புதன், 10 ஜூன், 2020

பக்தர்களை விடவும் பகவான் முட்டாளா?!


பல கோடி மக்களின் மனம் புண்படும் வகையில் நடிகர் சிவகுமார் பேசியதாக, ‘இந்து தமிழ்’[10.06.2020] நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி. “கடவுள் முன் ஏழை பணக்காரன் என்னும் வேறுபாடு இல்லை” என்றும் சொல்லியிருக்கிறார்[எனவே, சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது உறுதியாகிறது].

ரெட்டி அவர்களின் சிந்தனைக்கு.....

*ஏழை பணக்காரன் என்னும் வேறுபாடு கடவுள் முன் இல்லையென்றால், ஏழுமலையானைத் தரிசிக்க நாள் கணக்கில் ஏழைகளான பக்தர்கள் காத்திருக்கையில், சிறப்புக் கட்டணம் பெற்றுக்கொண்டு பணக்காரர்களைக் குறைந்த அவகாசத்தில் அனுமதிக்கிறீர்கள். இதைத் தட்டிக் கேட்கும் திராணியும், போராடுவதற்கான வலிமையும் ஏழைகளுக்கு இல்லை. அந்த அளவுக்கு, உங்களைப் போன்ற ஆன்மிகவாதிகள் பொய்யும் புளுகும் கலந்த கற்பனைக் கதைகளைச் சொல்லிச் சொல்லி அவர்களை முட்டாள்களாக ஆக்கியிருக்கிறார்கள்.

நீங்கள் நம்புகிற, பிறரையும் நம்பச் சொல்லுகிற கடவுளும், பொய் சொல்லுகிற உங்களையெல்லாம் ஒருபோதும் தண்டித்ததில்லை என்பதால், அவரும் முட்டாளாகக் கருதப்படுகிறார். 

*கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோ துலாபாரம் மூலம் பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் வெல்லம், சர்க்கரை, மாட்டுத்தீவனம் எல்லாம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறீர்கள். பசுக்களுக்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை? அது புனிதமானது என்று புராணங்கள் சொல்வதாலா? தன்னையே நமக்கு உணவாக்குகிற  ஆடு, நன்றியுள்ள நாய், பன்றி, கழுதை போன்ற பிற விலங்குகள் புறக்கணிக்கப்படுகின்றன. கருணை வடிவினனான உங்களின் கடவுள் முன்னிலையில் அனைத்து உயிரினங்களும் சமம் என்பதைத் தாங்கள் மறந்துவிட்டது ஏன்?

*சிவக்குமார், பக்தர்களின் மனம் புண்படும் வகையில் பேசிவிட்டதாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஏழுமலையானின் பெயரால் பக்தர்களின் மூளையில் உங்களின் முன்னோடிகள் திணித்துவைத்த மூடநம்பிக்கைகளை நீங்கள் அழியாமல் பாதுகாக்கிறீர்கள். இம்மாதிரி நடவடிக்கைகளால், இந்த மண்ணில் முட்டாள்களின் எண்ணிக்கை பெருகுகிறதே என்று கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்த என் போன்றவர்களின் மனம் எந்த அளவுக்குப் புண்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

பக்தர்கள் அல்லாதோரின் மனதைப் புண்படுத்துவதற்காக, உங்களைப் போன்ற ஆன்மிகவாதிகள் மீது வழக்கைப் பதிவு செய்தால் அதில் தவறேதும் இல்லைதானே?

*‘கடவுள்தான் மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களையும் படைத்தார். அவர் கருணை வடிவானவர்; ஆத்திகர்களை மட்டுமல்லாது நாத்திகர்களையும் காப்பாற்றுபவர் அவரே’ என்கிறீர்கள். ‘கடவுளை நிந்திப்பவனை அவர் தண்டிப்பார்’ என்றும் சொல்கிறீர்கள். இப்படி முரண்பட்டுப் பேசுகிற உங்களைப் போன்றவர்களைக் கடவுள் தண்டிப்பது எப்போது?

*கடவுள் குறித்துக் கதைகள் திரிப்பதற்கும் பரப்புரை செய்வதற்கும் ஆத்திகனுக்கு உரிமை உண்டு என்றால், அவற்றை விமர்சனம் செய்வதற்கும் பரப்புரை செய்வோனைக் கண்டிப்பதற்கும் சமுதாய நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. எது சரி, எது தவறு என்று முடிவெடுக்கும் பொறுப்பை நீங்கள் நம்புகிற கடவுளிடமே விட்டுவிடுங்கள். தண்டனை வழங்கும் அதிகாரத்தை நீங்கள் கைப்பற்றுவதன் மூலம் அவரைக் கேனயன் ஆக்க வேண்டாம்.

*நீங்கள் எப்போதும் பக்தராகவே இருங்கள். கடவுளை உங்களின் பக்தராக ஆக்கும் முயற்சி வேண்டவே வேண்டாம்.

*ஒருவர் பக்தராக இருப்பது அவரின் உரிமை. கூடவே, ஒரு பகுத்தறிவுள்ள மனிதனாகவும் வாழ்ந்தால் அது இந்தச் சமுதாயத்துக்கு நன்மை பயப்பதாக அமையும்.

*இங்கு பெரும்பாலும் ஆத்திகர் ஆட்சியே நடக்கிறது. அதைச் சாதகம் ஆக்கி,  பக்தகோடிகளையும், கற்பனைக் கடவுள்களையும் விமர்சனம் செய்வோரைத் தண்டிக்கும் முயற்சி வேண்டாம். ஏனெனில்.....

காலம் மாறும். 
=======================================================================