பக்கங்கள்

செவ்வாய், 16 ஜூலை, 2019

அறிஞர் அண்ணாவின் ‘திராவிடநாடு’ இதழிலிருந்து.....!

அண்ணா க்கான பட முடிவு

‘.....மற்ற அரசியல் நாளேடுகள் மாலை 4 அல்லது 5 மணிக்கே கடைகளில் தொங்கும். ‘நம் நாடு’ ராயபுரம் அச்சகத்திலிருந்து 4 மணிக்கு வெளிவந்தாலும் தியாகராய நகர் மற்றும் சைதாப்பேட்டைக் கடைகளுக்குப் போய்ச்சேர 7 அல்லது 8 மணி நேரம் ஆகும்.

ஆனாலும், கட்சி மயக்கத்தில் ஆழ்ந்துகிடக்கும் அண்ணாவின் தம்பிகள் கடைகளுக்கு முன்னால் காத்துக்கிடந்து இதழ் கிடைத்ததும் பூரித்துப்போவார்கள்.

இப்படிப்பட்ட ஆர்வலர்களால் வளர்ந்ததுதான் தி.மு.கழகம். ஏன், திராவிட இயக்கமே இத்தகைய தூய தொண்டர்களால் வளர்க்கப்பட்டதுதான்.

அத்தகைய ஆர்வம் இன்று எந்தவொரு கட்சியின் தொண்டர்களிடமும் இல்லை. எல்லோருமே தம் வீடு, தம் குடும்பம், தம் வாரிசுகள் என்று குறுகிவிட்டார்கள்.

                                  *                                              *                                           *  

‘ஹோம்லண்ட்’ ஆங்கில இதழ் தொடங்கியபோது திராவிடநாட்டில் அது குறித்து அண்ணா எழுதிய அறிமுகம் வெகு சுவையானது, அதன் சுருக்கம்.....

‘தம்பி, ஆங்கில இதழ் முந்திரிப் பருப்பானால் ‘திராவிடநாடு’ வெண்பொங்கல். அது கருவி. இது என் உள்ளம். அது பிறர் நெஞ்சைத்தொட. இது உன்னுடன் உறவாட. அது பிறருக்கு நம்மை விளக்க. இது நம்மை உருவாக்க. எனவே இதனை இழந்துவிட நான் ஒருபோதும் சம்மதியேன்.’

                              *                                                *                                             *

அவர் கனவு கண்ட ‘திராவிடநாடு’ கைகூடாவிட்டாலும், இலக்கியம் என்னும் பரந்து விரிந்த நாட்டில் அவர் செங்கோல் ஏந்தி ஆட்சிபுரிந்தார். பலர் இணைந்து செய்யும் பணியை அவர் ஒருவரே தன்னந்தனியராகச் செய்து முடித்தார்.

அரசியல் விமர்சனம், பயணக் குறிப்புகள், கேலிச்சித்திரம், நாடகம், சிறுகதை, தொடர்கதை, புதினம் என்று அனைத்துத் துறைகளையும் ஒருகை பார்த்ததுடன் அவற்றில் தம் கைவண்ணத்தைப் பதித்தார்.

                           *                                                *                                              *

அண்ணா அன்பின் உருவகம். அவர் உருவாக்கிய குடும்பப் பாசம் அவரின் தம்பிகளையும் கட்சியையும் இணைபிரியாமல் கட்டிப்போட்டிருந்தது. வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வரும் தம்பிகள் அவருக்கு வாய்த்தார்கள். 

1949இல் கட்சி தொடங்கி, 18 ஆண்டுகள் மிகக் கடுமையாக உழைத்து 1967இல் ஆட்சிக் கட்டில் ஏறினார். ஆனால், தமிழ்நாட்டின் துர்ப்பாக்கியம் இரண்டே ஆண்டுகளில் அவரைக் காலம் காவு கொண்டுவிட்டது.
=================================================================================
மேற்கண்ட குறிப்புகள், ‘கல்பனா தாசன்’ அவர்களின் ‘சில தீவிர இதழ்கள்’ [காலச்சுவடு பதிப்பகம்] என்னும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டவை.          


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக