திங்கள், 20 ஜூலை, 2020

விஞ்ஞானிகளும் மெய்ஞ்ஞானிகள் என்னும் பொய் ஞானிகளும்!!

விஞ்ஞானிகளை நமக்குத் தெரியும். ‘இவ்வாறு இருக்கலாம்’ என்று தாம் அனுமானித்தவற்றை, அறிவியல் சாதனங்களின் உதவியுடன் நிரூபித்த பின்னரே அதை உலகுக்கு அறிவிப்பார்கள். நிரூபிக்க இயலாதபோது, “இது வெறும் அனுமானம்தான்” என்று ஒத்துக்கொள்ளத் தயங்காதவர்கள் அவர்கள். உலகம் ஏற்குமா இல்லையா என்பது பற்றிப் பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் அடுத்த ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவார்கள்.

நமக்குள் எழும் ஐயங்களை இவர்கள் முன்னால் வைக்கும் போது, உரிய விளக்கங்களைத் தர இயலவில்லை என்றால், “தெரியாது”, அல்லது, “புரியவில்லை” என்று கவுரவம் பார்க்காமல் இயலாமையை ஒத்துக் கொள்வார்கள்.

மிகக் கடுமையாய் உழைத்தும் உண்மைகளைக் கண்டறிய இயலாதபோது, அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல், தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்கள்.

‘கண்டுபிடித்தே தீருவது’ என்ற தணியாத ஆவேசத்துடன் அலுக்காமல் உழைப்பார்கள்; சேர்த்து வைத்த பொருளை இழப்பார்கள்; ஆய்வுக்குத் தம் உடலையே அர்ப்பணித்து உயிரிழக்கவும் துணிவார்கள்.

இவர்கள், தாம் மேற்கொண்ட ஆய்விலேயே மூழ்கிக் கிடப்பார்கள். மக்களிடமிருந்தோ ஆளுவோரிடமிருந்தோ பெரும் பாராட்டுகளை எதிர்பார்ப்பதில்லை. தம் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் அளித்தால் மகிழ்வார்கள். புகழ் தேடி அலையாதவர்கள் இவர்கள். அதற்கான போதிய நேரமும் இவர்களுக்கு வாய்ப்பதில்லை.

குறைந்தபட்சம் நமக்குப் பயன்படுகிற மிக நல்ல கண்டுபிடிப்புகளைத் தந்த இவர்களில் சிலரின் பெயர்களைக்கூட நம் மக்கள் அறிந்துகொள்வதில்லை; விழாக்கள் நடத்தி இவர்களைச் சிறப்பிப்பதும் இல்லை. மாறாக.....

தாம் அனுமானித்தவற்றோடு, புனைவுகளும் கற்பனைகளும் கலந்து, ‘இதுவே உண்மை’ எனப் பறைசாற்றுகிறவர்களும், தொடர் பிரச்சாரங்கள் மூலம் அதை மக்கள் மனங்களில் ஆழப் பதிய வைப்பவர்களும் ஆன மகான்களையும் அவதாரங்களையும்[படிப்பவர்களுக்குப் புரியும் என்பதால் உதாரணங்கள் தரப்படவில்லை] ‘மெய்ஞ்ஞானிகள்’ என்று போற்றித் துதிபாடி இன்புறுவதிலேயே கருத்துச் செலுத்தினார்கள்...செலுத்துகிறார்கள்.

“தெரியாது”, “புரியவில்லை” போன்ற சொற்களை இந்த மெய்ஞ்ஞானிகள் ஒருபோதும் உச்சரித்ததில்லை. “நீ அஞ்ஞானி... அற்பஜீவி...” என்றோ, “நாம் சொல்லும் உண்மையை உணரத்தான் முடியும்; உணர்த்த முடியாது” என்றோ சொல்லி மக்களுக்கு வாய்ப்பூட்டு போடுபவர்கள்.

இவர்கள், “எல்லாம் அவன் சித்தம்... அவனின்றி அணுவும் அசையாது... அவனன்றி வேறு யாரறிவார்...” என்று சொல்லிச் சொல்லிச் சொல்லி உண்மைகளை ஆராய்ந்து அறியும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள்.

இவர்கள் கற்பித்துச் சென்ற ஆன்மா, சொர்க்கம், நரகம் என்பனவற்றைப் பேசிப் பேசிப் பிழைப்பு நடத்துபவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இதன் விளைவு மூடநம்பிக்கைகளின் பிடியிலிருந்து மக்கள் விடுபட முடியாத அவல நிலை தொடர்கிறது. எனவே.....

இந்நாள்வரை, இவர்களைத் துதிபாடி வாழ்ந்தது போதும்(மண்ணில் அமைதி நிலவுவதற்கு அனைவரும் மனிதநேயத்துடன் வாழ்ந்தால் போதும்). இனியேனும், மனிதகுலம் மேம்படுவதற்கு அயராது பாடுபடும் அறிவியல் அறிஞர்களுக்கு உலகெங்கும் பாராட்டுக் கூட்டங்கள் நடத்தியும், விழாக்கள் எடுத்தும் சிறப்பிப்பது மக்களுக்குரிய தலையாய பணியாகும். 

முக்கியக் குறிப்பு:
மனிதராய்ப் பிறந்து மனிதராய் வாழ்ந்து மனிதராய் மரணித்தவர்களை ‘மெய்ஞ்ஞானிகள்’ என்று புகழ்வதற்கு நம்மில் ஒரு சாராருக்கு உரிமை உண்டென்றால், அவர்களைப் ‘பொய் ஞானிகள்’ என்று சொல்ல என் போன்றவர்களுக்கு உரிமை உண்டு என்பதறிக.

நன்றி.
=====================================================================