அங்குள்ள வரவேற்பறையில் காத்திருக்கச் சொன்னார்கள். சில நிமிடக் காத்திருப்பிலேயே அழைப்பு வந்தது.
மெலிதாகப் புன்னகைத்து என்னை வரவேற்றார் இதழாசிரியர், கதை கை மாறியது.
சுடுகாட்டுக் கதையை, ஆரம்ப வரி முதல் இறுதி வரிவரை விரல் நுனியில் அடிக்கோடிட்டதன் மூலம் அதை அவர் முழுமையாக வாசித்துவிட்டார் என்பது புரிந்தது.
''கற்பனைக் கதையா?'' என்றார் ஆசிரியர்.
''ஊஹூம்...100% உண்மைக் கதை'' என்றேன்.
''குப்புசாமி என்பவர் கதை சொல்வதாக எழுதியிருக்கீங்க. கதாசிரியர் பேரையும் குப்புசாமின்னு குறிப்பிட்டிருக்கீங்க. செத்துப்போன குப்புசாமி எப்படிக் கதை எழுதி உங்களுக்கு அனுப்பினார்னு வாசகன் கேட்பான். அதனால.....''
கதை நிராகரிக்கப்படுகிறது என்பதை அனுமானித்ததால் என் முகத்தில் வாட்டம் பரவியது.
அதைக் கவனித்த ஆசிரியர், ''கவலைப்படாதீங்க. கதை வடிவம் அற்புதமா அமைஞ்சிருக்கு. ஒரு பக்கக் கதைக்கு சாகித்திய அகாடமி விருது கொடுக்கிற காலம் வந்தா தேர்வாகிற முதல் கதை இதுவாகத்தான் இருக்கும். செத்துப்போன குப்புசாமி உங்க கனவில் வந்து இந்தக் கதையைச் சொன்னதா திருத்திடுங்க. உங்களைக் கதாசிரியர்னு குறிப்பிட்டுப் பிரசுரம் பண்ணிடலாம்'' என்றார்.
வாட்டம் விடை பெற என் முகத்தில் மகிழ்ச்சி குடியேறியது.
''திருத்திடுறேங்க. குப்புசாமி கனவில் வந்து சொன்னார்ங்கிறதைவிட, நான் தியானத்தில் மூழ்கியிருந்தபோது ஆவியா வந்து சொல்லிட்டுப் போனார்னு எழுதிடுறேன். அதைவிடவும், அவரே தன் அனுபவத்தைக் கதையா எழுதி ஆவி உருவில் வந்து உங்ககிட்டே கொடுத்துட்டுப் போனார்னு எழுதினா கதை படிக்கிற வாசகர்கள் அசந்துடுவாங்க" என்றேன் நான்.
''இப்படியெல்லாம் எழுதினா இன்னிக்கி வாசகர்கள் நம்புவாங்களா?'' என்று சந்தேகம் கிளப்பினார் ஆசிரியர்.
''கண்டிப்பா நம்புவாங்க. 'முன்னைவிட ஆவிகள் மீதான நம்பிக்கை அதிகரிச்சிருக்கு. எப்படிச் சொல்றேன்னா, எங்க பத்திரிகையில் அப்பப்போ நாங்க வெளியிடுற ஆவி சம்பந்தமான கதைகளைப் பாராட்டி வாசகர்கள் நிறையக் கடிதம் எழுதுறாங்க'ன்னு நீங்களே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கீங்க'' என்றேன் நான்.
''ஆமாமா. உங்க அபிப்ராயத்தைத் தெரிஞ்சிக்கத்தான் இப்படிக் கேட்டேன்'' என்ற அவர், உங்களைப் பத்தி ஏதும் சொல்லலையே'' என்றார் விடைகொடுக்கும் வகையில் எழுந்து நின்று.
''நான் குப்புசாமி...'' என்று சொல்ல ஆரம்பித்தபோதே, விழி பிதுங்க, வெளிறிய முகத்துடன், ''கு...கு...குப்புசாமியா?...சுடுகாட்டுக் கதை சொன்ன குப்புசாமி ஆவியா....'' -கேட்க நினைத்ததை முழுமையாகக் கேட்காமலே மயக்கமுற்று இருக்கையில் சரிந்தார் பிரபல வார இதழ் ஆசிரியர்!
''இப்படி மயக்கம் போடுவார்னு தெரிஞ்சிருந்தா, உண்மைக் கதைன்னா முன்னுரிமை தந்து பிரசுரம் பண்ணுவார்னு நினைச்சிப் பொய் சொல்லியிருக்க மாட்டேன்; இது 100% நான் எழுதின கற்பனைக் கதைதான்னு சொல்லியிருப்பேன். இத்தனை கோழையா இருப்பார்னு எனக்குத் தெரியாம போச்சு.''
-அடங்கிய குரலில் முணுமுணுத்துக்கொண்டே அங்கிருந்து நடையைக் கட்டினேன்.
==================================================================================