அலுவலகம் செல்லப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். என்னிடம் உதவி வேண்டி வந்த நண்பரும் உடனிருந்தார்.
“பஸ் வருது” என்றார் நண்பர்.
“புறப்படப் பத்து நிமிசம் ஆகும். கொஞ்சம் பொறு” என்று சொல்லிவிட்டு, சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த அந்தப் பள்ளி மாணவனை நெருங்கினேன். நண்பரும் இணைந்துகொண்டார்.
“பத்திரிகையில் உன் ஃபோட்டோ பார்த்த ஞாபகம். எஸ். எஸ். எல். சியில் ஸ்டேட் பஸ்ட் வந்தாய்தானே?” என்றேன் அந்த இளைஞனிடம்.
சற்றே திடுக்கிட்ட அவன், “இல்லீங்களே” என்றான்.
“இப்போ பிளஸ் டூ படிக்கிறியா?”
“பிளஸ் ஒன்னுங்க.”
“இப்பவே ஐ.ஐ.டிக்குப் பிரிப்பேர் பண்ணலாமே. பண்றியா.”
“இல்லீங்க.”
“டாக்டரா, எஞ்சினீயரா, கலெக்டரா உன் எதிர்காலக் கனவு என்ன?”
“அது வந்து.....வந்து.....” -வார்த்தைகளை மென்று விழுங்கினான் மாணவன்.
“பார்த்தா ரொம்பப் புத்திசாலியாத் தெரியரே. பெரிய ஆளா வருவே. நல்லாப் படி...” -சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “ஸ்கூலுக்கு நேரம் ஆச்சுங்க” என்று நழுவினான் அவன். நாங்களும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம்.
பேருந்து புறப்பட்டபோது நண்பர் கேட்டார்: “தெரிஞ்ச பையனா?”
“ஊஹூம்.”
“என்னவெல்லாமோ சொல்லி அவனை உசுப்பேத்தினியே?”
“எல்லாம் அவனுடைய நன்மைக்காகத்தான். தினமும் கையில் புத்தகக் கட்டோட இந்த நேரத்தில் அவனைப் பார்ப்பேன். நல்லாப் படிக்க வேண்டிய இந்த வயசில் அநியாயத்துக்குப் பொண்ணுகளை சைட் அடிச்சிட்டு நிற்பான். தன்னோட எதிர்காலத்தைப் பத்திக் கொஞ்சமாவது யோசிக்க வெச்சா இந்தக் கெட்ட பழக்கத்தை விட்டுடுவான்கிறது என் நம்பிக்கை. என்னவோ என்னால் முடிஞ்ச ஒரு நல்ல காரியம்” என்றேன்.
“நல்ல மனசுப்பா உனக்கு.” -என் முதுகைத் தட்டிக் கொடுத்தார் நண்பர்.
=====================================================================
“நான் சொர்க்கம் போறேன்...வழி விடுங்க” என்னும் பதிவில்[இன்று பிற்பகலில் 12.41 மணிக்கு வெளியிடப்பட்டது] நேர்ந்த பிழை சரிசெய்யப்பட்டது.