திங்கள், 4 நவம்பர், 2019

இந்தக் கடவுள் புதுசு!!!

நாம் படைக்கப்பட்டது ஏன்? எவ்வாறு? எதன்பொருட்டு? என்பன போன்ற கேள்விகளுக்கு இன்றளவும் விடை கிடைத்திடவில்லை என்பதைச் சிந்தித்து உணரும் அறிவு நம்மில் மிக மிக மிகப் பெரும்பாலோருக்கு இல்லை. 

இயல்பாக அமைந்த மரண பயத்தைப் போக்குவதற்காகவும், நம் சக்திக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்து முடிப்பதற்காகவுமே கடவுளைக் கற்பித்தார்கள் மனிதர்கள்.

ஒரு கடவுளிடம் கோரிக்கை வைத்து அது நிறைவேறாதபோது, இன்னொரு கடவுளைக் கற்பித்து வழிபடுகிறார்கள்.

அவராலும் தம் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாதபோது, தத்தம் கற்பனைத் திறனுக்கேற்பப் புதிய புதிய கடவுள்களை உருவாக்குகிறார்கள். இவ்வாறான இடையறாத மனிதச் செயல்பாடுகளின் விளைவாக இன்று கணக்கிலடங்காத கடவுள்கள் இம்மண்ணில் இடங்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

தின்று கழித்து, உறங்கி விழித்து, வாழ்ந்து மடிந்துபோகிற மனிதர்களையே கடவுளாக்கிப் போற்றித் துதிபாடுவதும் அவ்வப்போது நிகழ்ந்திருக்கிறது. அந்தப் பட்டியலில்.....

இன்றளவும் மகாப் பெரிய மகான் என்றும் நடமாடிய கடவுள் என்றும் மனித தெய்வம் என்றும் கலியுகக் கடவுள் என்றும் போற்றப்பட்ட/படுகிற ஒரு மடாதிபதியும், பரமஹம்சர்களும் பாபாக்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இன்றைய நிலையில், வழிபாட்டுக்குரியவராக நம்பர் 1 இடத்தைப் பெற்றிருப்பவர் ஷீரடி சத்திய சாயிபாபா.

தற்செயலாக நிகழும் வியக்கத்தக்க நிகழ்வுகளையெல்லாம் இவரால் நிகழ்ந்தது என்று பரப்புரை செய்து முன்னணிக் [ஒரிஜினல்]கடவுள்களின் பட்டியலில் இவரைச் சேர்த்துவிட்டார்கள் பக்தகோடிகள். இவர்களுக்குப் பக்கத் துணையாக இருப்பவை பிரபல நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும்.

ஏ.வி.எம். சரவணனும் செ.சுப்பையாவும், அவர்கள் குறிப்பிடுகிற நிகழ்வுகளுக்குக் காரணம் பாபாவை வழிபட்டதுதான் என்கிறார்கள். இது போதாது. பல்லாயிரக்கணக்கானவர்கள் பாபாவிடம் கோரிக்கை வைத்திருப்பார்கள். அத்தனையும் பாபாவின் அருளால் நிறைவேறின என்பதற்கு ஆதாரம் கிடையாது.

யாரோ சிலரிடம் கருத்துக் கேட்டு, அதை வெளியிட்டு மகான்கள் எனப்படுபவர்களுக்குப் புகழ் சேர்ப்பதைத் தொழிலாகக் கொண்டுவிட்டன நம் ஊடங்கங்கள். 

“நீ மாயையில் சிக்கி, புற உலகை நம்பி வாழ்கிறாய்” என்கிறார் சாயி மகான். 

இம்மண்னில் பிறந்து வாழ்கிற நம் கருத்தில் பதிவது இந்தப் புற உலகுதான். இதை நம்பாமல் வேறு எதை நம்புவதாம்? அக உலகம் என்று ஒன்று இருக்கிறதா? அது எங்கே இருக்கிறது?

“நான் இருப்பதை மறந்துவிடாதே” என்கிறார் சீரடியார். மக்கள் மறக்கத் தயார்தான். மறக்கவிடாமல் தடுப்பவர்கள் ஆன்மிகப் போதகர்களும் ஊடகக்காரர்களும்தான்.

இவர்கள் திருந்தாதவரை மூடநம்பிக்கைகளிலிருந்து மக்களால் ஓருபோதும் விடுபட முடியாது.

முடியவே முடியாது.

சீரடி பகவான்[?!?!?!] குறித்த என்னுடைய பழைய பதிவுகளின் முகவரி தந்திருக்கிறேன். வாசியுங்கள். பாபா மயக்கத்திலிருந்து விடுபட இவை உதவக்கூடும்.

=======================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக