அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 8 ஜூன், 2020

பொட்டச் சிறுக்கி![‘சுரீர்’ கதை]

அடுத்தடுத்துப் பெண்களைப் பெற்றவர்கள் அவசியம் படிக்கவேண்டிய ‘படிப்பினை’க் கதை!
ரகர் வந்து போன சிறிது நேரத்தில், வெளியே கிளம்பினார் வேல்சாமி.

“பொருத்தம் பார்க்கவா அப்பா?” -கேட்டவள் அவரின் கடைசி மகள் யாழினி.

“ஆமாம்மா."

“கொஞ்சம் உட்காருங்க.”

நாற்காலியில் உட்கார்ந்தார் வேல்சாமி.

“மனசைத் திறந்து சொல்லுங்கப்பா. மூனும் பொண்ணாப் பெத்திருக்கீங்களே, ஏம்ப்பா?”

“அது வந்தும்மா...........” -உடைந்து சிதறின வார்த்தைகள். பேசும் சக்தியை இழந்திருந்தார் வேல்சாமி.

“அம்மா சொல்லியிருக்காங்கப்பா.  உங்க ரெண்டு பேர் ஜாதகப்படி, முதல் குழந்தை ஆண்பிள்ளைதான்னு நம்புனீங்க. அது நடக்கல. பெரிய அக்கா சாருலதா பிறந்ததுக்கு அப்புறமும் பையன் வேணும்னு ஆசைப்பட்டீங்க. ஜோசியரைப் பார்த்தீங்க. அடுத்தது பையன்தான்னு அவர் அடிச்சிச் சொன்னாரு. ஆனா, பையனுக்குப் பதிலா, அகல்யா அக்கா பிறக்கவும் ஆடிப்போனீங்க. அப்புறமும் ஆண் வாரிசு ஆசை உங்களுக்குப் போகல. ஒரு வி.ஐ.பி.ஜோதிடரைத் தேடிப் போய் உங்க ஆதங்கத்தை வெளிப்படுத்தினீங்க. அடுத்தது ஆண் சிங்கம்தான்னு அவர் உத்தரவாதம் தந்தாரு. என்ன ஆச்சு?.....”

பேசுவதை நிறுத்தி, பெத்த அப்பனின் முகத்தை விஷமப் புன்னகையுடன் ஆராய்ந்தாள் யாழினி.

“மேலே சொல்லுமா.” -பின்னாலிருந்து அம்மாவின் குரல். அவருக்குப் பின்னால் சாருவும் அகல்யாவும்.

“.....நீங்க எதிர்பார்த்த ஆண் சிங்கத்துக்குப் பதிலா ஒரு பொட்டச் சிறுக்கி நான் தப்பாப் பொறந்து தொலைச்சிட்டேன். இதெல்லாம் ஒரு ‘ஃப்ளாஷ் பேக்’தான். நான் சொல்ல வந்தது என்னன்னா, ஜோசியத்தை நம்பி மூனு பொம்பளப் புள்ளைகளைப் பெத்து ஏமாந்த நீங்க, அதே ஜோசியத்தை நம்பி அவங்களக் கரையேத்த நினைக்கிறீங்களே, இது நடக்குமா அப்பா? நியாயமா அப்பா?.....

.....கல்யாணம்கிற ஓட்டப் பந்தயத்துல, ராசிப் பொருத்தம், யோனிப் பொருத்தம், செவ்வாய் தோசம், புதன் தோசம், மூலம், கேட்டை, கூமுட்டை, வரதட்சணைன்னு பல தடைகளையும் தாண்டி ஜெயிச்சி வந்தாத்தான்  ஒரு கன்னி கழுத்தில் ஒரு ராஜகுமாரன் மாலை சூட்டுவான். நடுவுல தடுக்கி விழுந்துட்டா அவ நித்திய கன்னிதான். உங்க மூனு பொண்ணுகளும் நித்திய கன்னிகளாவே இருந்துடட்டும்னு நினைக்கிறீங்களா அப்பா?”

-சொல்லி முடித்தாள் யாழினி.

“என்னை மன்னிச்சுடுமா.” -கையிலிருந்த ஜாதகங்களைப் பரண் மீது கடாசிவிட்டு, “மாப்பிள்ளை வீட்டாருக்கு நம்ம சாருவைப் பிடிச்சிருக்குன்னு தரகர் சொன்னாரு. நம்ம சம்மதத்தையும் அவர் மூலமா அவங்களுக்குத் தெரியப்படுத்திட்டு வர்றேன்” என்று சொல்லிக் கிளம்பினார் வேல்சாமி. 
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000
22.07.2015இல் இதை நீங்கள் படித்திருக்கவும்கூடும். சில முக்கிய திருத்தங்களுடன் மீண்டும் வெளியிடப்பட்டது.