பக்கங்கள்

வெள்ளி, 12 ஜூலை, 2019

கடவுள் ஏன்?

அறியப்படதவற்றை அறியும் ஆர்வம் உள்ளவர்களுக்கான ஆழ்நிலைச் சிந்தனைப் பதிவு இது! அமலாபாலின் அரைகுறை நிர்வாணக் கோலத்தைச் சமூக ஊடகங்களில் கண்டு ரசித்து ஆனந்தப் பரவசத்தில் ஆழ்ந்தோர் எண்ணிக்கை 50 லட்சமாம்[பழைய செய்தி]! 

இருண்ட வெளி க்கான பட முடிவு

கடவுள் குறித்த மாயையிலிருந்து மனிதகுலத்தை விடுவிக்க முயலும் இப்பதிவை வாசிப்போர் எண்ணிக்கை ஒரு 100ஐத் தாண்டுமா?! ஹி...ஹி...ஹி!!

‘கடவுள் தோன்றவில்லை. அவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர்[ஆதியும்
அந்தமும் அற்றவர்]; என்றும் இருப்பவர்' என்ற கருத்து நிலவுவதை நாம் அறிவோம்.

இப்போதைக்கு அவர் ‘தோன்றியவர்’ என்றே வைத்துக் கொள்வோம். [அது
என்ன வைத்துக் கொள்வது?’ என்ற  கேள்வியெல்லாம் இங்கு வேண்டாம்]

சில உண்மைகளைக் கண்டறிய இம்மாதிரி, தற்காலிகமான ஒரு நிலையை ஏற்பது அவசியமாகிறது.

கடவுள் எப்போது தோன்றினார்?

எவ்வளவு ‘காலத்துக்கு’ முன்னால்?

[இப்போதைய’ஆண்டுமுறை’ என்பது ஒருவர் அல்லது ஒன்றின் தோற்றத்தைத் தொடக்கமாகக் கொண்டு, மனிதன் தன் வசதிக்காக உருவாக்கிக் கொண்டது.   மணி, நாள், மாதம் போன்றவை, சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டவை.]

‘காலம்’ என்னும் மகா...மகா...மகா...மகாப் பெரும் வெள்ளத்தோடு ஒப்பிட் டால், மனிதனின் இந்த ஆண்டுக் கணக்கு சிறு கடுகு! கடுகுக்குள் ஒரு துணுக்கு. துணுக்குக்குள் துணுக்கு. அதற்குள்ளும் சிறு துணுக்கு.

உண்மையில் ஆண்டு என்ற ஒன்று இல்லவே இல்லை.

பொருள்களின் இயக்கங்களை வைத்துத்தான் காலம் வரையறுக்கப் படுகிறது. வெளியில் எதுவுமே இல்லை என்ற ஒரு நிலையை அனுமானம் செய்து பாருங்கள். [அப்படி ஒரு நிலை சாத்தியமா என்பது மிக ஆழமான, கால வரையற்ற ஆய்வுக்கு உட்பட்டது]. எதுவுமே இல்லை; அதாவது எங்கும் எப்பொருளும் இல்லை, எந்தவித இயக்கமும் இல்லை என்னும்போது காலம் என்ற ஒன்றைக் கற்பனை செய்வதும் சாத்தியம் இல்லாமல் போகிறது.

திசையும் அப்படித்தான். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, தென்மேற்கு..... எனப்படும் திசைகள் எல்லாம், சூரியனை மையமாகக் கொண்டு மனிதனே ஏற்படுத்திக் கொண்டவை.

சூரியன் இல்லையென்றால் இவையெல்லாம் இல்லை.

நம் ஆய்வுக்கு இந்தத் துக்கடா ஆண்டுக் கணக்கெல்லாம் உதவாது.

ஒரு பெரிய ‘கால அளவு’ தேவை. சூரியன் ஒரு முறை தோன்றி மறை
வதற்கான கால இடைவெளியை, ஒரு ‘சூரிய ஆண்டு’ எனக் கொள்வோம்.

கடவுள் எத்தனை சூரிய ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றினார்?

‘நூறு கோடி சூரிய ஆண்டுகளா?.....ஆயிரம் கோடியா?..... லட்சம் கோடி
சூரிய ஆண்டுகளா?.....இன்னும் கோடானுகோடியோ கோடி சூரிய ஆண்டுகளா?......’என்று மனிதன் தலைமுறை தலைமுறையாகக் கேட்டுக்கொண்டே இருந்தாலும் விடை கிட்டாதுதானே?![அன்பு கொண்டு இந்தவொரு கால அளவீட்டு முறையைச் சிறுபிள்ளைத்தனம் என்று கருத வேண்டாம்]

ஆக, ‘காலம்’ என்பதும், ‘வெளி’யின் பரப்பைப் போலவே அளந்து அறிய முடியாத ஒன்று என்பது தெளிவாகிறது அல்லவா?

அதாவது, ’காலம்’ என்பதன் ’ஆரம்பம்’ அல்லது ‘முடிவு’ பற்றி நமக்கு எது
வும் தெரியாது.

இந்தத் ‘தெரியாது’ என்பதை ஒப்புக் கொள்ளப் ’பெருந்தன்மை’ வேண்டும்.
இது நம் மதவாதிகளுக்கும் ஆன்மிகப் பெரியோர்களுக்கும் இருந்திருந்தால்
கடவுள் என்ற ஒருவர் கற்பனையில் உதித்திருக்க மாட்டார். கணக்கற்ற கலவரங்களுக்கும் உயிப்பலிகளுக்கும் காரணமான மதங்கள் தோன்றியிருக்கவே மாட்டா.

மீண்டும் தலைப்புக்கு வருவோம்.

பிரமிப்பில் மூழ்கடித்துத் திணற வைக்கும் இந்தக் ‘காலம்’ என்னும் ’புதிரை’
நன்கு புரிந்து கொண்டால், ’ஜோதிடம்’ பொய் என்பதை உணர முடியும்.

இயற்கையில் ‘காலம்’ என்று ஒன்று இல்லாத நிலையில், சூரியன் மற்றும் பிற கோள்களின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒருவனின் பிறந்த நேரத்தைக் கணித்து, அவனின் எதிர்காலம் பற்றி விவரித்துச் சொல்வது வீண் செயல் ஆகும்.

’காலம்’ போன்றதுதான் ‘வெளியின் மையப் புள்ளி’யும். புரிந்து கொள்வ தற்கு மிகவும் அரிதானது.

ஏற்கனவே வெளி பற்றி நாம் அறிந்தவற்றை மனதில் இருத்தி, வெளியின்
‘மையப் புள்ளி’, அல்லது, ‘நடு இடம்’ எது என்று சிந்தித்துப் பாருங்கள்.

வெளியின் எந்தவொரு புள்ளியிலிருந்து எந்தவொரு கோணத்தில் நம் பயணத்தைத் தொடங்கினாலும் அந்தப் பயணம் முடிவற்றதாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்; வெளியின் ஒவ்வொரு புள்ளியும் அதன் மையப்புள்ளிதான்.

[இது பற்றியெல்லாம் விஞ்ஞானிகளால்தான் ஆராய முடியும் என்பதில்லை. நமக்குள்ள அறிவைக்கொண்டு ஆராய்வதன் மூலம் உண்மைகளைக் கண்டறிவது சாத்தியம்தான்.]

இதனால், வெளிக்குத் திசை கிடையாது என்பதும் நமக்குப் புரிகிறது.

வெளியின் நிலை இவ்வாறு இருக்கும் போது, திசையின் இருப்பை அடிப்படையாகக் கொண்ட[ஈசான மூலை,.......சனி மூலை,......]வாஸ்து சாஸ்திரம் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றுவருவதற்கு, இயற்கையில் பொதிந்து கிடக்கும் புதிர்களை விடுவிப்பதில் மிகை ஆர்வம் இல்லாததே காரணம் ஆகும்.

இது, கடவுள் என்னும் ஒருவர் கற்பனை செய்யப்படவும், எண்ணற்ற மதங்கள் தோன்றவும் காரணமாக அமைந்துவிட்டது.
=================================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக