ஞாயிறு, 12 மே, 2019

மதம் கடந்த மனிதம்!!!

இன்றைய[12.05.2018] ஊடகங்கள் பலவற்றிலும் வெளியானது கீழ்வரும் செய்தி. மிக்க மகிழ்வுடன் மனதார நாம் அனைவரும் வரவேற்கும் இம்மாதிரி நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுதல் வேண்டும் என்பது நம் விருப்பம்.

மனிதம் போற்றிய இளைருக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

நன்றி: https://awesomemachi.com/youngster-breaks-ramzan-fasting-for-donating-blood/

#அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்தவர் பனுல்லா அகமது. 26 வயதாகும் இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். அவரது அறை நண்பனான தபாஷ் பகதியும் அதே மருத்துவமனையில் டெக்னீஷியனாகப் பணியாற்றி வருகிறார். தபாஷ் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து ரத்ததானம் போன்ற சேவைகளையும் ஒருங்கிணைத்து வருகிறார். இந்நிலையில் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராஜன் என்பவருக்கு உடனடியாக 2 யூனிட் ரத்தம் தேவை என தபாஷுக்கு அழைப்பு வந்துள்ளது. பல இடங்களில் முயற்சி செய்தும் ரத்தம் கிடைக்காத நிலையில் தன் அறை நண்பண் பானுல்லாவிடம் விஷயத்தை கூறியிருக்கிறார். இதையறிந்த பானுல்லா தானே ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளார்.

ஆனால் பானுல்லா ரமலான் நோன்பில் இருப்பதால் உணவு ஏதும் உட்கொள்ளாத நிலையில் ரத்தம் கொடுக்க வேண்டாம் என தபாஷ் கூறியுள்ளார்.
ஆனால் சூழ்நிலையை புரிந்து கொண்ட பானுல்லா மருத்துவமனைக்குச் சென்று நோயாளிக்கு 1 யூனிட் ரத்தம் கொடுத்துள்ளார். இது குறித்துத் தபாஷ் பேசிய போது, “எனக்கு ரத்த தானம் தொடர்பாக அழைப்பு ஒன்று வந்தது. அதில் நோயாளி ஒருவருக்கு கட்டி அறுவை சிகிச்சை செய்ய அவருக்கு ‘பி’ பாஸிட்டிவ் ரத்தம் தேவைப்படுகிறது. நாங்கள் பலரிடம் கேட்டோம். ஆனால் எங்கேயும் கிடைக்கவில்லை. நல்லவேளை, என் நண்பன் ரத்தத்தை தானமாக வழங்கினான். நோன்பிருக்கும் நிலையிலும் அவன் ரத்தம் வழங்கியது பெருமையாக உள்ளது” என்றார்.
இது குறித்துப் பேசிய பனுல்லா “என் நண்பன், பி பாஸிட்டிவ் ரத்தம் உள்ளவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டுக்கொண்டிருந்தான். நான் என் மதத்தைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசித்தேன். நான் ரத்த தானம் செய்ய முடியும். ஆனால் உடல்நலம் சரியில்லாமல் போகலாம். அதனால் விரதம் வீணாகிவிடும் என்றனர். அப்போது நான் என் விரதத்தைக் கைவிட்டு ரத்தம் கொடுக்க முடிவு செய்தேன். மனித வாழ்க்கையும் மனிதநேயமும் தான் அனைத்துக்கும் மேல். நான் ரத்த தானம் செய்ய முடிவெடுத்தபோது எனக்கு வேறு எண்ணமே இல்லை. ரத்தம் கொடுக்க வேண்டும் அவ்வளவுதான். உடல் ரீதியாகப் பொருந்தும் அனைவருக்கும் ரத்தத்தை தானம் செய்ய வேண்டும். ரத்தத்தைத் தானம் செய்வது கடவுளுக்குச் செய்யும் சிறந்த சேவையாகும். இந்த உணர்வு சிறப்பாக உள்ளது” என்று பனுல்லா கூறியுள்ளார்.
இஸ்லாமியர்கள் இருக்கும் ரமலான் நோன்பைக் கைவிட்டுப் பனுல்லா ரத்ததானம் செய்தது அனைவர் உள்ளத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது#
----------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக