பக்கங்கள்

சனி, 6 ஏப்ரல், 2019

முன்னணி வார இதழும் முகவரி இல்லாத எழுத்தாளனும்!!![நகைச்சுவை]

பிரபல வார இதழொன்று அனுப்பியிருந்த காக்கிநிற அகல உறையொன்றை மோகனின் வீட்டு வாசற்படியில் வீசிவிட்டுப் போனார் தபால்காரர்.

பிரித்துப் பார்த்த மோகன் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானான். தான் அனுப்பிய சிறுகதை, உறையிலிருந்த வார இதழில் பிரசுரம் ஆகியிருக்க வேண்டும் என்று நினைத்துப் பக்கங்களைப் புரட்டினான். ஏமாற்றமே மிஞ்சியது.

'கதை போடாம பத்திரிகையை எதுக்கு அனுப்பினாங்க?' -யோசனையுடன் உறையை ஆராய்ந்தபோது அதன் உள்ளே மடிக்கப்பட்ட ஒரு தாள் இருப்பது தெரிந்தது. பிரித்துப் படித்ததில்.....

'அன்புடைய ராதா அவர்களுக்கு,

உங்கள் படைப்பைப் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம். கதையுடன் நீங்கள் அனுப்பியிருந்த அழகான உங்களுடைய புகைப்படத்தை நம் வார இதழின் அட்டைப்படமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

கடந்த சில ஆண்டுகளில் மோகன் அனுப்பிய எந்தவொரு கதையும் அந்த முன்னணி வார இதழில் பிரசுரம் ஆனதில்லை. நண்பன் மூர்த்தியிடம் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டபோது, உன் பேரு ராதாமோகன். இனிமே ராதாங்கிற பேர்ல கதை அனுப்பு. கூடவே, ஏதாவதொரு அழகி படத்தைக் கூகுளில் சுட்டுக் கதையோடு இணைச்சிடு. அழகான பொண்ணு கதைன்னா கண்டிப்பா பிரசுரம் பண்ணுவாங்க'' என்றான் அவன். அவன் சொன்னபடியே செய்தான் ராதாமோகன். இருந்தும் அவனுடைய நீண்ட கால ஆசை நிறவேறவில்லை.

''இந்த எடிட்டர் கொஞ்சம் புத்திசாலியாகவும் இருப்பான் போல. தரமில்லேன்னு நினைச்சி என் கதையைக் குப்பைக் கூடையில் போட்டுட்டு, அழகான பொண்ணு படத்தை அட்டையில் போட்டுட்டான். அந்த ஆளை நான் உண்டு இல்லைன்னு பண்ணிடப்போறேன்'' என்று சபதம் ஏற்ற ராதாமோகன், கணினியைத் திறந்து வைத்து, கூகுள் தேடல் மூலம் தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளுக்கு ஒரு பட்டியல் போட ஆரம்பித்தான்!
==================================================================================




4 கருத்துகள்:

  1. பல நாட்களாக (மாதம் / வருடம்..?) சொல்ல நினைப்பதுண்டு... பல பதிவுகளுக்கு கருத்துரை சொல்ல வேண்டும் என்று நினைத்தால், comment box closed...

    ஏன்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடுபவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பது ஒரு காரணம். சிலரின் பக்குவமற்ற கருத்துரைகளால் கசப்பான அனுபவங்களைப் பெற்றது மற்றொரு முக்கியக் காரணம். மட்டுறுத்தல் செய்வதிலும் எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை.

      இனி, கருத்துப்பெட்டியை அடைப்பதில்லை என்று திடமாக முடிவெடுத்துள்ளேன்.

      உற்சாகத்துடன் என்னை எழுதத் தூண்டும் தங்களின் கருத்துரைகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

      நன்றி நண்பர் தனபாலன்.

      நீக்கு