“கடவுள் யார்?” என்று கேட்டால்.....
“நீயும் நானும் உட்பட, அண்டவெளியிலுள்ள அனைத்துப் பொருள்களையும் உயிர்களையும் படைத்தவர்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்வார்கள் ஆன்மிகவாதிகள்; அந்தக்காலப் பகவான்களும் ஞானிகளும் அவதாரங்களும் சொல்லிப்போனதையெல்லாம் மேற்கோள் காட்டி அசத்துவார்கள்.
“கடவுளா, அவர் எங்கே இருக்கிறார்?” என்று வினவினால்.....
“அணு முதல் அண்டம்வரை எங்கெங்கு காணினும் நீக்கமற நிறைந்திருக்கிறார்; தூண், துரும்பு, அரும்பு, கரும்பு, ஈ, எறும்பு என்று நாம் காணும் பொருளிலெல்லாம் இரண்டறக் கலந்திருக்கிறார்; உனக்குள்ளேயும் எனக்குள்ளேயும்கூட இருக்கிறார்” என்று சொல்லிக் கேட்டவரைத் திகைக்க வைப்பார்கள்.
“கடவுள் எப்படி இருப்பார்?” -
கேள்வி எழுப்பினால்.....
கேள்வி எழுப்பினால்.....
“அவனாக இருப்பார்; அவளாக இருப்பார்; அதுவாகவும் வேறு எதுவாகவும் இருப்பார். இல்லாமலும் இருப்பார். எல்லாம் அவரே; அவரே எல்லாம்” என்று எதையெதையோ சொல்லி நம்மை மௌனம் சுமக்க வைப்பார்கள்.
“கடவுள் எப்படிப்பட்டவர்?” என்று வினவினால்.....
“அவர் எல்லாம் வல்லவர்; அன்பானவர்; கருணை வடிவானவர்; ஆபத்பாந்தவன்; அனாதைகளின் இரட்சகன்” என்றிப்படி அடுக்கிக்கொண்டே போவார்கள்.
“நன்றி...நன்றி ஐயா. கடவுளைப் பற்றிய உங்களின் கருத்துரையெல்லாம் சரிதானா என்பதைப் பின்னர் ஆராய்வோம். என்னிடம் கேட்பதற்கு இன்னும் பல கேள்விகள் உள்ளன. இந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்; “அனைத்தையும் படைத்தவர் அவரே என்கிறீர்கள். அந்த அனைத்தையும் அவர் எதற்காகப் படைத்தார்?”
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மனம்போன போக்கில் கதையளந்த ஆன்மிகங்கள் இந்தக் கேள்விக்குத் தரும் பதில், “அவனன்றி வேறு யார் அறிவார்” என்பதாகத்தான் இருக்கும். காரணம்.....
“அவர் படைத்தது உயிர்களுக்காகத்தான் என்று உளறி வைத்தால், கடவுளின் படைப்பில் உள்ள பிழைகள்[உயிர்கள் பிற உயிர்களை உணவாக்கிக் கொள்ளுதலும், பெறும் இன்பங்களைக் காட்டிலும் உறும் துன்பங்களே மிகுதியாயிருத்தலும் இன்ன பிறவும்] குறித்த கேள்விகளுக்கும், “தனக்காகவே படைத்தார்” என்றால், “அத்தனை சுயநலவாதியா அவர்?” என்னும் கேள்விக்கும் பதில் சொல்ல இயலாது என்பதே.
=======================================================================-