திங்கள், 13 மே, 2019

'குமுதம்' வார இதழ் அதிபரின் கனிவான கவனத்திற்கு.....!

அதிபர் அவர்களே,
அமரர்களான தங்களின் தந்தையாரும்[பி.வி.பார்த்தசாரதி], அன்றைய இதழின் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களும், துன்புற்றோரின் துயர் தணிப்பதற்காகத்[இது அவர்களின் நம்பிக்கை] உருவாக்கி இயக்கியது 'குமுதம் பிரார்த்தனைக் கிளப்' என்னும் கூட்டு வழிபாட்டுக் குழு அமைப்பு.

என்ன காரணத்தாலோ இதன் இயக்கம் மிகப் பல ஆண்டுகளாகத் தடைபட்டுப்போனது.

பயன் விளைகிறதோ இல்லையோ, மீண்டும் இந்தக் கூட்டு வழிபாட்டு முறையைத் தாங்கள் நடமுறைப்படுத்தியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

அதென்ன 'கிளப்'?!

'பலர் இணைந்து செயல்படும் இடம்' என்பது போன்ற இச்சொல்லுக்கான பொருள்கள் பலரும் அறிந்ததுதான் என்றாலும், 'கிளப்' என்பது வசதிபடைத்தவர்கள் கூடுகிற இடம் என்றுதான் என் போன்ற சாமானிய மக்கள் நினைக்கிறார்கள்.

'தினமணி', 'இந்து தமிழ்', 'ஆனந்த விகடன்' போன்ற இதழ்கள் பிறமொழிச் சொற்களை விலக்கி, தரமான நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் இந்நாளில் குமுதம் இவ்வகையில் பின்தங்கியிருப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

மொழி குறித்த உங்களின் போக்கை அன்புகொண்டு மாற்றிக்கொள்ளுங்கள். இனி.....

'குமுதம் பிரார்த்தனைக் கிளப்' என்பதற்குப் பதிலாக, 'குமுதம் கூட்டு வழிபாடு' என்று தலைப்பை மாற்றுங்கள்.

ஒரு சாதாரண வலைப்பதிவு எழுத்தாளன் என்பதற்காக[உங்களுக்கு வேண்டாதவனும்கூட] என்னின் இந்த வேண்டுகோளைப் புறக்கணிக்க மாட்டீர்கள் என்பது என் நம்பிக்கை.

நன்றி குமுதம் வரதராசன் அவர்களே.
==================================================================================
[இம்மடல் குமுதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது]






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக