பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 3 மே, 2019

தமிழ்நாடு அறநிலையத்துறையினருக்கு ஒரு மனம் 'வெதும்பிய' மடல்!!!

பெருமதிப்பிற்குரியீர்,

கீழ்க்காண்பது, தமிழகத்தில் உங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிர்வாகிகளுக்கு நீங்கள் பிறப்பித்த ஆணையின்[நாளிதழில்களில் படி எடுத்தது] நகல்.

நாதஸ்வரம், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை மீட்டுவதோடு, யாகங்கள் செய்து அவை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தியிருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் எப்போதாவதுதான் சராசரி அளவிலோ கூடுதலாகவோ மழை பெய்கிறது. பெருமளவில் மரங்களை அழித்தது; குளம், குட்டை போன்ற நீர் தேங்கும் இடங்களில் கட்டடங்களை எழுப்புவது; சுற்றுச் சூழலை மாசுபடுத்துவது என்று அதற்குப் பல காரணங்கள்  இருப்பது நீங்கள் அறியாதது அல்ல.

இத்தகு குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்தவதோடு, காடுகளைக் காப்பாற்றி, காணும் இடமெல்லாம் மரங்களை வளர்ப்பதன் மூலம் மீண்டும் நல்ல மழை பெய்வதற்கான சூழலை உருவாக்கலாம் என்பதும் நீங்கள் அறிந்ததே.

உண்மை இதுவாக இருக்கையில்.....

கோயில்களில் யாகங்கள் செய்யவும் இசைக் கருவிகளை மீட்டவும் நீங்கள் ஆணை பிறப்பித்திருப்பது நகைப்புக்குரிய செயலாகும்

மழை பொய்த்துப்போன காலங்களில் இப்படி யாகம் செய்து மழை பெய்வித்ததற்கான வரலாறு உள்ளதா?

அதற்கான பட்டியலை உங்களால் வெளியிட முடியுமா?

குன்னக்குடி வைத்தியநாதன், மெரினா கடற்கரையில் மழை வேண்டி அமிர்தவர்ஷிணி ராகத்தை வயலினில் இசைத்ததை நினைவுகூர்ந்திருக்கிறீர்கள். அந்த ராகத்தை வாசித்ததால் மனநிறைவு தரும் வகையில் மழை பெய்ததாக நீங்கள் குறிப்பிடவில்லையே, ஏன்? ஏனுங்க?!

பருவநிலை மாற்றம், புயலின் தாக்கம் போன்றவற்றால்தான் மழை பெய்ய வாய்ப்புள்ளதே தவிர, மேற்குறிப்பிட்ட மூடத்தனமான செயல்களால் மழை பெய்விப்பது சாத்தியமே இல்லை என்பதை இனியேனும் உணருங்கள். அளவற்ற மூடநம்பிக்கைகளில் சிக்குண்டு தவிக்கிற மக்களை மேலும் மூடர்கள் ஆக்காதீர்கள்.

'நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்'.

நன்றி.

================================================================================== 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக